Year Ender

2021-ல் இந்திய கிரிக்கெட்: வரலாற்று வெற்றிகளும் ஓயாத சர்ச்சைகளும்

எழில்

    
இந்திய கிரிக்கெட் அணிக்கு 2021-ம் வருடம் பல வெற்றிகளையும் பல மறக்க முடியாத தருணங்களையும் தந்தது.

2021-ம் வருடத்தை ஒரு கிரிக்கெட் ரசிகனால் எப்படி மறக்க முடியும்? பிரிஸ்பேன், லார்ட்ஸ் வெற்றிகளைத் தந்ததும் இந்த வருடம் தான். விராட் கோலியின் கேப்டன் பதவி தொடர்பான சர்ச்சை எழுந்ததும் இந்த வருடம் தான். இந்த வருடமும் ஐசிசி கோப்பையை இந்திய அணி வெல்லாவிட்டாலும் ஒரு சிறந்த டெஸ்ட் அணியாக அறியப்பட்டுள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் கிடைத்த வெற்றிகள் அதற்கு முக்கியக் காரணம். புதிய ஒருநாள், டி20 கேப்டன், புதிய பயிற்சியாளர், புதிய வீரர்கள், புதிய சவால்கள் என 2022-ம் வருடம் இந்திய கிரிக்கெட்டுக்குப் பல புதிய அனுபவங்களைத் தரப் போகிறது.

ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற இந்தியா: வரலாற்று வெற்றி

இந்த வருடத் தொடக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் இரு டெஸ்டுகள் 2020 டிசம்பர் இறுதியிலும் கடைசி இரு டெஸ்டுகள் ஜனவரியிலும் நடைபெற்றன. 

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடியது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு வந்து விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதால் இந்தமுறை பழிக்குப் பழி வாங்கத் துடித்துக்கொண்டிருந்தது ஆஸ்திரேலிய அணி. 

இன்னொருமுறை ஆஸி. மண்ணில் மகுடம் சூடியது இந்திய அணி. 2020-21 டெஸ்ட் தொடரை 2-1 என வென்று ஆச்சர்யப்படுத்தியது. 

பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோற்றது. எனினும் மீதமுள்ள 3 டெஸ்டுகளில் 2-ல் வெற்றி பெற்று ஒரு டெஸ்டைப் போராடி டிரா செய்து நம்பமுடியாத வகையில் டெஸ்ட் தொடரை வென்றது. 

முதல் டெஸ்டில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது ஆஸ்திரேலிய அணி. குழந்தை பிறக்கும்போது மனைவிக்கு உதவியாக இருக்கவேண்டும் என்பதற்காக இந்தியாவுக்குத் திரும்பினார் விராட் கோலி. ரஹானே தலையில் பெரிய சுமை. 

மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் மீண்டு வந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. முதல் டெஸ்டில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் இந்த அணியை நம்பவே முடியாது என கிரிக்கெட் உலகம் ஆச்சர்யமாகப் பார்த்தது.

புதிய வருடத்தில் சிட்னியில் நடைபெற்ற டெஸ்டை போராடி டிரா செய்தது. பிரிஸ்பேனில் நடைபெற்ற கடைசி டெஸ்டை இந்திய அணி  3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

கடைசி டெஸ்டை இந்திய அணி வெற்றி பெற 328 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஷுப்மன் கில், புஜாரா, ரிஷப் பந்த் ஆகியோர் அமர்க்களமாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்கள். ரிஷப் பந்த் நம்பமுடியாத விதத்தில் இலக்கை விரட்டி 89 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் ரஹானே தலைமையிலான இந்திய அணி 2-1 என டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது. 

பிரிஸ்பேன் டெஸ்டில் இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, அஸ்வின், விஹாரி, ஜடேஜா ஆகியோா் காயம் காரணமாக விளையாடவில்லை. ஷா்துல் தாக்குா், டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தா், மயங்க் அகா்வால் ஆகியோா் களமிறங்கினார்கள். தமிழக வீரா்களான டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தா் ஆகியோருக்கு அது அறிமுகப் போட்டியாகும். இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 20 வீரர்களைப் பயன்படுத்தியது. வெளிநாட்டுத் தொடரில் வேறு எந்த அணியும் இத்தனை வீரர்களைப் பயன்படுத்தியதில்லை. இந்த டெஸ்ட் தொடரில் புஜாரா, ரஹானே என இரு இந்திய வீரர்கள் மட்டுமே நான்கு டெஸ்டுகளிலும் விளையாடினார்கள். பிரிஸ்பேன் டெஸ்டில் சிராஜ், சைனி, ஷர்துல் தாக்குர், நடராஜன், வாஷிங்டன் என மொத்தமே 4 டெஸ்டுகள் அனுபவம் கொண்ட பந்துவீச்சுப் படையுடன் களமிறங்கி வெற்றி பெற்று சாதித்தது இந்திய அணி. 

பிரிஸ்பேனில் ஆஸ்திரேலிய அணி கடைசியாக 1988-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராகத் தோற்றது. அதன்பிறகு பிரிஸ்பேனில் விளையாடிய 31 டெஸ்டுகளிலும் ஆஸ்திரேலிய அணி தோற்றதில்லை. அதேபோல இந்திய அணி இதற்கு முன்பு, பிரிஸ்பேனில் 6 டெஸ்டுகளில் விளையாடி ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை. 5 டெஸ்டில் தோல்வியடைந்தது. 

ஆஸ்திரேலிய அணியின் கோட்டையாக இருந்த பிரிஸ்பேனில் 32 வருடங்களாக தோல்வியைச் சந்திக்காத பிரிஸ்பேன் ஆடுகளத்தில், பரபரப்பான முறையில் கடினமான இலக்கை விரட்டி டெஸ்டை வென்றதோடு டெஸ்ட் தொடரையும் 2-1 எனக் கைப்பற்றியது இந்திய அணி. இந்த டெஸ்ட் தொடரை இந்திய ரசிகர்களால் மறக்க முடியுமா?

இந்தியாவுக்கு வந்த இங்கிலாந்து: சென்னை டெஸ்டுகளும் அசத்திய அஸ்வினும்! 

ஆஸ்திரேலியத் தொடர் ஜனவரி 19 அன்று நிறைவுபெற்றது. இங்கிலாந்து தொடர் பிப்ரவரி 5 அன்று தொடங்கியது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக 4 டெஸ்டுகளில் தலா 2 டெஸ்டுகள் சென்னைக்கும் ஆமதாபாத்துக்கும் ஒதுக்கப்பட்டன. மேலும் 5 டி20 ஆட்டங்கள் ஆமதாபாத்திலும் 3 ஒருநாள் ஆட்டங்கள் புணேவிலும் நடைபெற்றன.

இந்திய அணி குறைந்தது 2 வெற்றிகளுடன் டெஸ்ட் தொடரை வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடும். இங்கிலாந்து 3-0, 3-1 அல்லது 4-0 என டெஸ்ட் தொடரை வென்றால் அந்த அணி இறுதிச்சுற்றில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடும் என்கிற நிலை இருந்தது. இந்தியாவும் இங்கிலாந்தும் அதுபோல வெற்றி பெறாவிட்டால் அல்லது தொடர் டிரா ஆனால் ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும் என்கிற நிலைமை இருந்தது. இதனால் டெஸ்ட் தொடரை வெல்ல இரு அணிகளும் முனைப்புடன் விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் யாரும் எதிர்பாராத விதத்தில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஜோ ரூட் இரட்டைச் சதமெடுத்தார். இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 178 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணிக்கு 420 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்திய அணி 192 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து டெஸ்டில் தோற்றது. 

இதன்பிறகு தான் அக்‌ஷர் படேல் என்கிற திறமையான பந்துவீச்சாளரை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகம் செய்தது இந்திய அணி. அக்‌ஷர் படேல், அறிமுக டெஸ்டிலேயே 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 8 விக்கெட்டுகளுடன் சதமும் அடித்து அசத்தினார் அஸ்வின். 2-வது டெஸ்டை இந்திய அணி, 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரைச் சமன் செய்தது. சொந்த மண்ணில் ஆட்ட நாயகன் விருதும் பெற்றார் அஸ்வின். 

ஆமதாபாத் ஆடுகளத்தில் மேலும் தடுமாறியது இங்கிலாந்து அணி. 3-வது டெஸ்டை 10 விக்கெட் வித்தியாசத்திலும் 4-வது டெஸ்டை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்திலும் வென்று டெஸ்ட் தொடரை 3-1 எனக் கைப்பற்றியது இந்திய அணி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கும் தகுதி பெற்றது. டெஸ்ட் தொடரில் 32 விக்கெட்டுகளும் ஒரு சதத்துடன் 189 ரன்களும் எடுத்தார் அஸ்வின். தொடர் நாயகன் விருதும் அவருக்கே கிடைத்தது. 6 இன்னிங்ஸில் 27 விக்கெட்டுகளை எடுத்து கிரிக்கெட் உலகின் கவனத்தை முதல் தொடரிலேயே ஈர்த்தார் அக்‌ஷர் படேல்.

இங்கிலாந்து அணி வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சாம்பியன்  என்பதால் ஒருநாள், டி20 தொடர்களின் இந்திய அணிக்குச் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

டி20 தொடரை 3-2 என வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என வென்றது. கடைசி ஒருநாள் ஆட்டத்தில் கடைசி ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 14 ரன்கள் தேவைப்பட்டன. ஆனால் கடைசி ஓவரில் 1 விக்கெட்டுடன் 6 ரன்கள் மட்டும் கொடுத்து இந்திய அணிக்கு வெற்றியை வழங்கினார் நம்ம ஊர் நடராஜன். 

இந்தியச் சுற்றுப்பயணத்தை சென்னை டெஸ்ட் வெற்றியுடன் ஆரம்பித்த இங்கிலாந்து அணி மூன்று தொடர்களிலும் தோற்று நாடு திரும்பியது. 

ஐபிஎல்: மீண்டும் சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் 

கரோனா சூழல் காரணமாக 2020 ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை, மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற்றன. அடுத்ததாக ஆமதாபாத், தில்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன.

கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணி வீரா்களான வருண் சக்கரவா்த்தி, சந்தீப் வாரியர், சிஎஸ்கே பந்துவீச்சுப் பயிற்சியாளர் எல். பாலாஜி, பேருந்துப் பராமரிப்பாளர் ஆகியோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார்கள். இதனால் இரு அணி வீரர்களும் விடுதி அறையில் தனிமைப்படுத்தப்பட்டார்கள். 

கரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகியதால் ஐபிஎல் போட்டியைத் தொடர்ந்து நடத்துவது குறித்த கேள்விகளும் எழுந்தன. இதையடுத்து ஐபிஎல் 2021 போட்டி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்தது. 52 நாள்களுக்கு நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் போட்டியில் 60 ஆட்டங்கள் இடம்பெற இருந்தன. ஆனால் 24 நாள்களில் 29 ஆட்டங்கள் மட்டுமே இந்தியாவில் நடைபெற்றன.

இதன்பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2021 போட்டியின் 2-ம் பாகம் நடைபெற்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது. 

ஐபிஎல் இறுதிச்சுற்றில் கொல்கத்தாவை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. டு பிளெஸ்சிஸ் 86 ரன்கள் குவித்து கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். பிறகு விளையாடிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. 27 ரன்கள் வித்தியாசத்தில் இறுதிச்சுற்றை வென்ற சிஎஸ்கே அணி, 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.

2010, 2011, 2018, 2021 என மூன்று தசாப்தங்களில் கோப்பையை வென்ற ஒரே அணி என்கிற பெருமையும் சிஎஸ்கேவுக்குக் கிடைத்தது. ஐபிஎல் கோப்பைகளை ரோஹித் சர்மா 5 முறையும் தோனி 4 முறையும் வென்றுள்ளார்கள். மேலும் அதிக வயதில் (40 வருடங்கள், 100 நாள்கள்) ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன் - தோனி. 

ஐபிஎல் 2021 போட்டியில் இறுதிச்சுற்று ஆட்ட நாயகன் விருது டு பிளெஸ்சிஸுக்கும் (சிஎஸ்கே) மதிப்புமிக்க வீரர் (போட்டி நாயகன்) விருது ஹர்ஷல் படேலுக்கும் (ஆர்சிபி) கிடைத்தன. 

இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று

நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முதல் நாடாகத் தகுதி பெற்றது. இதன்பிறகு இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி தகுதி பெற்றது. 

2003-க்குப் பிறகு கடந்த 18 வருடங்களாக ஐசிசி போட்டியில் நியூசிலாந்து அணியைத் தோற்கடிக்க முடியாமல் திணறி வருகிறது இந்திய அணி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலாவது இந்த நிலை மாறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆசை நிறைவேறவில்லை. இங்கிலாந்து செளதாம்ப்டனில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. டெஸ்ட் கிரிக்கெட்டின் 144 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக நடத்தப்பட்ட இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டத்தை வென்று புதிய வரலாறு படைத்தது நியூசிலாந்து.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற பெருமையை இந்தியாவின் அஸ்வின் பெற்றார். 14 ஆட்டங்களில் 71 விக்கெட்டுகளை எடுத்தார். 70 விக்கெட்டுகள் எடுத்த ஆஸி. வீரர் கம்மின்ஸுக்கு 2-ம் இடம் கிடைத்தது. 

இலங்கையில் இந்தியா: புதிய கேப்டன், புதிய பயிற்சியாளர்

இலங்கைக்குச் சென்று ஒருநாள், டி20 தொடர்களில் இந்திய அணி விளையாடியது. ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 எனவும் டி20 தொடரை இலங்கை 2-1 எனவும் வென்றன.

விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற முன்னணி வீரர்கள் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்றதால் இலங்கைக்கு எதிரான தொடர்களுக்கு ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது. பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார்.  

இந்திய ஆல்ரவுண்டர் கிருனால் பாண்டியாவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு நெருக்கமான தொடா்பில் இருந்ததாக எட்டு வீரா்கள் தனிமைப்படுத்தப்பட்டார்கள். இதனால் கடைசி இரு டி20 ஆட்டங்களில் இந்திய அணியில் புதிய வீரா்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன. கடைசி இரு டி20 ஆட்டங்களிலும் 5 பேட்டர்கள், 6 பந்துவீச்சாளர்கள் என கையில் உள்ள வீரர்களைக் கொண்டு விளையாடியது இந்திய அணி. தனிமைப்படுத்தப்பட்ட வீரர்களில் சஹால், கே. கெளதம் ஆகிய இருவருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் கிருனால் பாண்டியா, சஹால், கெளதம் ஆகிய மூன்று வீரர்களும் இலங்கையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டார்கள். 

ஒரே நேரத்தில் இங்கிலாந்தில் ஓர் இந்திய அணியும் இலங்கையில் ஓர் இந்திய அணியும் விளையாட முடியும் என நிரூபிக்கப்பட்டது. இனிமேல் இதுபோன்ற தருணங்கள் அடிக்கடி கிடைக்கலாம். 

இங்கிலாந்து சென்ற இந்தியா: மறக்க முடியுமா லார்ட்ஸ் வெற்றியை?

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியது. 4 டெஸ்டுகளின் முடிவில் 2-1 என முன்னிலை பெற்று அசத்தியது. 

நாட்டிங்கம்மில் நடைபெற்ற முதல் டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம் மழையால் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டதை அடுத்து, ஆட்டம் டிரா ஆனது. இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறும் வாய்ப்பு இருந்த நிலையில், அது மழையால் பறிபோனது. இந்திய அணிக்கு 209 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 4-ம் நாள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்திருந்தது. எனினும் மழையால் வெற்றிக்கு அருகில் நெருங்க முடியாமல் போனது.

லார்ட்ஸில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி மேலும் சிறப்பாக விளையாடி அபார வெற்றி பெற்றது. 2001 கொல்கத்தா, சமீபத்திய பிரிஸ்பேன் டெஸ்ட் வெற்றிகளை ஞாபகப்படுத்திவிட்டது லார்ட்ஸ் டெஸ்ட். 

5-ம் நாளில் தொடக்கத்தில் இங்கிலாந்து அணியின் நிலைமை பிரமாதமான நிலையில் இருந்தது. அதிலும் ரிஷப் பந்த் ஆட்டமிழந்த பிறகு அந்த அணியின் ரசிகர்கள் துள்ளிக்குதித்தார்கள். ஆனால் ஷமியும் பும்ராவும் யாருமே எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தினார்கள். 9-வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். முதல் இன்னிங்ஸில் பும்ராவும் ஷமியும் டக் அவுட் ஆனார்கள். 2-வது இன்னிங்ஸில் தங்களுடைய அதிகபட்ச டெஸ்ட் ரன்களை (ஷமி - 59*, பும்ரா 29*) எடுத்தார்கள். இது எப்படிச் சாத்தியமானது? முதல் இன்னிங்ஸில் ஆண்டர்சனுக்கு பும்ரா பவுன்சர்கள் வீசியதை மனத்தில் வைத்துக்கொண்டு அதேபோல பவுன்சர் பந்துகளை வீசி பும்ராவுக்கு நெருக்கடி கொடுத்தார்கள் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள். பும்ராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். பும்ரா நடுவரிடம் முறையிட்டார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வுட் வீசிய பவுன்சர் பந்து பும்ராவின் ஹெல்மெட்டில் பட்டது. இந்தச் சூழலால் பேட்டிங்கில் அதிகக் கவனம் செலுத்தி முக்கியமான ரன்களைச் சேர்த்தார்கள் பும்ராவும் ஷமியும். விக்கெட்டுகள் எடுப்பதில் கவனம் செலுத்துவதை விட பும்ராவை வெறுப்பேற்றுவதில் இங்கிலாந்து வீரர்கள் ஆர்வம் செலுத்தியதால் அதற்கான விளைவுகளைச் சந்தித்தார்கள்.

இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணிக்கு 272 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 60 ஓவர்களில் இந்திய அணி 10 விக்கெட்டுகளை எடுத்தாக வேண்டும். இலக்கு நிர்ணயித்தபிறகு இந்திய அணியின் பந்துவீச்சில் சீற்றம் தெரிந்தது. சரியான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தவண்ணம் இருந்தன. 51.5 ஓவர்களில் 120 ரன்களுக்குச் சுருண்டது இங்கிலாந்து. தேநீர் இடைவேளைக்குப் பிறகு இந்திய அணி இங்கிலாந்தின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது.

ஆட்ட நாயகனாக ராகுல் தேர்வானார். முதல் டெஸ்டில் 84, 26 என ரன்கள் எடுத்த கே.எல். ராகுல் இந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 129 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். இதனால் அவருடைய பெயர் ஹானர்ஸ் போர்டில் இடம்பெற்றது.  லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றிக்குப் பலரும் உழைத்துள்ளார்கள். ஓரிரு வீரர்களால் கிடைத்த வெற்றியல்ல இது. பல சந்தர்ப்பங்களில் ஆட்டம் கை நழுவி போனபோது ஒவ்வொரு வீரராகத் தங்கள் பங்களிப்பை அளித்தார்கள். இந்திய ரசிகர்களால் என்றென்று நினைவில் நிற்கும் டெஸ்டாக இது அமைந்தது.

ஆனால், 3-வது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் அதுவே தோல்விக்குப் பெரிய காரணம் ஆகிவிட்டது. 

லண்டன் ஓவலில் நடைபெற்ற 4-வது டெஸ்டை இந்திய அணி வென்று டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. முதல் இன்னிங்ஸின் முடிவில் இந்திய அணி 99 ரன்கள் பின்தங்கினாலும் 2-வது இன்னிங்ஸில் 148.2 ஓவர்களில் 466 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 127 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்துக்கு 368 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. முதல் விக்கெட்டுக்கு மட்டும் 100 ரன்கள் வரை எடுத்த இங்கிலாந்து அணி, 92.2 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கடைசி டெஸ்டை டிரா செய்தாலே போதும் டெஸ்ட் தொடரில் வெற்றி பெறலாம் என்கிற நிலைமை. 

5-வது டெஸ்ட், மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்தது. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டார்கள். அடுத்தக்கட்டமாக இந்திய அணியின் ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் மைதானத்தில் களமிறங்க இந்திய வீரர்கள் தயக்கம் காட்டினார்கள். இதையடுத்து மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்த 5-வது டெஸ்ட் ரத்தானது.

இந்திய அணி அடுத்த வருடம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ரத்தான 5-வது டெஸ்ட் ஜூலை 1, 2022 அன்று எக்பாஸ்டனில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரில் 2-1 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. 

டி20 உலகக் கோப்பை: முதல் கோணல் முற்றிலும் கோணல் 

டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது. டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு இது முதல் சாம்பியன் பட்டமாகும். இதற்கு முன் 2010-ல் இறுதிச்சுற்றில் தோல்வியடைந்தது. இறுதிச்சுற்று ஆட்ட நாயகன் விருதை மிட்செல் மார்ஷும் தொடர் நாயகன் விருதை டேவிட் வார்னரும் வென்றார்கள். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் ஆஸம் முதலிடம் பிடித்தார். அவர் 6 ஆட்டங்களில் 303 ரன்கள் எடுத்தார். 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் டாஸ் வென்ற பெரும்பாலான அணிகளும் பந்துவீச்சையே முதலில் தேர்வு செய்தன. 2-வதாகப் பந்துவீசிய பல அணிகள் பனிப்பொழிவுச் சிக்கலை எதிர்கொண்டு தோல்வியடைந்தன. இறுதிச்சுற்று ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச், ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். எதிர்பார்த்தது போலவே இலக்கை வெற்றிகரமாக விரட்டி டி20 உலக சாம்பியனது ஆனது ஆஸ்திரேலியா. 

இந்தியா என்ன செய்தது?

வேறென்ன, அரையிறுதிக்குக்கூடத் தகுதி பெறாமல் ரசிகர்களை ஏமாற்றியது. கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை எளிதாக வென்று காண்பித்தது பாகிஸ்தான். இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுக்க, விக்கெட் இழப்பின்றி இலக்கை அடைந்தது பாகிஸ்தான். உலகக் கோப்பைப் போட்டியில் முதல்முறையாக இந்தியாவை வென்ற தருணம் அது. நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் இந்திய அணி 20 ஓவர்களில் 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 14.3 ஓவர்களில் இலக்கை அடைந்தது. முதல் இரு ஆட்டங்களில் தோல்வியடைந்ததால் அப்போதே இந்திய அணியின் வெளியேற்றம் உறுதியானது. அடுத்த மூன்று ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்ற போதும் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியாமல் போனது. டி20, ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக விராட் கோலியின் பங்களிப்பு அத்துடன் முடிவடைந்தது.

இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைந்தது. இதையடுத்து இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார்.

இந்தியாவுக்கு வந்த நியூசிலாந்து: இந்திய அணியின் வெற்றிகளும் சாதனை படைத்த அஜாஸ் படேலும்

கோலியின் விலகலையடுத்து இந்திய டி20 அணியின் கேப்டன் ஆனார் ரோஹித் சர்மா. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் கோலி, ஜடேஜா, பும்ரா, ஷமி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டது. உலகக் கோப்பை அணியில் இடம்பெற்ற பாண்டியா, வருண் சக்ரவர்த்தி, ராகுல் சஹார், ஷர்துல் தாக்குர் ஆகியோர் இத்தொடரில் இடம்பெறவில்லை.

துபையில் டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய நியூசிலாந்து அணி, அடுத்த 3-வது நாளில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் பங்கேற்றது. டெஸ்ட் தொடருக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக டி20 தொடரிலிருந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகினார். இரு ஆட்டங்களுக்கு டிம் செளதியும் கடைசி ஆட்டத்துக்கு மிட்செல் சான்ட்னரும் கேப்டன்களாகச் செயல்பட்டார்கள்.

ரோஹித் சர்மா தலைமையில் விளையாடிய இந்திய அணி நியூசிலாந்தை 3-0 என முழுமையாக வென்றது. 

டெஸ்ட் தொடரில் கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான மும்பை டெஸ்டை வென்ற இந்திய அணி 1-0 என டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. 

இந்திய அணி கடந்த மூன்று வருடங்களில் நியூசிலாந்திடம் மட்டுமே டெஸ்ட் தொடரில் தோற்றுள்ளதால் இந்த டெஸ்ட் தொடரில் தன்னுடைய ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்தியது. 

மும்பை டெஸ்டில் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் ஒரு இன்னிங்ஸில் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் எடுத்து சாதனை படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் ஜிம் லேகர், அனில் கும்ப்ளேவுக்கு அடுத்ததாக 10 விக்கெட்டுகள் எடுத்த 3-வது பந்துவீச்சாளர் என்கிற பெருமையைப் பெற்றார். மும்பையில் பிறந்து வளர்ந்தவர் அஜாஸ் படேல். அவருடைய பெற்றோர், உறவினர்கள் மும்பையில் வசிக்கிறார்கள். தன் சொந்த மண்ணில் 10 விக்கெட்டுகள் எடுத்து சாதனை நிகழ்த்தினார். அஜாஸ் படேல், முதல் இரு நாள்களில் 10 விக்கெட்டுகளையும் எடுத்தது பெரிய சாதனை. ஜிம் லேகர், அனில் கும்ப்ளே ஆகிய இருவரும் கடைசி நாள்களில் தான் 10 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். வெளிநாட்டு டெஸ்டில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் எடுத்த முதல் பந்துவீச்சாளர், அஜாஸ் படேல். 

டெஸ்ட் தொடரில் 14 விக்கெட்டுகள் எடுத்த அஸ்வின், தொடர் நாயகனாகத் தேர்வானார். இது அஸ்வினின் 9-வது தொடர் நாயகன் விருதாகும். தொடர் நாயகன் விருதை அதிகமுறை வென்றவர்களின் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இன்னும் இருமுறை தொடர் நாயகன் விருதுகளை வென்றால் முதல் இடத்தில் உள்ள முத்தையா முரளிதரனின் சாதனையைச் சமன் செய்துவிடுவார். 2021-ல் அஸ்வின் மொத்தமாக 52 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த வருடம் 50 விக்கெட்டுகள் எடுத்த ஒரே வீரர் அவர்தான்.

மும்பை டெஸ்ட் வெற்றியின் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் நெ.1 இடத்துக்கு முன்னேறிய இந்திய அணி. 


*

2021 வருடக் கடைசியில் கோலி - கங்குலி இடையிலான மோதல் வெளிச்சத்துக்கு வந்தது.

டி20 உலகக் கோப்பைப் போட்டி தொடங்கு முன்பு, டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் விராட் கோலி. அடுத்ததாக, ஐபிஎல் 2021 போட்டிக்குப் பிறகு ஆர்சிபி அணி கேப்டன் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். டி20 கேப்டன் பதவியை உதறிய பிறகு கோலி கூறியதாவது: இந்திய டெஸ்ட், ஒருநாள் அணிகளை வழிநடத்த டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். இதுபற்றி ரவி சாஸ்திரி, ரோஹித் சர்மாவிடம் விவாதித்த பிறகே இம்முடிவை எடுத்தேன். கங்குலி, ஜெய் ஷா, தேர்வுக்குழுவினர் ஆகியோரிடமும் இதுபற்றி தகவல் தெரிவித்துள்ளேன். இந்திய அணிக்காகத் தொடர்ந்து என்னுடைய திறமையை வெளிப்படுத்துவேன் என்றார். டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகினாலும் ஒருநாள் அணிக்குத் தலைமை தாங்க தனது விருப்பத்தைத் தெரிவித்தார். ஆனால் டிசம்பர் மாதம் காட்சிகள் எல்லாம் மாறின. 

கோலியின் முடிவுக்குப் பிறகு இந்திய டி20 அணி கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். பிறகு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமித்து சர்ச்சையை ஏற்படுத்தியது பிசிசிஐ. இதனால் 2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியை வழிநடத்த வேண்டும் என்று ஆசைப்பட்ட கோலியின் கனவு தகர்ந்தது. 

டி20 கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகிய பிறகு பேட்டியளித்த கங்குலி, டி20 கேப்டன் பதவியில் நீடிக்குமாறு கோலியிடம் கூறினோம். ஆனால் அவர் அந்த முடிவை ஏற்கவில்லை என்றார். ஒருநாள், டி20 என இரண்டுக்கும் வெவ்வேறு கேப்டன்கள் இருப்பதைத் தேர்வுக்குழுவினர் விரும்பவில்லை. அதனால் தான் ஒருநாள், டி20 ஆகிய அணிகளின் கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமித்தோம் எனப் புதிய முடிவுக்கு விளக்கம் அளித்தார்.

தென்னாப்பிரிக்காவுக்குச் செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் விராட் கோலி கூறிய சில விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. டிசம்பர் 8 அன்று தேர்வுக்குழு கூடுவதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பு தேர்வுக்குழுவினர் என்னைத் தொடர்பு கொண்டார்கள். டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகியது முதல் எவ்வித தகவலும் எனக்கு அளிக்கப்படவில்லை. தெ.ஆ. தொடருக்கான டெஸ்ட் அணி பற்றி தேர்வுக்குழுத் தலைவர் என்னிடம் விவாதித்தார். இருவரும் அணி பற்றிய விவரங்களை ஏற்றுக்கொண்டோம். அந்த தொலைபேசி அழைப்பு முடியும் முன்பு, ஒருநாள் கேப்டன் பதவியில் நான் இல்லை என்பதை ஐந்து தேர்வுக்குழு உறுப்பினர்களும் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. அப்படியா நல்லது எனப் பதில் அளித்தேன். டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகியபோது அதை நன்கு வரவேற்றார்கள். முற்போக்கான முடிவு எனப் பாராட்டப்பட்டது. டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என என்னிடம் யாரும் சொல்லவில்லை என்றார் கோலி.

டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என கோலியிடம் கோரிக்கை வைத்ததாக பிசிசிஐ தலைவரும் முன்னாள் வீரருமான செளரவ் கங்குலி கூறிய நிலையில் விராட் கோலி இவ்வாறு கூறியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. கோலி, கங்குலி ஆகிய இருவரும் முரண்பாடாகப் பேசியிருப்பதால் அது இந்திய கிரிக்கெட்டைப் பாதிக்குமா? பார்க்கலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT