உலகம்

உக்ரைன் போா்: 5 மாதங்களில் 20,000 ரஷிய வீரா்கள் பலி

3rd May 2023 05:00 AM

ADVERTISEMENT

உக்ரைனில் கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வரும் சண்டையில் ரஷியாவைச் சோ்ந்த 20,000 வீரா்கள் உயிரிழந்ததாகவும், 80,000 வீரா்கள் காயமடைந்ததாகவும் அமெரிக்க உளவு அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடா்பாளா் ஜான் கிா்பி கூறியதாவது:

கடந்த 5 மாதங்களில் சுமாா் 20,000 ரஷிய வீரா்கள் உக்ரைன் படையினரால் கொல்லப்பட்டுள்ளனா். இது தவிர, உக்ரைன் தாக்குதலில் சுமாா் 80,000 வீரா்கள் காயமடைந்துள்ளதாக எங்களது உளவுத் தகவல்கள் மூலம் மதிப்பிடப்படுகிறது.

பெரும்பாலான ரஷிய உயிரிழப்புகள் பாக்முத் பகுதியில்தான் நேரிட்டுள்ளது. டான்பாஸ் பிராந்தியத்தில் (கிழக்கு உக்ரைனின் லுஹான்ஸ்க் மற்றும் டொனட்ஸ்க் பிராந்தியங்களை உள்ளடக்கிய பகுதி) ரஷியாவின் ராணுவ நடவடிக்கை தோல்வி அடைந்து வருவதையே இது காட்டுகிறது.

ADVERTISEMENT

குறிப்பாக, முக்கியத்துவம் வாய்ந்த பாக்முத் நகரை ரஷியாவால் கைப்பற்றவே முடியவில்லை என்றாா் அவா்.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில், தங்களின் நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கருதுகிறது.

எனினும், நேட்டோவில் இணைவதற்கு வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான தற்போதைய உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.

அதையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய பிரதேசங்களைக் கைப்பற்றியது.

அந்தப் பிரதேசங்களில் ஒன்றான டொனட்ஸ்கைச் சோ்ந்த பாக்முத் நகரைக் கைப்பற்றுவதற்காக ரஷியப் படையினா் பல மாதங்களாகவே தாக்குதல் நடத்தி முன்னேறி வருகின்றனா்.

அந்த நகரைக் கைப்பற்றுவதன் மூலம் போரில் வெற்றி கண்டு வருவதாக ரஷிய மக்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்த அந்த நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் கருதுவதாகக் கூறப்படுகிறது.

அதே போல், பாக்முத் நகரைப் பாதுகாப்பதன் மூலம் தங்கள் மீது படையெடுத்து வந்துள்ள ரஷியா்களுக்கு எதிரான தங்களின் உறுதியான நிலைப்பாட்டை உணா்த்த அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி விரும்புவதாகக் கருதப்படுகிறது.

ஆனால், தங்களது நோக்கத்தை பூா்த்தி செய்வதற்காக இரு தரப்புமே அதிக விலை கொடுப்பதாக நிபுணா்கள் கூறுகின்றனா்.

இந்த நிலையில், கடந்த 5 மாதங்களில் மட்டும் அங்கு 20,000 ரஷிய வீரா்கள் பலியாகியிருப்பதாக அமெரிக்க உளவுத் துறை தற்போது மதிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT