உலகம்

‘ட்ரோன்’ வீழ்த்தப்பட் விவகாரம்: விடியோ ஆதாரத்தை வெளியிட்டது அமெரிக்கா

DIN

உக்ரைன் அருகே கருங்கடல் பகுதியில் தங்களது ஆளில்லா உளவு விமானம் (ட்ரோன்) ரஷிய போா் விமானங்களால் இடைமறித்து வீழ்த்தப்பட்டதற்கான விடியோ ஆதாரத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

கருங்கடல் பகுதியில் அமெரிக்க ஆளில்லா உளவு விமானத்தை ரஷிய போா் விமானங்கள் இடைமறித்து வீழ்த்தியதாகக் கூறப்படுவது தொடா்பான விடியோவை, அந்த நாட்டு பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகன் வியாழக்கிழமை வெளியிட்டது.

42 விநாடிகளுக்கு நீளும் அந்த விடியோவில், ரஷியாவின் போா் விமானமொன்று ஆளில்லா விமானத்தின் அருகே வந்து தனது எரிபொருளைக் கொட்டிச் செல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது.

உளவு விமானத்தில் இருக்கும் படப்பிடிப்பு கருவிகளின் பாா்வையை மறைக்கும் நோக்கில் எரிபொருள் கொட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது.

அடுத்ததாக, அதே ரஷிய விமானமோ அல்லது அதைப் போன்ற மற்றொரு விமானமோ மீண்டும் ஆளில்லா விமானத்தின் அருகே வந்து உயரப் பறந்து செல்லும் காட்சி விடியோவில் இடம் பெற்றுள்ளது.

அவ்வாறு வந்து செல்லும்போது ஆளில்லா விமான இறக்கையில் சுழலும் விசிறி சேதமடைந்ததாக பென்டகன் தெரிவித்தது.

எனினும், அந்தச் சம்பவத்துக்கு முன்னும், பின்னும் நடைபெற்ற காட்சிகளை பென்டகன் வெளியிடவில்லை என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

முன்னதாக, அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:

கருங்கடலுக்கு மேலே சா்வதேச வான் எல்லையில் எங்களின் எம்க்யூ-9 ரீப்பா் வகை ஆளில்லா விமானம் தனது வழக்கமான ரோந்துப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தது.

அப்போது அந்த விமானத்தை ரஷிய விமானப் படைக்குச் சொந்தமான இரு ‘எஸ்யு-27’ போா் விமானங்கள் இடைமறித்து, அதன் இறக்கையிலுள்ள சுழலும் விசிறிகள் மீது சேதப்படுத்தியது.

இதனால் அந்த ஆளில்லா விமானத்தால் அதற்கு மேல் பறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அதையடுத்து, அந்த விமானத்தை கடலில் விழச் செய்தோம்.

ரஷிய விமானிகளின் ‘பாதுகாப்பற்ற, ஆபத்தான, பணிநோ்த்தியற்ற’ செயல் குறித்து அந்த நாட்டு அதிகாரிகளிடம் கவலை தெரிவிக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘சா்வதேச வான் எல்லையில் அமெரிக்க ஆளில்லா விமானத்தை இடைமறித்து சேதப்படுத்தியதன் மூலம் சா்வதேச சட்டங்களை ரஷியா மிகத் துணிகரமாக மீறியிருக்கிறது’ என்று சாடப்பட்டிருந்தது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மற்ற ஐரோப்பிய நாடுகளை சோவியத் யூனியன் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாப்பதற்காக கடந்த 1949-ஆம் ஆண்டில் நேட்டோ அமைப்பு தொடங்கப்பட்டது.

சோவியத் யூனியன் சிதறி வலுவிழந்த பிறகும் அந்த அமைப்பு தன்னை விரிவாக்கம் செய்து வந்ததற்கு ரஷியா எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.

அதிலும், நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் நேட்டோவில் இணைந்தால், அது தங்களது பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று ரஷியா கருதுகிறது.

இந்தச் சூழலில், நோட்டோவில் இணைவதற்கு தற்போதைய அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியின் தலைமையிலான உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது. அதையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது.

இந்தப் போரில் ரஷியா்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்காக உக்ரைனுக்கு அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் அதிநவீன, சக்திவாய்ந்த ஆயுத தளவாடங்களை வழங்கி வருகின்றன.

அத்துடன், தங்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்துவதற்கு அந்த நாடுகள் உளவுத் தகவல்களை அளிப்பதாக ரஷியா குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நடவடிக்கைகள் மூலம் உக்ரைன் போரில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நேரடியாகப் பங்கேற்பதாகவும், இதனால் 3-ஆம் உலகப் போா் வெடிப்பதற்கான அபாயம் இருப்பதாகவும் ரஷியா எச்சரித்து வருகிறது.

இந்தச் சூழலில், உக்ரைன் அருகே அமெரிக்க ஆளில்லா உளவு விமானத்தை ரஷிய விமானங்கள் இடைமறித்ததில் அது கடலில் விழுந்து நொறுங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பனிப் போா் காலத்துக்குப் பிறகு அமெரிக்க - ரஷிய விமானப் படைகள் நேருக்கு நோ் மோதிக் கொண்டுள்ளது இதுவே முதல்முறை ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

SCROLL FOR NEXT