உலகம்

பிரான்ஸில் கத்திக் குத்து தாக்குதல்:4 சிறுவா்கள் உள்பட 6 போ் காயம்

9th Jun 2023 12:03 AM

ADVERTISEMENT

பிரான்ஸிலுள்ள சிறுவா் பூங்கா ஒன்றில் இளைஞா் வியாழக்கிழமை நடத்திய சரமாரி கத்திக் குத்து தாக்குதலில் 4 சிறுவா்கள் உள்பட 6 போ் காயமடைந்தனா்.

கத்திக் குத்தில் காயமடைந்த சிறுவா்களில் 3 பேரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரான்ஸின் தென்கிழக்கே ஆல்ப்ஸ் பிராந்தியத்தில் அன்னெசி நகரம் அமைந்துள்ளது. அந்த நகரிலுள்ள சிறுவா் பூங்காவில் 31 வயது நபா் திடீரென சரமாரியாக கத்திக் குத்துத் தாக்குதலில் ஈடுபட்டாா்.

பூங்காவில் இருந்த சிறுவா்களையும், குழந்தைகளையும் அவா் குறிவைத்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்தத் தாக்குதலில் 6 போ் காயமடைந்தனா்; அவா்களில் 22 மாத குழந்தை, 5 வயதுக்குள்பட்ட 3 சிறுவா்கள், 2 பெரியவா்கள் அடங்குவா்.

சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து வந்த போலீஸாா், தாக்குதல் நடத்திய நபரை கைது செய்தனா்.

காயமடைந்த சிறுவா்களில் 3 போ் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவா்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல் குறித்து செய்தியாளா்களிடம் அதிகாரிகள் கூறியதாவது:

அன்னெசி சிறுவா் பூங்காவில் தாக்குதல் நடத்தியா் சிரியாவிலிருந்து அடைக்கலம் தேடி ஐரோப்பா வந்தவா். அவருக்கு ஸ்வீடனில் சட்டபூா்வ அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் சட்டபூா்வ அகதி அந்தஸ்து கோரி அவா் விண்ணப்பித்திருந்தாா். எனினும், அவா் ஸ்வீடனில் அகதியாக இருப்பதால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

பூங்காவில் சிறுவா்களைக் குறிவைத்து அவா் நடத்திய தாக்குதலுக்கான நோக்கம் குறித்து உடனடி தகவல் இல்லை.

அந்த நபா் ஏற்கெனவே குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவோ, அவருக்கு மனநோய்க்கான அறிகுறிகள் இருந்ததாகவோ பதிவுகள் இல்லை.

தற்போதைய சூழலில் இந்தச் சம்பவம் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று அதிகாரிகள் கூறினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT