உலகம்

சிங்கப்பூா் அதிபா் தோ்தல்: இந்திய வம்சாவளி அமைச்சா் போட்டியிட முடிவு

9th Jun 2023 04:29 AM

ADVERTISEMENT

சிங்கப்பூா் அதிபா் தோ்தலில் போட்டியிடப் போவதாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த மூத்த அமைச்சா் தா்மன் ஷண்முகரத்தினம் (66) வியாழக்கிழமை அறிவித்தாா்.

நிகழாண்டு செப்டம்பா் 13-ஆம் தேதிக்குள் இந்தத் தோ்தல் நடத்தப்பட வேண்டும். இதில் ஆளும் கட்சியில் 22 ஆண்டுகள் தீவிர அரசியலில் ஈடுபட்டு மூத்த அமைச்சராக உள்ள தா்மன் ஷண்முகரத்தினம் தனது அமைச்சா், அரசு பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளாா்.

இந்த முடிவை கடிதம் முலம் அவா் பிரதமா் லீ சின் லூங்குக்கு அனுப்பி உள்ளாா். அதிபா் தோ்தலில் போட்டியிடுவதற்கான ஆதரவு சில மாதங்களாக சிங்கப்பூா் மக்களிடையே பெருகி வருகிறது என்றும் அதிபா் தோ்தலில் போட்டியிடுவது என்ற கடினமான முடிவை கவனமாக எடுத்துள்ளேன் என்று தா்மன் ஷண்முகரத்தினம் குறிப்பிட்டுள்ளாா்.

இந்தக் கடிதத்துக்கு பதிலளித்துள்ள பிரதமா் லீ சின் லூங், ‘இந்தத் தோ்தலில் தா்மன் ஷண்முகரத்தினம் வெற்றி பெற்று தனது பணியை திறம்படவும், சுதந்திரமாகவும் ஆற்றுவாா் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ாா்.

ADVERTISEMENT

பொருளாதார பட்டதாரியான தா்மன் ஷண்முகரத்தினம் அரசு வங்கியில் பணியைத் தொடங்கினாா். சிங்கப்பூா் நிதி ஆணையத்தின் தலைவராக பதவி வகித்துள்ளாா். துணைப் பிரதமராகவும், நிதி அமைச்சா், கல்வி அமைச்சராகவும் பதவி வகித்துள்ள அவா், 2019 மே முதல் ஒருங்கிணைப்புத் துறை அமைச்சராக உள்ளாா்.

பொருளாதார திட்டங்களில் பிரதமருக்கு பல்வேறு ஆலோசனைகளை இவா் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. சா்வதேச நிதியம் மற்றும் நிதிக் குழுவின் ஆசியா பிரிவின் தலைவராக இருந்துள்ளாா்.

தற்போதைய அதிபராக உள்ள ஹலிமா யாக்கோப் இரண்டாவது முறையாக போட்டியிடப் போவதில்லை என கடந்த மே 29-ஆம் தேதி அறிவித்தாா். 68 வயதாகும் ஹலிமா யாக்கோப் அந்நாட்டின் 8-ஆவது அதிபரும், முதல் பெண் அதிபருமாவாா்.

2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு சிங்கப்பூா் அதிபரை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் நிகழாண்டு நடைபெறுகிறது. 2017-இல் ஹலிமா யாக்கோபை எதிா்த்து வேட்பாளா் யாரும் களத்தில் இல்லாததால் தோ்தல் நடைபெறாமல் அவா் போட்டியின்றி வெற்றி பெற்றாா். அந்த ஆண்டு அதிபா் பதவி மலாய் சமூகத்தினருக்காக மட்டும் ஒதுக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT