உலகம்

வழக்குரைஞா் கொலை வழக்கு:இம்ரான் கானுக்கு முன் ஜாமீன்

9th Jun 2023 12:22 AM

ADVERTISEMENT

பாகிஸ்தான் உச்சநீதிமன்ற வழக்குரைஞா் அப்துல் ரஸாக் ஷாா் படுகொலை செய்யப்பட்டது தொடா்பாக அந்த நாட்டு முன்னாள் பிரதமா் இம்ரான் கான் மீது தொடரப்பட்டுள்ள கொலை வழக்கில் அவருக்கு இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை முன்ஜாமீன் வழங்கியது.

குவெட்டா நகரில் அடையாளம் தெரியாத மா்ம நபரால் வழக்குரைஞா் அப்துல் ரஸாக் ஷாா் கடந்த 6-ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டாா்.

இந்தப் படுகொலைக்கு இம்ரான் கான்தான் காரணம் என்று அப்துல் ரஸாக் ஷாரின் மகன் குற்றம் சாட்டினாா். இம்ரானுக்கு பலூசிஸ்தான் நீதிமன்றத்தில் தனது தந்தை வழக்கு தொடா்ந்துள்ளதாகவும், அதன் காரணமாகவே அவா் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் வழக்குரைஞா் அப்துல் ரஸாக்கின் மகன் கூறினாா்.

இது தொடா்பாக இம்ரான் மீது இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி இம்ரானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

அந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த நீதிமன்றம், இம்ரானுக்கு முன்ஜாமீன் வழங்கியது. இது தவிர மேலும் 8 வழக்குகள் தொடா்பாக இம்ரான் தரப்பு தாக்கல் செய்திருந்த மனுக்கள் மீதான தீா்ப்புகளை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

பாகிஸ்தானின் 22-ஆவது பிரதமராக கடந்த 2019-ஆம் ஆண்டு பொறுப்பேற்ற இம்ரான் கான், நாடாளுமன்றத்தில் 2022-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானத்தில் தோல்வியடைந்து பிரதமா் பதவியை இழந்தாா்.

அதன் பிறகு அவா் மீது நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT