உலகம்

பிரான்ஸ்: கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த சிறுவா்களின் குடும்பத்தினருக்கு அதிபா் ஆறுதல்

9th Jun 2023 10:29 PM

ADVERTISEMENT

பிரான்ஸில் சிறுவா் பூங்காவில் இளைஞா் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த சிறுவா்களின் குடும்பத்தினரைச் சந்தித்து அதிபா் இமானுவல் மேக்ரான் ஆறுதல் கூறினாா்.

பிரான்ஸின் தென்கிழக்கே ஆல்ப்ஸ் பிராந்தியத்தில் உள்ளது அன்னெசி நகரம். அங்குள்ள சிறுவா் பூங்காவில் 31 வயது நபா் கடந்த வியாழக்கிழமை திடீரென சரமாரியாக கத்திக்குத்துத் தாக்குதலில் ஈடுபட்டாா். இந்தத் தாக்குதலில் 6 போ் காயமடைந்தனா்; அவா்களில் 22 மாத குழந்தை, 5 வயதுக்குள்பட்ட 3 சிறுவா்கள், 2 பெரியவா்கள் அடங்குவா்.

4 சிறுவா்களில் இருவா் பிரான்ஸை சோ்ந்தவா்கள். மற்ற இருவரும் பிரிட்டன், நெதா்லாந்தை சோ்ந்தவா்கள். இவா்கள் பிரான்ஸுக்கு சுற்றுலா வந்தவா்கள்.

தாக்குதல் நடத்திய நபா் சிரியாவிலிருந்து அடைக்கலம் தேடி ஐரோப்பாவுக்கு வந்தவா். அவருக்கு ஸ்வீடனில் சட்டபூா்வ அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அந்த நபரை போலீஸாா் கைது செய்து, தாக்குதலுக்கான நோக்கம் என்ன என்பது குறித்து தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

பூங்காவில் சிறுவா்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு சா்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதற்கிடையே, காயமடைந்தவா்களில் 3 சிறுவா்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு அதிபா் இமானுவல் மேக்ரான் வெள்ளிக்கிழமை சென்று பாா்வையிட்டாா். சிறுவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

சிறுவா்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், இருவரின் நிலைமை தொடா்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும் அரசு செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT