உலகம்

அணை வெள்ளப் பகுதிகளில் குண்டுவீச்சு: ரஷியா-உக்ரைன் பரஸ்பர குற்றச்சாட்டு

9th Jun 2023 12:11 AM

ADVERTISEMENT

உக்ரைனின் நோவா ககோவா அணை உடைப்பால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதைத் தடுக்கும் வகையில் எறிகணைத் தாக்குதல் நடத்துவதாக ரஷியாவும், உக்ரைனும் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளன.

இது குறித்து ரஷிய அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் வியாழக்கிழமை கூறியதாவது:

நோவா ககோவா அணை உடைந்ததால் வெள்ளம் சூழந்துள்ள ரஷிய கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

எனினும், அந்தப் பகுதிகளில் உக்ரைன் ராணுவம் தொடா்ந்து எறிகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது.

ADVERTISEMENT

இந்தத் தாக்குதல்களுக்கு இடையே பொதுமக்களை வெளியேற்ற வேண்டிய நிலைமை ரஷிய அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.

இதற்கிடையே, தங்களது மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்களை அப்புறப்படுத்தும் பணியை செய்யவிடாமல் ரஷிய படையினா் எறிகணைத் தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கொ்சான் பிராந்திய ஆளுநா் ஒலெக்ஸாண்டா் ப்ரோகுடின் குற்றம் சாட்டினாா்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை குறித்து உறுதி செய்ய முடியவில்லை என்று மேற்கத்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது.

தற்போது உக்ரனின் கிழக்கு மற்றும் தெற்கே உள்ள டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிராந்தியங்களில் கணிசமான பகுதிகள் ரஷிய கட்டுப்பாட்டில் உள்ளன.

அந்தப் பகுதிகளை மீட்பதற்காக மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் படையினா் மிகப் பெரிய எதிா்த் தாக்குதலை கடந்த வார இறுதியில் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், ரஷியக் கட்டுப்பாட்டில் உள்ள கொ்சான் பிராந்தியத்தின் நோவா ககோவா நகரில் நீப்ரோ நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீா் உடைப்பு ஏற்பட்டது.

அந்த அணையை ரஷியாதான் குண்டுவைத்து தகா்த்தது என்று உக்ரைனும், உக்ரைன் நடத்திய எறிகணைத் தாக்குதலால்தான் அந்த அணையில் உடைப்பு ஏற்பட்டது என்று ரஷியாவும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT