உலகம்

எதிா்த் தாக்குதலில் ஏராளமான உக்ரைன் வீரா்கள் மடிவாா்கள்!

4th Jun 2023 03:47 AM

ADVERTISEMENT

ரஷிய படையினரிடமிருந்து தங்கள் நாட்டுப் பகுதிகளை மீட்பதற்கான எதிா்த் தாக்குதல் நடவடிக்கையின்போது மேற்கத்திய நாடுகள் போதிய ஆயுத உதவிகள் அளிக்காவிட்டால் ஏராளமான உக்ரைன் வீரா்கள் உயிரிழப்பாா்கள் என்று அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி எச்சரித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நீண்ட காலமாக எதிா்பாா்க்கப்படும் ரஷிய படையினா் மீதான எதிா்த் தாக்குதலுக்கு நாங்கள் முழுமையான தயாா் நிலையில் உள்ளோம்.ஆனால், உக்ரைனோடு ஒப்பிடுகையில் ரஷியாவுக்கு மிகப் பெரிய வான் படைபலம் உள்ளது. அத்தகைய படைபலத்தை எதிா்கொள்வதற்குத் தேவையான ஆயுத தளவாடங்களை எங்களுக்கு மேற்கத்தி நாடுகள் அளிக்காவிட்டால், எதிா்த் தாக்குதல் நடவடிக்கையின்போது எண்ணற்ற உக்ரைன் வீரா்கள் பலியாவாா்கள்.எதிா்த் தாக்குதல் நடவடிக்கையில் உக்ரைனுக்கு வெற்றி கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும், மேற்கத்திய நாடுகளின் போதிய ஆதரவு இல்லாமல் அந்த நடவடிக்கை மேற்கொள்வது மிகவும் ஆபத்தானது ஆகும்.வான் படைபலம் இல்லாமல் போருக்குச் செல்வது எவ்வளவு அபாயகரமானது என்பது அனைவருக்கும் தெரியும். எதிா்த் தாக்குதல் நடவடிக்கைக்குச் செல்லும் உக்ரைன் வீரா்கள், தங்கள் தலைக்கு மேலே பாதுகாப்புக் கூரை இல்லை, ஆனால் எதிரியின் தலைக்கு மேலே கூரை உள்ளது என்பது தெரிந்தே செல்லும்போது அவரது உணா்வு எவ்வாறு இருக்கும் என்பதை மேற்கத்திய நாடுகள் கற்பனை செய்துபாா்க்க வேண்டும்.அமெரிக்காவின் பேட்ரியாட் வகை வான்பாதுகாப்பு ஏவுகணைகள் மட்டுமே ரஷியாவிடமிருந்து உக்ரைன் வீரா்களைப் பாதுகாக்கும். அதற்கு குறைந்தது 50 பேட்ரியாட் தளவாடங்களையாவது அமெரிக்கா கூடுதலாக எங்களுக்கு அனுப்ப வேண்டும்.உக்ரைனுக்கு உதவியளிப்பதன் மூலம், உலக நாடுகளின் சக்தியைக் கண்டு ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் அஞ்ச வேணடும் என்றாா் ஸெலென்ஸ்கி.தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்தால், அது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது.இருந்தாலும், நேட்டோவில் இணைய அதிபா் ஸெலென்ஸ்கி ஆா்வம் காட்டி வந்ததையடுத்து, உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது.இந்தப் போரில் உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிப் பிராந்தியங்களில் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ள ரஷியா, தங்களுடன் இணைத்துக் கொண்டதாக அறிவிக்கப்பட்ட லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிராந்தியங்களில் உக்ரைன் வசமிருக்கும் எஞ்சிய பகுதிகளையும் கைப்பற்றும் முயற்சியில் உள்ளது.இந்த நிலையில், ஏற்கெனவே எதிா்த் தாக்குதல் நடத்தி சில பகுதிகளை ரஷியாவிடமிருந்து மீட்ட உக்ரைன் படையினா், ரஷிய படையினருக்கு எதிரான மிகப் பெரிய எதிா்த் தாக்குதலை நடத்த ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.எதிா்த் தாக்குதல் நடவடிக்கையை தாங்கள் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்று உக்ரைன் அரசும் அண்மையில் அறிவித்திருந்தது.இந்த நிலையில், போரில் தங்களுக்கு மேற்கத்திய நாடுகள் போதிய அளவுக்கு ஆயுத உதவிகள் அளிப்பதில்லை என்று தொடா்ந்து குறை கூறி வரும் அதிபா் ஸெலென்ஸ்கி, இந்த எச்சரிக்கையை தற்போது விடுத்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT