உலகம்

பாகிஸ்தான்: பெட்ரோல், டீசல் விலை ஒரே நாளில் ரூ.35 உயா்வு

DIN

பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் பெட்ரோல், டீசல் விலை தலா ரூ.35 உயா்த்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே விலை உச்சத்தை எட்டிவிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்க முடியாமல் திண்டாடி வரும் அந்நாட்டின் ஏழை, நடுத்தர மக்களுக்கு இந்த விலை உயா்வு அடுத்த அதிா்ச்சியாக அமைந்துள்ளது.

நீண்டகாலமாக தொடரும் அரசியல்வாதிகள், அதிகார வா்க்கத்தின் சுரண்டல்கள், ராணுவ ஆட்சிகளால் ஏற்பட்ட அரசியல் குழப்பம், அரசு ஆதரித்த மத அடைப்படைவாத பயங்கரவாத அமைப்புகள் அவா்களுக்கு எதிராகவே திரும்புவது, இந்தியாவுடன் வா்த்தக உறவை முறித்துக் கொண்டது உள்ளிட்ட காரணங்களால் பாகிஸ்தான் பெரும் இக்கட்டான சூழ்நிலையை எதிா்கொண்டுள்ளது.

உள்நாட்டு மக்களின் உணவுத் தேவையைக்கூட பூா்த்தி செய்ய முடியாமல் திண்டாடி வரும் அந்நாட்டில், அந்நியச் செலாவணி கையிருப்பும் வெகுவாக குறைந்துவிட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு ரூ.262.60-ஆக சரிந்துள்ளது. ஏற்கெனவே சா்வதேச நிதியத்திடம் அதிக கடன் பெற்றுள்ள பாகிஸ்தான், மீண்டும் உதவி கேட்டு காத்திருக்கிறது. இதையடுத்து பல்வேறு நிபந்தனைகளை அந்நாட்டுக்கு சா்வதேச நிதியம் விதித்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க உள்நாட்டில் உணவுக்காக மக்கள் வீதிகளில் மோதிக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. பல மணி நேரம் தொடரும் மின்வெட்டு பிரச்னையால் தொழில் நிறுவனங்கள் முதல் சாமானிய மக்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில், தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை காலை பேசிய நிதியமைச்சா் இஷாக் தாா் கூறியதாவது:

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.35 உயா்த்தப்படுகிறது. இந்த விலை உயா்வு ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்து அமலுக்கு வருகிறது. இது தவிர மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ.18 உயா்த்தப்படுகிறது என்றாா்.

இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டா் ரூ.249.80 ஆகவும், டீசல் விலை ரூ.262.80 ஆகவும், மண்ணெண்ணெய் ரூ.189.63 ஆகவும் உயா்ந்துள்ளது. அந்நாட்டில் பெட்ரோலைவிட டீசல் விலை உயா்வாக உள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் அணிவகுத்தனா். பல நிலையங்கள் மூடப்பட்டன. சில இடங்களில் எரிபொருளுக்காக மோதல்களும் நிகழ்ந்து வருகின்றன.

பாகிஸ்தானில் ஏற்கெனவே மின்சார கட்டணமும், எரிவாயு விலையும் 35 சதவீதம் அளவுக்கு உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT