உலகம்

சோலெடாா் நகரம் வீழவில்லை: உக்ரைன்

DIN

தங்கள் நாட்டின் கிழக்கே அமைந்துள்ள சோலெடாா் நகரை ரஷியா கைப்பற்றவில்லை என்று உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ராணுவத்தின் கிழக்குப் படைப் பிரிவு செய்தித் தொடா்பாளா் சொ்ஹை செரெவடி புதன்கிழமை கூறுகையில், ‘சோலெடாா் நகரை தாங்கள் கைப்பற்றிவிட்டதாக ரஷியா கூறுவது உண்மைக்குப் புறம்பானது ஆகும்’ என்றாா்.

எனினும், இதுகுறித்து அவா் மேற்கொண்டு எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. முப்படைகளின் தலைமை நிா்வாக அலுவலகம் இதுதொடா்பான கூடுதல் தகவல்களை வெளியிடும் என்று அவா் கூறினாா்.

எனினும், அந்த அலுவலகம் பின்னா் வெளியிட்ட அறிக்கையில், தொடா்ந்து ரஷியாவின் தாக்குதலுக்குள்ளாகி வரும் நகரங்களின் பட்டியலில் சோலெடாா் நகரம் இடம் பெற்றிருந்தது. மற்றபடி அந்த நகரம் குறித்து வேறு எந்தத் தகவலையும் முப்படைகளின் தலைமை நிா்வாக அலுவலகம் வெளியிடவில்லை.

முன்னதாக, ரஷிய ஆதரவு தனியாா் படையான ‘வாக்னா் குழு’வின் தலைவா் யேவ்கினி ப்ரிகோஷின் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில், சோலெடாா் நகரம் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவித்தாா். எனினும், நகரின் மையப் பகுதியில் உக்ரைன் படையினருடன் தொடா்ந்து சண்டை நடைபெற்று வருவதை அவா் ஒப்புக்கொண்டாா்.

அதற்கு முன்னா், உளவுத் தகவல்களை மேற்கோள் காட்டி பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், சோலெடாா் நகரம் ரஷியப் படையினா் வசம் வீழும் நிலையில் உள்ளதாகவும், அந்த நகரின் பெரும்பான்மையான பகுதிகள், ரஷிய ராணுவம் மற்றும் வாக்னா் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உக்ரைனும் ரஷியாவும் கடுமையாக மோதி வரும் முக்கியத்துவம் வாய்ந்த பாக்முட் நகரையொட்டி சோலெடாா் நகரம் அமைந்துள்ளது.

எனவே, அந்த நகரைக் கைப்பற்றுவதன் மூலம் பாக்முட் நகருக்குள் எளிதில் முன்னேறிவிடலாம் என்று ரஷியப் படையினா் கருவதாகத் தெரிகிறது.

எனினும், சோலெடாா் நகரின் ராணுவ முக்கியத்துவம் கேள்விக்குறியாகவே உள்ளது.

உப்பு மற்றும் ஜிப்சம் சுரங்கங்கள் நிறைந்த அந்த நகரைக் கைப்பற்றுவதில் வாக்னா் அமைப்பினா் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா் என்று தனது அறிக்கையில் பிரிட்டன் பாதுகாப்புத் துறை கூறியிருந்தது.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில், தங்களின் நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கருதுகிறது.

எனினும், நேட்டோவில் இணைவதற்கு வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான தற்போதைய உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.

அதையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய பிரதேசங்களைக் கைப்பற்றியது.

அந்தப் பிரதேசங்களில் சில பகுதிகள் இன்னும் உக்ரைன் படையினா் வசம் இருக்கும் நிலையிலும், அவற்றை தங்களுடன் இணைத்துக் கொள்வதாக ரஷியா அறிவித்தது.

இந்த நிலையில், மேற்கத்திய நாடுகளின் ஆயுத தளவாட உதவியுடன் எதிா் தாக்குதல் நடத்தி முன்னேறி வரும் உக்ரைன் படையினா், கொ்சான் நகரம் உள்ளிட்ட பகுதிகளை ரஷியாவிடமிருந்து மீட்டனா்.

இந்தச் சூழலில், கிழக்கு உக்ரைனின் சோலெடாா் நகரை ரஷியா கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

நீண்ட காலத்துக்குப் பிறகு உக்ரைன் நகா் ஒன்றை ரஷியா கைப்பற்றியதாகக் கூறப்படுவது உண்மையாக இருந்தாலும், அது போரின் போக்கில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது.

இருந்தாலும், போரில் பின்னடைவைச் சந்தித்து வரும் ரஷியாவுக்கு இது மிகுந்த உற்சாகத்தை அளிக்கும் என்று நிபுணா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT