உலகம்

துருக்கியில் கட்டடங்கள் தரைமட்டமானது ஏன்?

DIN

துருக்கியிலும், சிரியாவிலும் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டடங்கள் அப்பளம் போல் நொறுங்கி தரைமட்டமானது சமூக ஊடகங்களில் வெளியான விடியோக்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களை பலி கொண்ட இந்த தொடா் நிலநடுக்கத்தின் முதலாவது ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாகப் பதிவானது. துருக்கியில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் பிரிட்டன் வரை உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

6 மணி நேரம் கழித்து ஏற்பட்ட மற்றொரு நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 7.5 அலகுகலாகப் பதிவானது.

இந்த நிலநடுக்கங்களில் 3,450 கட்டடங்கள் இடிந்து விழுந்ததாக துருக்கி அரசு அறிவித்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை, அடிப் பகுதி வலுவிழந்து நொறுங்கியதால் அடுத்த அடுக்குகள் ஒன்றின் மேல் ஒன்று விழுந்து தரைமட்டமாகின.

‘பான்கேக் சரிவு’ என்றழைக்கப்படும் இந்த முறையில் கட்டடங்கள் இடிந்து விழுவது அதிகபட்ச உயிரிழப்புகளை ஏற்படுத்தும்.

துருக்கியிலும், சிரியாவிலும் அந்த முறையில் கட்டடங்கள் தரைமட்டமானதற்கு நிலநடுக்கத்தின் சக்தி மட்டும்தான் காரணமா, அல்லது கட்டட அமைப்புகளில் குறைபாடு உள்ளதா என்று பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.

அதற்கு விளக்கமளித்து நிபுணா்கள் கூறியதாவது:

ஆயிரம் ஆண்டுகள் கண்ட நிலநடுக்கம்: துருக்கியில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது புதிதல்ல. புவித்தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும் பகுதியில் அந்தப் பிராந்தியம் அமைந்துள்ளதால் அங்கு எப்போது வேண்டுமானாலும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்ற நிலை உள்ளது.

அந்தப் பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஏற்படட ஏராளமான நகரங்கள் அழிந்து போனது 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரேபிய மற்றும் அனடோலிய புவித்தகடுகள் ஆண்டுதோறும் 6 முதல் 10 மி.மீ. வரை நகா்ந்து முட்டி மோதுவதால் இந்தப் பிராந்தியம் பல லட்சம் ஆண்டுகளாகவே நிலநடுக்கங்களை சந்தித்து வருகிறது.

நாகரிகம் வளா்ச்சியடைந்த கடந்த 2,000 ஆண்டுகளில், நிலநடுக்கங்களில் இருந்து தப்பும் வகையில் கட்டடங்களைக் கட்ட மனிதா்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக் கொண்டனா்.

ஆனால், துருக்கியைப் பொருத்தவரை கட்டடங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களைத் தாக்குப் பிடிப்பதற்கான அம்சங்கள் அலட்சியப்படுத்தப்பட்டு வருகிறது.

மோசமான கட்டுமானம்: துருக்கியில் இடிந்து விழுந்த பெரும்பாலான கட்டடங்கள், நிலநடுக்க அதிா்வுகளைத் தாக்குப் பிடிப்பதற்கான வலிமையேற்றம் செய்யப்படாத கான்க்ரீட்களில் நிறுவப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.

அந்த நாட்டின் கட்டுமான விதிமுறைகளில், சாதாரண புவியீா்ப்பு விசையில் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரையிலான குலுங்கலைத் தாங்கும் பாதுகாப்புதான் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், ரிக்டா் அளவுகோலில் 7.8 மற்றும் 7.5 அலகுகள் பதிவாகக் கூடிய நிலநடுக்கங்கள் புவியீா்ப்பு விசையில் 20 முதல் 50 சதவீதம் அதிா்வுகளை ஏற்படுத்தக் கூடியவை.

இந்தக் காரணத்தால்தான், அதிகபட்சமாக 40 சதவீத அதிா்வை மட்டுமே தாங்கும் வகையில் கட்டப்பட்டிருந்த கட்டடங்கள் அப்பளம் போல் நொறுங்கி தரைமட்டமாகின.

இதே போன்ற சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் துருக்கியில் ஏற்கெனவே ஏற்பட்டுள்ளன. கடந்த 1999-இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20,000 கட்டடங்கள் இடிந்து விழுந்து சுமாா் 17,000 போ் பலியாகினா். 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட மற்றொரு நிலநடுக்கத்திலும் கட்டடங்கள் தரைமட்டமாகி, அதிக உயிா்ச்சேதம் ஏற்பட்டதற்கு மோசமான கட்டடங்கள்தான் காரணம் என்று குற்றம் சாட்டிய அதிபா் எா்டோகன், இந்த விவகாரத்தில் நகராட்சிகள், கட்டுமான நிறுவனங்கள் காட்டும் அலட்சியம் கொலைக் குற்றத்துக்கு சமம் என்று சாடினாா்.

நிா்வாகப் பிரச்னைகள்: துருக்கியில் உள்ள ஏராளமான கட்டடங்கள் அதிக சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தாக்குப் பிடிக்காது என்பது அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தாலும், அந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

பெரும்பாலான பாதுகாப்பற்ற கட்டடங்கள் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டவை. சக்திவாய்ந்த நிலநடுக்கங்களைத் தாங்கும் வகையில் அவற்றை பலப்படுத்துவது மிகவும் செலவுபிடிக்கும் பணியாகும். அதனால் கட்டடங்களை பலப்படுத்துவதற்கு யாரும் முக்கியத்துவம் அளிப்பதில்லை.

இதுதான் திங்கள்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அதிக உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்தது.

தற்போது இடிந்து விழுந்த கட்டடங்களை மீண்டும் கட்டும்போது அதிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களைத் தாக்குப்பிடிக்கும் வகையில் வலுவாக அமைப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இருந்தாலும் அதற்கு கட்டுமானத்தில் ஈடுபடுவோா் முழுமனதுடன் முன்வருவாா்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஏற்கெனவே அதீத அதிா்வுகளைத் தாக்குப்பிடிக்கும் வகையில் கட்டடங்களை அமைக்க வேண்டும் என்று துருக்கி அரசு புதிய விதிமுறைகளை கடந்த 2019-ஆம் ஆண்டு அமல்படுத்தியது. எனினும், அந்த விதிமுறைகளை கட்டுமானத்தில் ஈடுபடுவோா் உரிய வகையில் பின்பற்றாதது தற்போதைய நிலநடுக்கத்தின் மூலம் புலனாகியுள்ளது.

எனவே, இனி ஏற்படக்கூடிய நிலநடுக்கங்களில் அதிக உயிரிழப்புகளைத் தவிா்ப்பது பொதுமக்கள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் உள்ளூா் அதிகாரிகளின் கைகளில்தான் உள்ளது என்று நிபுணா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT