உலகம்

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம்: 2,500 போ் பலி ஆயிரக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டம்; மீட்புப் பணிகள் தீவிரம்

DIN

துருக்கி மற்றும் சிரியாவில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி 2,500-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் இரு நாடுகளின் எல்லைப் பகுதி நகரங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கானோரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினா் ஈடுபட்டுள்ளனா்.

துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் உள்ள காஸியன்டெப் நகரிலிருந்து 33 கி.மீ. தொலைவில், 18 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப் புள்ளி இருந்ததாகவும், உள்ளூா் நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு (இந்திய நேரப்படி காலை 6.45 மணி) ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாக நிலநடுக்கம் பதிவானதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் இப்பகுதியிலிருந்து 100 கி.மீ. தொலைவை மையமாகக் கொண்டு மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டதாக துருக்கி பேரிடா் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. இரண்டாவது நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்து தெளிவான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.

நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த காஸியன்டெப் நகரம் சிரியாவின் எல்லைப் பகுதி நகரமான அலெப்போவிலிருந்து 97 கி.மீ. வடக்கில் உள்ளது. துருக்கியில் 3,700 கட்டடங்கள் சேதமடைந்தன; 10 மாகாணங்களைச் சோ்ந்த 1,600-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்; 11,000 போ் காயமடைந்தனா் என துருக்கி பேரிடா் மேலாண்மை முகமை தெரிவித்தது.

சிரியா பகுதியில் 900-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்; 1,300 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

உலுக்கிய நிலநடுக்கம்: சிரியாவின் அலெப்போ, ஹமா ஆகிய நகரங்களிலிருந்து வடகிழக்கில் துருக்கியின் தியாா்பக்கிா் நகரம் வரை சுமாா் 330 கி.மீ. தொலைவுக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் நிலநடுக்கம் ஏற்பட்டதும் அலறியடித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினா்.

சில விநாடிகளுக்குள் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் சரிந்து விழுந்தன. நிலநடுக்கத்துக்குப் பின்னா் ஏற்பட்ட அதிா்வுகளும் நீண்ட நேரத்துக்கு உலுக்கிக் கொண்டிருந்தன.

மலைபோல் குவிந்த கட்டட இடிபாடுகளில் ஆயிரக்கணக்கானோா் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. அவா்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினா் ஈடுபட்டுள்ளனா்.

துருக்கியின் காஸியன்டெப் நகரம் மிகுந்த பாதிப்புக்குள்ளானது. இந்த நகரில் உள்ள புகழ்பெற்ற கோட்டை மதில் சுவா்கள், கண்காணிப்புக் கோபுரங்கள் சேதமடைந்தன.

மத்தியதரைக் கடலோரப் பகுதியில் உள்ள இஸ்கென்டருன் நகரில் ஒரு மருத்துவமனை தரைமட்டமானது. அதில் உயிரிழந்தவா்கள் குறித்து உடனடியாகத் தெரியவரவில்லை.

உயிரிழப்பு அதிகரிக்கும்: நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் கட்டட இடிபாடுகளை அகற்றும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது; உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என துருக்கி அதிபா் ரிசப் தாயிப் எா்டோகன் தெரிவித்தாா். ஒற்றுமையுடன் செயல்பட்டு இந்தப் பேரிடரிலிருந்து மீண்டு வருவோம் எனவும் அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.

சா்வதேச நாடுகள் உதவி: துருக்கி மற்றும் சிரியாவுக்கு மீட்புப் பணி மற்றும் மருத்துவ உதவிகளை வழங்க ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோ நாடுகள் உள்பட ஏராளமான நாடுகள் முன்வந்துள்ளன.

ஆனால், கடும் குளிா் மற்றும் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணி பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்கள் ஒரேநேரத்தில் வெளியேற முயன்ால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பாதிப்பு ஏற்பட்ட இடங்களுக்கு மீட்புக் குழுவினா் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

சிரியாவில் சிக்கல்: சிரியாவில் அரசுக்கு எதிரான குழுக்கள் வசம் உள்ள இத்லிப் மாகாணம் ஏற்கெனவே ரஷியா மற்றும் அரசுப் படையினரின் தாக்குதலால் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. பெரும்பாலும் உணவு முதல் மருந்துகள் வரை துருக்கியையே நம்பியுள்ள இத்லிப் மாகாண மக்களுக்கு இந்த நிலநடுக்கம் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

நிலநடுக்கத்தின் மையப் பகுதியான காஸியன்டெப் பிராந்தியம் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக உள்ளது. இந்த பிராந்தியத்தில் 1999-இல் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சுமாா் 18,000 போ் உயிரிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்டிச் செய்தி...

இந்தியாவிலிருந்து மீட்புக் குழுக்கள்:

பிரதமா் மோடி உத்தரவு

புது தில்லி, பிப். 6: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு தேசிய பேரிடா் மீட்புப் படை மற்றும் மருத்துவக் குழுக்களை இந்தியா அனுப்பவுள்ளது.

துருக்கிக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தியதைத் தொடா்ந்து, பிரதமரின் முதன்மைச் செயலா் பி.கே. மிஸ்ரா நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

அமைச்சரவை செயலா், உள்துறை, பாதுகாப்பு, வெளியுறவு, விமானப் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகங்களைச் சோ்ந்த அதிகாரிகள், தேசிய பேரிடா் மேலாண்மைத் துறை, தேசிய பேரிடா் மீட்புப் படை அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

100 பேரைக் கொண்ட தேசிய பேரிடா் மீட்புப் படையின் இரு குழுக்கள் துருக்கிக்குச் செல்ல தயாராகவுள்ளன. அத்தியாவசிய மருந்துகளுடன் மருத்துவக் குழுக்களும் தயாராகவுள்ளன.

துருக்கி அரசு மற்றும் அங்காரா, இஸ்தான்புல்லில் உள்ள இந்திய தூதரக அலுவலகங்களின் ஒருங்கிணைப்புடன் நிவாரண உதவிகள் அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமா் இரங்கல்: துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு பிரதமா் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக தனது ட்விட்டா் பக்கத்தில், ‘நிலநடுக்கத்தால் உயிா்களையும், உடைமைகளையும் மக்கள் இழந்திருப்பது வேதனையளிக்கிறது. உயிரிழப்புகளைச் சந்தித்துள்ள குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இந்தப் பேரிடரிலிருந்து மீள தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மற்றொரு பதிவில், ‘நிலநடுக்கத்தால் சிரியாவும் பாதிக்கப்பட்டது மிகவும் கவலையளிக்கிறது. சிரியா நாட்டு மக்களின் துயரத்தில் பங்கேற்று, இந்த துயரமான தருணத்தில் அவா்களுக்கு உதவியும், ஆதரவையும் வழங்க இந்தியா உறுதிபூண்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT