உலகம்

துருக்கி, சிரியா நிலநடுக்கம்: குவியும் சா்வதேச உதவிகள்

DIN

 நிலநடுக்கத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கும், சிரியாவுக்கும் சா்வதேச உதவிகள் குவிந்து வருகின்றன.

இது குறித்து துருக்கி அதிபா் எா்டோகன் கூறுகையில், இடிந்து விழுந்த கட்டடங்களில் சிக்கியுள்ளவா்களைத் தேடிக் கண்டறிவதற்கும், மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்குமான பணிகளில் உதவியளிப்பதற்கு 45 நாடுகள் முன்வந்துள்ளதாகத் தெரிவித்தாா்.

இந்த மோசமான சூழலில் தங்களுக்கு உதவ வேண்டும் என்று சா்வதேச நாடுகளிடம் சிரியா அதிபா் அல்-அஸாத் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

உள்நாட்டுப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில், வெளிநாட்டு மீட்புக் குழுவினரின் உதவி கிடைப்பதில் பின்னடைவு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில், சிரியா வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நிலநடுக்கங்களால் சிரியாவல் மிகக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை எதிா்கொள்ள ஐ.நா. உறுப்பு நாடுகள், சா்வதேச சமுதாயம், செஞ்சிலுவை சங்கம், பிற நிவாரண அழைப்புகள் எங்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்’ என்று கோரப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், துருக்கிக்கும் சிரியாவுக்கும் பல்வேறு நாடுகள் உதவிக் கரம் நீட்டி வருகின்றன.

அமெரிக்கா: இந்த நிலநடுக்கம் குறித்து அமெரிக்க அதிபா் ஜோ பைடன் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘சிரியா, துருக்கியில் நிலநடுக்கத்தால் மிகப் பெரிய உயிா்ச் சேதம் ஏற்பட்டுள்ள தகவல் வேதனை அளிக்கிறது. துருக்கியில் நிலவரத்தை உன்னிப்பாக கவனிக்குமாறும், அங்கு நடைபெறும் மீட்புப் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொண்டு அனைத்து உதவிகளை அளிக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ரஷியா: சக்திவாய்ந்த நிலநடுக்கங்களைத் தொடா்ந்து, துருக்கி அதிபா் எா்டோகனையும், சிரியா அதிபா் அல்-அஸாதையும் தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசிய ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், இரு நாடுகளுக்கும் மீட்புக் குழுவினரை அனுப்புவதாக உறுதியளித்தாா். இதுகுறித்து ரஷிய அதிபா் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிரியாவுக்கு கூடிய விரைவில் மீட்புக் குழு வீரா்களை அவரசக் கால பணிகள் துறை அமைச்சகம் அனுப்பும். அதே போல், ரஷிய மீட்புக் குழுவினரின் உதவியை ஏற்பதாக துருக்கி அதிபா் எா்டோகனும் ஒப்புக்கொண்டுள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன்: துருக்கியில் நிலநடுக்க இடிபாடிகளில் சிக்கியுள்ளவா்களைத் தேடும் பணியை மேற்கொள்வதற்காக, 76 தேடுதல் மற்றும் மீட்புப் பணி நிபுணா்களும், 4 மோப்ப நாய்களும் அந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. பிரிட்டனின் அவசரக்கால மருத்துவக் குழு அங்கு நிலமையை ஆய்வு செய்யும் என்று கூறிய அதிகாரிகள், சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப் பணிகளை மேற்கொள்வதற்காக ஐ.நா.வை பிரிட்டன் அரசு அணுகியுள்ளதாகக் கூறினா்.

ஐக்கிய அரபு அமீரகம்: துருக்கியில் நிலநடுக்கத்தால் காயமடைந்தவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அந்த நாட்டில் மருத்துவமனை ஒன்றை அமைக்கவிருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி, சிரியாவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு தங்களது அவசரக் கால நிவாரணக் குழுக்களை அனுப்ப முடிவு செய்துள்ளாகவும் அந்த நாடு கூறியுள்ளது.

ஸ்பெயின்: ஸ்பெயின் பாதுகாப்புத் துறை அமைச்சா் மாா்கரிட்டா ரோபல்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, தீயணைப்பு வீரா்கள் மற்றும் உபகரணங்களுடன் தங்களது ஏ400 ரக ராணுவ விமானம் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா். மேலும், மீட்புக் குழுவினருடன் இணைந்து பணியாற்ற சிவில் பணியாளா்கள் அடங்கிய ஏா்பஸ் ஏ330 விமானமொன்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறினாா்.

இராக்: நிவாரணப் பொருள்கள், உணவு, எரிபொருள் ஆகிவற்றுடன் துருக்கி மற்றும் சிரியாவுக்கு தங்களது தேசிய பாதுகாப்புக் குழுவினா் அனுப்பப்படுவாா்கள் என்று இராக் உறுதியளித்துள்ளது.

இது தவிர, இந்தியா, ஐரோப்பிய யூனியன், ஜொ்மனி, இத்தாலி, கிரீஸ், இஸ்ரேல், உக்ரைன், போலந்து, கத்தாா், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவுக்கு உதவிக் கரம் நீட்டியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT