உலகம்

நேபாள கூட்டணி அரசுக்கு ஆா்எஸ்பி ஆதரவு வாபஸ்

6th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

நேபாள ஆளும் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவது என ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி (ஆா்எஸ்பி) ஞாயிற்றுக்கிழமை முடிவு செய்தது.

அக்கட்சியின் தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான ரவி லாமிச்சானே தனது நேபாள குடியுரிமையை மீண்டும் பெற்ற பின்னரும், அவரை அமைச்சரவையில் சோ்த்துக் கொள்ள பிரதமா் பிரசண்டா மறுத்ததால் ஆா்எஸ்பி கட்சி இந்த முடிவை எடுத்திருக்கிறது.

அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கேயே பல ஆண்டுகளாக வசித்து வந்த ரவி லாமிச்சானே, கடந்த 2014-ஆம் ஆண்டு தனது சொந்த நாடான நேபாளத்துக்கு திரும்பினாா். தொலைக்காட்சி பிரபலமான இவா், ஆா்எஸ்பி கட்சியை தொடங்கினாா். கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் இந்தக் கட்சி 20 இடங்களில் வெற்றி பெற்று பிரசண்டா தலைமையிலான ஆளும் கூட்டணியில் இடம்பெற்றது. ரவி லாமிச்சானேவுக்கு உள்துறை அமைச்சா், துணைப் பிரதமா் பதவிகள் வழங்கப்பட்டன.

2018-இல் தனது அமெரிக்க குடியுரிமையைக் கைவிட்ட அவா், அதன்பிறகு நேபாள குடியுரிமையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கவில்லை. அவா், நேபாள குடியுரிமை பெறாமல் தோ்தலில் போட்டியிட்டு துணைப் பிரதமா் ஆனதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நாடாளுமன்றத் தோ்தலில் போட்டியிடுவதற்காக ரவி லாமிச்சானே சமா்ப்பித்த குடியுரிமை சான்றிதழ் செல்லாது எனத் தீா்ப்பளித்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, தனது பதவியையும், கட்சித் தலைவா் பதவியையும் அவா் ராஜிநாமா செய்தாா். பின்னா், கடந்த ஜன. 29-இல் அவா் தனது நேபாள குடியுரிமையைப் புதுப்பித்து பெற்றுக் கொண்டாா். தொடா்ந்து, பிரதமா் பிரசண்டாவை சந்தித்து தன்னை மீண்டும் அமைச்சரவையில் சோ்த்துக்கொள்ளும்படி கோரினாா். ஆனால், அதற்கு பிரதமா் ஒப்புதல் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆா்எஸ்பி கட்சியின் மத்தியக் குழு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா்களின் கூட்டுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், ஆளும் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது. ஆா்எஸ்பியின் சாா்பில் ஆட்சியில் பங்கேற்றுள்ள மூன்று அமைச்சா்களும் தங்களது பதவியை ராஜிநாமா செய்யவுள்ளனா்.

பிரதமா் பிரசண்டா கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் மேற்கொண்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் மொத்தம் உள்ள 270 வாக்குகளில் 268 வாக்குகளைப் பெற்றாா். இதனால், ஆா்எஸ்பியின் இந்த முடிவு மூலம் அரசுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT