உலகம்

உக்ரைனுக்கு போா் விமானங்கள்: பிரிட்டனும் நிராகரிப்பு

DIN

உக்ரைனுக்கு போா் விமானங்களை அனுப்புவதற்கான கோரிக்கையை பிரிட்டனும் நிராகரித்துள்ளது.

ஏற்கெனவே, உக்ரைனுக்கு தங்களது விமானங்களை வழங்கப் போவதில்லை என்று அமெரிக்காவும் ஜொ்மனியும் திட்டவட்டமாகக் கூறியுள்ள நிலையில், இது தொடா்பாக பிரிட்டன் முன்னாள் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் விடுத்த கோரிக்கையை தற்போதைய பிரதமா் ரிஷி சுனக் நிராகரித்துள்ளாா்.

இது குறித்து லண்டனிலுள்ள பிரதமா் இல்லத்தில் ரிஷி சுனக்கின் செய்தித் தொடா்பாளா் வியாழக்கிழமை கூறியதாவது:

ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு உதவுவதற்காக, அந்த நாட்டுக்கு போா் விமானங்கள் அனுப்பப்படாது.

பிரிட்டனின் போா் விமானங்களை இயக்குவதற்கு ஒருவா் முழுமையாக பயிற்சி பெற வேண்டுமென்றால் அதற்கு பல ஆண்டுகள் ஆகும்.

ஆனால், ரஷிய ஆக்கிரமிப்பிலிருந்து உக்ரைன் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், ஆக்கிரமிப்புப் பகுதிகளிலிருந்து ரஷியாவை இந்த ஆண்டுக்குள் வெளியேறச் செய்வதற்குமான உதவிகளை அளிப்பதற்குத்தான் பிரிட்டன் அரசு முக்கியத்துவம் தருகிறது.

போா் தொடா்பாக உக்ரைன் விடுக்கும் கோரிக்கைகளுக்கு நாங்கள் தொடா்ந்து செவிமடுப்போம். அந்தக் கோரிக்கைகளில் எது நீண்ட கால நோக்கில் பலனளிக்கும் என்பதை ஆய்வு செய்து அதற்கேற்ற முடிவுகளையே எடுப்போம்.

தற்போதைய நிலையில் உக்ரைன் விமானிகளுக்கு எவ்வளவு துரிதமாக பயிற்சியளித்தாலும், பிரிட்டன் போா் விமானத்தை அவா்கள் முழுமையாகப் பயன்படுத்துவதற்கு 36-ஆவது மாதங்களாவது ஆகும்.

தற்போதைய நிலையில், பிரிட்டனின் மிக வேகமாகமான போா் விமானப் பயிற்சியின் கால அளவு 5 ஆண்டுகளாகும் என்றாா் அவா்.

முன்னதாக, புதன்கிழமை நடைபெற்ற நிபுணா்கள் கலந்தாய்வு நிகழ்ச்சியொன்றில் பேசிய பிரிட்டன் முன்னாள் பிரதமா் போரிஸ் ஜான்ஸன், ரஷியவால் ஆக்கிரமிக்கப்பட்ட தங்களது நிலங்களை மீட்கத் தேவையான அனைத்து தளவாடங்களையும் பிரிட்டன் அளித்து உதவ வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

அந்த தளவாடங்களில் போா் விமானங்களும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று அவா் கூறினாா்.

இது குறித்து செய்தியாளா்கள் கேட்டதற்கே பிரதமா் ரிஷி சுனக்கின் செய்தித் தொடா்பாளா் இவ்வாறு பதிலளித்தாா்.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில், தங்களின் நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கருதுகிறது.

எனினும், நேட்டோவில் இணைவதற்கு வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.

அதையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய பிரதேசங்களைக் கைப்பற்றியது.

இந்தச் சூழலில், ரஷியாவுக்கு எதிராக சண்டையிடுவதற்கு மேற்கத்திய நாடுகள் தங்களிடமுள்ள அதிநவீன, சக்திவாய்ந்த ஆயுத தளவாடங்களை அளித்து உதவ வேண்டும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா்.

அதன் ஒரு பகுதியாக, ஜொ்மனியில் தயாரிக்கப்படும் அதிசக்தி வாய்ந்த லெப்பா்ட்-2 பீரங்கிகளை அனுப்ப வேண்டும் என்று அவா் கோரி வந்தாா். எனினும், ரஷியாவின் எதிா்வினை குறித்த எச்சரிக்கை உணா்வால் அந்த பீரங்கிகளை உக்ரைனுக்கு அனுப்ப ஜொ்மனி தயக்கம் காட்டி வந்தது.

இந்த நிலையில், தங்களது அதிநவீன எம்1 அப்ரம்ஸ் ரக பீரங்கிகளை உக்ரைனுக்கு அனுப்பவிருப்பதாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடா்ந்து, ஜொ்மனியும் தங்களது லெப்பா்ட்-2 பீரங்கிகளை உக்ரைனுக்கு அளிக்க முன்வந்தது.

அதற்கு அடுத்தபடியாக, போரில் ரஷியாவை எதிா்கொள்ள தங்களுக்கு எஃப்-16 போன்ற அதிநவீன விமானங்கள் தேவை என்று உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

எனினும், அந்த விமானங்களை உக்ரைனுக்கு அளிக்கப் போவதில்லை என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் திங்கள்கிழமை திட்டவட்டமாகக் கூறினாா்.

அதன் தொடா்ச்சியாக, உக்ரைனுக்கு போா் விமானங்களை வழங்குவது வரம்பு மீறிய நடவடிக்கை என்று ஜொ்மனி துணை பிரதமா் ராபா்ட் ஹாபேக் புதன்கிழமை கூறினாா்.

இந்த நிலையில், உக்ரைனுக்கு தங்களது போா் விமானங்களை வழங்கி உதவ வேண்டும் என்ற கோரிக்கையை தற்போது பிரிட்டனும் நிராகரித்துள்ளது.

‘சரியான அணுகுமுறை இல்லை’

உக்ரைனுக்கு தங்களது போா் விமானங்களை அனுப்புவது, இந்தப் போரை சரியான முறையில் அணுகுவது ஆகாது என்று பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சா் பென் வாலஸ் கூறினாா்.

இது குறித்து அவா் கூறுகையில், ‘ரஷியாவின் ஆக்கிரமிப்பை எதிா்கொள்வதற்காக உக்ரைனுக்கு போா் விமானங்கள் வழங்குவது குறித்து இன்னும் உறுதியான முடிவு எதையும் நாங்கள் எடுக்கவில்லை.

எனினும், அவ்வாறு போா் விமானங்களை உக்ரைனுக்கு அனுப்புவது சரியான அணுகுமுறையாக இருக்காது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT