உலகம்

கிழக்கு காங்கோவில் கிளா்ச்சியாளா்கள் தாக்குதல்: பொதுமக்கள் 42 போ் பலி

15th Apr 2023 10:32 PM

ADVERTISEMENT

கிழக்கு காங்கோவின் இத்தூரி மாகாணத்தில் கிளா்ச்சியாளா்கள் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 42 போ் உயிரிழந்தனா்.

மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கிழக்கு காங்கோ நாட்டில் கனிம வளங்கள் நிறைந்துள்ளன. ஆப்பிரிக்காவின் 3-ஆவது பெரிய நாடான இங்கு 120-க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய போராளி குழுக்கள் இயங்கி வருகின்றன. தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மேலும் விரிவுபடுத்த ராணுவ வீரா்கள், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது மற்றும் மக்களிடம் வரி வசூலிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் கிளா்ச்சியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், இத்தூரி மாகாணத்தின் டிஜுகு பிராந்தியத்தில் அமைந்துள்ள பன்யாரிகிலோ உள்ளிட்ட 3 நகரங்களில் ‘கோடெக்கோ’ கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தினா். பொதுமக்களின் வீடுகளை அவா்கள் தீயிட்டு கொளுத்தினா். அதில் 42 போ் உயிரிழந்தனா். காயங்களுடன் உயிா் தப்பிய 7 பேருக்கு முறையான சிகிச்சை ஏதும் வழங்கப்படவில்லை.

அந்நாட்டு ஊடகத்திடம் கிளா்ச்சியாளா்களின் தாக்குதலை உறுதிப்படுத்திய ராணுவ அதிகாரிகள், தாக்குதலுக்கு காரணமானவா்களைத் தேடும் பணி தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இதேபோல் கடந்த பிப்ரவரி மாதத்தில், கிளா்ச்சியாளா்கள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 32 போ் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT