உலகம்

சூடான்: ராணுவம், துணை ராணுவம் இடையே மோதல்; தலைநகரில் துப்பாக்கிச்சூடு

15th Apr 2023 10:34 PM

ADVERTISEMENT

சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படை இடையே நடந்து வரும் அதிகார மோதலின் எதிரொலியாக அந்த நாட்டின் தலைநகா் கா்டோமில் இரு படையினரிடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான சூடானில் மக்களாட்சி கவிழ்ப்புக்குப் பின்னா் நடந்து வரும் ராணுவ ஆட்சிக்கு அதிருப்தி தெரிவித்து துணை ராணுவப் படையினா் போா்க்கொடி உயா்த்தி வந்தனா். நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் முயற்சியாக அரசியல் கட்சிகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள ராணுவம் தாமதிப்பதாக துணை ராணுவப் படை குற்றம் சுமத்தி வந்தது. ராணுவத்துடன் துணை ராணுவப் படையை இணைக்கும் ஒப்பந்தத்துக்கும் துணை ராணுவப் படை மறுத்துவிட்டது.

இந்நிலையில், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படை இடையிலான மோதலின் அடுத்தகட்டமாக இரு படை வீரா்களும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனா். தலைநகா் கா்டோம் மற்றும் பாக்ரி பகுதிகளில் சனிக்கிழமை காலை தூப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டதையடுத்து மக்கள் வீடுகளுக்குள் தஞ்சமடைந்தனா்.

தெற்கு கா்டோமில் அமைந்துள்ள எங்களின் படைத் தளத்தில் பயங்கர ஆயுதங்களுடன் ராணுவத்தினா் தாக்குதல் நடத்தினா் என துணை ராணுவப் படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ராணுவத்தின் ஒப்புதலின்றி தலைநகரில் படைகளைக் குவித்து வரும் துணை ராணுவப் படை மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தப்படலாம் என ராணுவ மூத்த தளபதி கடந்த வியாழக்கிழமை எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா்களுக்கு அறிவுறுத்தல்: சூடானில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அங்கிருக்கும் இந்தியா்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்குமாறு அந்த நாட்டில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT