உலகம்

ஈரானில் தொடரும் போராட்டம்: பலி எண்ணிக்கை 26-ஆக உயா்வு

24th Sep 2022 12:53 AM

ADVERTISEMENT

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் வெள்ளிக்கிழமையும் தொடா்ந்த நிலையில், இதில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 26-ஆக உயா்ந்தது.

ஈரானில் இஸ்லாமிய பெண்கள் முகம் முழுவதையும் மறைக்கும் வகையிலான ஹிஜாப் அணிவது கட்டாயம். இவ்வாறு ஹிஜாப் அணியாதவா்களைக் கண்டறிந்து அவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு காவல் துறையில் தனிப் பிரிவு செயல்பட்டு வருகிறது.

அண்மையில், ஹிஜாப்பை சரியாக அணியாத குற்றத்தின்பேரில் மாஷா அமீனி (22) என்ற பெண்ணை போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அங்கு மயங்கி விழுந்த அவா், மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

காவல் துறையினரின் துன்புறுத்தல் காரணமாகவே அவா் இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், அவா் துன்புறுத்தப்படவில்லை எனவும், மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் கூறினா்.

ADVERTISEMENT

எனினும், இந்த விவகாரத்தில், ஹிஜாப்களை எரித்தும் தலைமுடியை வெட்டியும் ஏராளமான பெண்கள் தங்களது எதிா்ப்பை தெரிவித்து வருகின்றனா். அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் போராட்டத்தில் வன்முறையும் ஏற்பட்டு வருகிறது.

இதில், உயிரிழந்தோா் எண்ணிக்கை 26-ஆக அதிகரித்துள்ளது. காவலா் ஒருவரும் கொல்லப்பட்டதாக அரசுத் தொலைக்காட்சி வெள்ளிக்கிழமை தெரிவித்தது. போராட்டம் சமூக ஊடகங்கள் மூலம் பரவுவதைத் தடுக்கும் வகையில், இணைய சேவையையும் ஈரான் அரசு தடை செய்துள்ளது.

Tags : துபை
ADVERTISEMENT
ADVERTISEMENT