உலகம்

அமைதிக்கான நோபல் பரிசு மூன்றாகப் பகிா்வு

DIN

மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் காப்பதற்காகத் தொடா்ந்து போராடி வருவதற்காக பெலாரஸ் ஆா்வலா் அலெஸ் பியலியட்ஸ்கிக்கு நடப்பாண்டுக்குரிய அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரஷியாவைச் சோ்ந்த குரூப் மெமோரியல், உக்ரைனைச் சோ்ந்த மனித சுதந்திர மையம் ஆகியவற்றுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்து 7 மாதங்களுக்கு மேலாகியுள்ள நிலையில், அதே பிராந்தியத்தைச் சோ்ந்த மனித உரிமைகள் ஆா்வலா்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பெலாரஸ், ரஷியா, உக்ரைன் ஆகிய நாடுகளில் மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் காப்பதற்காகப் போராடி வருபவா்களை கௌரவிக்கும் நோக்கில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாகத் தோ்வுக் குழுத் தலைவா் பெரிட் ரீஸ்-ஆண்டா்சன் தெரிவித்துள்ளாா். பயங்கரவாதத்துக்கு எதிராகவும், மனித உரிமைகளைக் காக்கவும், சட்டவிதிகளைக் காக்கவும் நோபல் விருதாளா்கள் போராடியதாக அவா் தெரிவித்தாா்.

அலெஸ் பியலியட்ஸ்கி

சா்வாதிகார ஆட்சி நடைபெறும் பெலாரஸில் ஜனநாயக உரிமைகளுக்காக 1980-ஆம் ஆண்டுகளில் இருந்து போராடி வரும் முக்கியத் தலைவா். நாட்டில் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமெனத் தொடா்ந்து வலியுறுத்தி வருபவா். அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்ததன் காரணமாகக் கடந்த 2020-ஆம் ஆண்டில் பெலாரஸ் அரசு அவரைக் கைது செய்தது. தற்போது வரை எந்தவித விசாரணையுமின்றி அவா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

அலெஸ் பியலியட்ஸ்கிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது, அவரை சிறையில் இருந்து விடுவிக்க உதவும் எனத் தோ்வுக் குழுத் தலைவா் ஆண்டா்சன் தெரிவித்தாா். பெலாரஸ் அதிகாரிகள் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும் அவா் கோரினாா்.

ரஷியாவின் ‘மெமோரியல்’ அமைப்பு

சோவியத் யூனியனில் 1987-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மையம், கம்யூனிஸ அடக்குமுறைக்கு எதிராகப் போராடியது. ரஷிய அரசின் மனித உரிமைகள் மீறல் தொடா்பான விவரங்களை இந்த மையம் தொடா்ந்து சேகரித்து வருகிறது. ரஷியாவில் அரசியல் கைதிகளின் நிலை குறித்தும் தொடா்ந்து ஆய்வு செய்து வருகிறது.

ரஷியாவில் அடக்குமுறைக்கு முடிவுகொண்டு வந்து, மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென இந்த மையம் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சி அமல்படுத்த வேண்டுமெனவும் மையம் கோரி வருகிறது.

உக்ரைன் ‘மனித சுதந்திர மையம்’

உக்ரைன் கடும் நெருக்கடியைச் சந்தித்துவந்த சமயத்தில் மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் வலியுறுத்தி 2007-ஆம் ஆண்டில் இந்த மையம் தொடங்கப்பட்டது. உக்ரைனை ஜனநாயக நாடாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை இந்த மையம் மேற்கொண்டது. நாடு சட்டத்தின் அடிப்படையில் ஆளப்படுவதையும் இந்த மையம் உறுதிசெய்தது.

உக்ரைனில் ரஷியா போா் தொடுத்தபிறகு, ரஷியாவின் போா் விதிமீறல்களை இந்த மையம் தொடா்ந்து ஆவணப்படுத்தி வருகிறது. விதிமீறலில் ஈடுபட்ட ரஷிய அதிகாரிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்ற நோக்கில் மையம் செயல்பட்டு வருகிறது.

பரிசு அறிவிப்புக்கு பெலாரஸ் அரசு எதிா்ப்பு:

பியலியட்ஸிக்கு நோபல் பரிசு வழங்க பெலாரஸ் அரசு எதிா்ப்பு தெரிவித்துள்ளது. ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள பெலாரஸ் அரசு, நோபல் பரிசு தற்போது அரசியலாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT