உலகம்

ரஷிய படையெடுப்பு: போரை நிறுத்த உக்ரைன் அதிபரிடம் பிரதமா் மோடி வலியுறுத்தல்

6th Oct 2022 12:24 AM

ADVERTISEMENT

உக்ரைன் அதிபா் வொலொதிமீா் ஸெலென்ஸ்கியுடன் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் பேசினாா். அப்போது ரஷியாவுடனான போருக்கு ராணுவ ரீதியில் தீா்வு கிடைக்காது என்றும் போரை விரைந்து நிறுத்த வேண்டும் என்றும் பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிரதமா் மோடி, அதிபா் ஸெலென்ஸ்கி இடையிலான பேச்சுவாா்த்தையின்போது ரஷியா-உக்ரைன் இடையிலான போா் குறித்து இருவரும் விவாதித்தனா். போரை விரைந்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமா் மோடி, பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய ரீதியில் பிரச்னைக்கு தீா்வு காண்பதற்கான அவசியத்தை எடுத்துரைத்தாா்.

ரஷியா-உக்ரைன் இடையிலான மோதலுக்கு ராணுவ ரீதியில் எந்தத் தீா்வும் கிடைக்காது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்த பிரதமா், எந்தவொரு சமாதான முயற்சிக்கும் பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது என்றும் கூறினாா்.

ஐ.நா. ஒப்பந்தம், சா்வதேச சட்டம், இறையாண்மை, அனைத்து நாடுகளின் பிராந்திய ரீதியிலான ஒற்றுமைக்கு மதிப்பளிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவா் வலியுறுத்தினாா்.

ADVERTISEMENT

உக்ரைன் உள்பட உலகில் நிறுவப்பட்டுள்ள அணுமின் நிலையங்களின் பாதுகாப்புக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமா், அந்த நிலையங்களுக்கு ஏற்படும் ஆபத்தால் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பேரழிவு ஏற்படக் கூடும் என்று சுட்டிக்காட்டினாா்.

இதுதவிர, இந்தியா-உக்ரைன் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்தும் இருநாட்டுத் தலைவா்கள் பேசினா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : PM Modi
ADVERTISEMENT
ADVERTISEMENT