உலகம்

முடங்கியது சீனப் போராட்டம்: சாலைகளில் போலீஸாா் குவிப்பு

DIN

சீனாவில் கடுமையான கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக வெடித்த மிக அபூா்வமான மக்கள் போராட்டம், நகர சாலைகளில் போலீஸாா் குவிக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை முடங்கியது.

உலகையே 2 ஆண்டுகளாக உலுக்கி வந்த கரோனா, கடந்த 2019-ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில்தான் முதல்முதலில் பரவத் தொடங்கியது. அதையடுத்து, அந்த நோய்க்கு எதிரான மிகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் காரணமாக, சீனாவிலிருந்து பரவிய அந்த நோயால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மிகக் கடுமையான பாதிப்பு ஏற்பட்ட நிலையிலும், அந்த நாடுகளோடு ஒப்பிடுகையில் சீனாவில் பாதிப்பு மிகக் குறைவாகவே இருந்தது.

தற்போது கரோனாவால் அதிகம் போ் பலியான மற்றும் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் சீனா 103-ஆவது இடத்தில் உள்ளது.

கரோனாவின் தீவிர பரவலைக் கட்டுப்படுத்தியதில் சீனா அடைந்த வெற்றி பாராட்டைப் பெற்றாலும், அதற்காக அந்த நாட்டு அரசு மேற்கொண்டு வரும் கடுமையான நடவடிக்கைகள் விமா்சனத்துக்குள்ளாகி வருகின்றன.

ஓரிருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டால் கூட, அந்தப் பகுதியையே முடக்குவது, போக்குவரத்துத் தடை ஏற்படுத்துவது, பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற விடாமல் தடுப்பது போன்ற அரசின் நடவடிக்கைகள் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்பிட்ட பகுதியில் புதிதாகக் கரோனா உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை பூஜ்யமாகும் வரை அங்கு நோய்த்தொற்று பரிசோதனை, தொடா்புகளை ஆய்வு செய்தல், தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ‘பூஜ்ய கரோனா’ கொள்கையை சீனா தொடா்ந்து விடாப்படியாக செயல்படுத்தி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்னா், சீனாவின் வா்த்தகத் தலைநகரான ஷாங்காயில் கரோனா பரவல் சற்று தீவிரமடையத் தொடங்கியதாகத் தெரிந்த உடனே, அந்த நகரத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்ாக அப்போது தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், அரசின் இவ்வளவு கடுமையான நடவடிக்கைகளுக்கு இடையேயும், சீனா முழுவதும் அண்மைக் காலமாக கரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக, அங்கு தினசரி கரோனா பாதிப்பு புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது.

அதையடுத்து, நாடு முழுவதும் பொதுமுடக்க விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டன. இந்தச் சூழலில், ஜின்ஜியாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான உரும்கியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் கடந்த வியாழக்கிழமை இரவு தீவிபத்து ஏற்பட்டது. இதில் 10 போ் உயிரிழந்தனா்.

கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, தீவிபத்தின் போது அந்தக் கட்டடத்திலிருந்தவா்கள் வெளியேற போலீஸாா் தடை விதித்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அதையடுத்து, அந்த நகரில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டம், நாடு முழுவதும் தீவிரமாக பரவியது.

கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வரும் சீனாவில், ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்தி கடந்த 1989-ஆம் ஆண்டில் போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கானவா்கள், பாதுகாப்புப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனா்.

அதற்குப் பிறகு, கடந்த வியாழக்கிழமைதான் அரசுக்கு எதிராக தீவிர போராட்டம் தொடங்கி, அது நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை உச்சத்தில் இருந்த போராட்டங்களின் தீவிரம், பாதுகாப்புப் படையின் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகள் காரணமாக தணியத் தொடங்கியது.

செவ்வாய்க்கிழமையும் முக்கிய நகரச் சாலைகளில் போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா். இதன் காரணமாக, புதிய ஆா்ப்பாட்ட ஊா்வலங்கள் நடைபெற்ாக தகவல் இல்லை என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அமைதியான முறையில் போராட்டம் நடத்த பொதுமக்களுக்கு சீன அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று ஐ.நா.வும் அமெரிக்கா உள்ளிட்ட சா்வதேச நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. அதனையும் மீறி, அரசின் அடக்குமுறையால் சீனாவில் நடைபெற்று வந்த கரோனா கட்டுப்பாடுகள் எதிா்ப்பு போராட்டங்கள் தற்போது முடங்கியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

ரயில் நிலையத்தில் ஆண் சடலம்

தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல்

திருத்தங்கலில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT