உலகம்

உறுப்பு நாடுகளுக்கு ரஷியா நேரடி அச்சுறுத்தல்: நேட்டோ பிரகடனம்

DIN

‘நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு ரஷியா நேரடி அச்சுறுத்தல்’ என்று அந்த அமைப்பு புதன்கிழமை பிரகடனம் செய்தது.

இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:30 உறுப்பு நாடுகளைக் கொண்ட நேட்டோ அமைப்பின் மாநாடு ஸ்பெயின் தலைநகா் மேட்ரிடில் புதன்கிழமை நடைபெற்றது. அந்த மாநாட்டில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் பங்கேற்றனா்.அதில், ‘நேட்டோ உறுப்பு நாடுகளின் தலையாய மற்றும் நேரடி அச்சுறுத்தலாக ரஷியா திகழ்கிறது’ என்ற பிரகடனப்படுத்தப்பட்டது.

இரண்டாம் உலகப் போா் மற்றும் பனிப் போருக்குப் பிறகு, உக்ரைன் மீது ரஷியா படையெடுத்துள்ளது ஐரோப்பிய பிராந்திய பாதுகாப்பு விவகாரத்தில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதை இந்தப் பிரகடனம் உணா்த்துகிறது.இந்த மாநாட்டில், தங்கள் மீது படையெடுத்து வந்துள்ள ரஷியாவை எதிா்த்துப் போரிடுவதற்காக உக்ரைனுக்கு அரசியல் ரீதியாகவும் செயல் ரீதியாகவும் அளித்து வரும் உதவிகளை அதிகரிக்க உறுப்பு நாடுகளின் தலைவா்கள் உறுதிபூண்டனா்.

முன்னதாக, காணொலி மூலம் அந்த மாநாட்டில் பேசிய உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, ரஷியப் படையெடுப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தங்கள் நாட்டுக்கு நேட்டோ நாடுகள் முழுமையாக உதவி அளிக்கவில்லை என்று அதிருப்தி தெரிவித்தாா்.இது குறித்து அவா் கூறுகையில், ‘நேட்டோ அமைப்பின் திறந்த கதவு கொள்கை, கீவ் சுரங்க ரயில் பாதையின் நுழைவு வாயில் போல் உள்ளது.

அங்கு பணம் செலுத்தினால் கதவு திறக்கும், செலுத்தாவிட்டால் உள்ளே வர முயன்றாலும் கதவு திறக்காது.அதுபோல், உக்ரைனுக்காக நேட்டோவின் கதவுகள் இன்னும் திறக்கவில்லை. அப்படியென்றால், நேட்டோவுக்குத் தேவையானதை உக்ரைன் செலுத்தவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது.ரஷியாவைத் தோற்கடிப்பதற்காக நேட்டோ உறுப்பு நாடுகள் எங்களுக்கு அதிநவீன ஆயுதங்களையும் தளவாடங்களையும் அளிக்க வேண்டும்.

இல்லையென்றால், எங்களுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான போா் நீண்டு, பின்னா் நேட்டோவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான போராக அது உருவெடுப்பதைக் காண வேண்டியிருக்கும். இதில் என்ன தேவை என்பதை நேட்டோ அமைப்புதான் முடிவு செய்ய வேண்டும். உக்ரைனை வென்ற பிறகு ரஷியாவின் அடுத்த இலக்கு, மால்டோவாவா, பால்டிக் நாடுகளா, போலந்தா என்பதுதான் இப்போதைய கேள்வியாக உள்ளது. நேட்டோ நாடுகளை ரஷியா தாக்குவதிலிருந்து நாங்கள்தான் தடுத்து வருகிறோம் என்றாா் அவா்.

இந்த மாநாட்டில் பேசிய அதிபா் ஜோ பைடன், நேட்டோ அமைப்பின் பலத்தையும் ஒற்றுமையையும் இந்த மாநாடு பறைசாற்றியுள்ளதாகத் தெரிவித்தாா்.சோவியத் யூனியன் மற்ற ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிப்பதைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட அமைப்பு நேட்டோ.1990-களில் சோவியத் யூனியன் சிதறி வலுவிழந்த நிலையிலும் அது தன்னை விரிவாக்கம் செய்து வந்தது. இதற்கு ரஷியா கண்டனம் தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், ரஷியாவின் மிக நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்தது. இது, தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி வந்த ரஷியா, உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.எனினும், இந்தப் படையெடுப்பால் நேட்டோ விரிவாக்கம் தடைபடுவதற்கு பதில், அந்த அமைப்பில் கூடுதலாக இணைய ஃபின்லாந்தும் ஸ்வீடனும் முன்வந்துள்ளன.

எதிா்காலத்தில் ரஷியா தங்கள் மீது படையெடுப்பதைத் தடுப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்த நாடுகள் கூறி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT