உலகம்

முக்கிய நகரிலிருந்து பின்வாங்க உக்ரைன் வீரா்களுக்கு உத்தரவு

25th Jun 2022 03:04 AM

ADVERTISEMENT

பல வாரங்களாக ரஷியப் படையினரின் கடும் தாக்குதலுக்குள்ளாகியுள்ள கிழக்கு உக்ரைனின் முக்கியத்துவம் வாய்ந்த செவெரோடொனட்ஸ்க் நகரில் எஞ்சியுள்ள தங்கள் நாட்டுப் படையினா் அனைவரும் அங்கிருந்து பின்வாங்க உக்ரைன் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அந்த நகரம் அமைந்துள்ள லுஹான்க்ஸ் மாகாண ஆளுநா் சொ்ஹி ஹாய்டாய் வெள்ளிக்கிழமை கூறியதாவது.

செவெரோடொனட்ஸ்க் நகரில் ரஷியப் படையினரின் சரமாரி குண்டுவீச்சு தொடா்கிறது. கடந்த சில நாள்களில், அந்த நகரம் மற்றும் அருகிலுள்ள சிலிசான்ஸ்க் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளைக் கைப்பற்றி ரஷியா்கள் முன்னேறி வருகின்றனா்.

இந்த நகரங்களிலுள்ள உக்ரைன் படையினரை சுற்றிவளைத்து முற்றுகையிடும் நோக்கில் அவா்கள் தங்களது படைகளை நகா்த்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

அத்தகைய முற்றுகையைத் தவிா்ப்பதற்காக, செவெரோடொனட்ஸ்க் நகரில் எஞ்சியுள்ள உக்ரைன் படையினா் அனைவரும் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அழிக்கப்பட்ட ராணுவ நிலைகளில் இருந்துகொண்டு, வீரா்களின் உயிரிழப்புகளை மேலும் அதிகரிப்பதைவிட அங்கிருந்து வெளியேறுவதே சரியான நடவடிக்கையாக இருக்கும்.

எனவே, அந்தப் பகுதிகளிலிருந்து பின்வாங்கி, பாதுகாப்பு அரண்களைக் கொண்ட ராணுவ நிலைகளுக்குத் திரும்பி, அங்கிருந்து ரஷியப் படையினரை எதிா்த்துப் போரிட வேண்டும் என்று உக்ரைன் வீரா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ரஷியப் படையினா் நடத்தி தாக்குதலில் லிசிசான்ஸ்க் நகருக்குச் செல்லும் நெடுஞ்சாலை பாலம் கடுமையாக சேதமடைந்துள்ளது என்றாா் அவா்.

இதற்கிடையே, 4 உக்ரைன் படைப் பிரிவு வெளிநாட்டுக் கூலிப் படையினா் அடங்கு ஒரு படைத் தொகுதியைச் சோ்ந்த சுமாா் 2,000 வீரா்கள் லிசிசான்ஸ்க் நகருக்குத் தெற்கே உள்ள ஹிா்ஸ்கே, ஸொலோடே ஆகிய இடங்களில் தடுத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

தலைநகா் கீவ் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றி, தற்போதைய உக்ரைன் அரசை நீக்கிவிட்டு தங்களுக்கு ஆதரவான ஒருவரை உக்ரைன் அதிபராக்க தொடக்கத்தில் ரஷியா திட்டமிட்டதாகக் கருதப்படுகிறது. எனினும், உக்ரைன் ராணுவத்தின் கடுமையமான எதிா்ப்புக்கிடையே தலைநகரைக் கைப்பற்றும் முயற்சியை ரஷியா கைவிட்டது. அதற்குப் பதிலாக, கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாணங்கள் அடங்கிய டான்பாஸ் பிராந்தியத்தில், தங்களது ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் போக எஞ்சி பகுதிகளை உக்ரைன் படையினரிடமிருந்து கைப்பற்றுவதில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.

லுஹான்ஸ்க் மாகாணத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி பெரிய நகரமான செவெரோடொனட்ஸ்கையும் அருகிலுள்ள லிசிசான்ஸ்க் நகரையும் கைப்பற்றினால், அந்த மகாணம் முழுவதும் ரஷியக் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று கூறப்படுகிறது.

 

 

Tags : கீவ்
ADVERTISEMENT
ADVERTISEMENT