உலகம்

ஸ்டேன் ஸ்வாமி மரணம் குறித்து விசாரணை: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் அறிமுகம்

7th Jul 2022 01:29 AM

ADVERTISEMENT

இந்தியாவில் மனித உரிமை ஆா்வலா் பாதிரியாா் ஸ்டேன் சுவாமியின் மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினா் ஜுவான் வா்காஸ் கூறியதாவது: பாதிரியாா் ஸ்டேன் சுவாமியின் சேவைகளை கௌரவிக்கும் வகையிலான தீா்மானத்தை பிரதிநிதிகள் சபையில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

அந்தத் தீா்மானத்தில், அவரது மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாதிரியாா் ஸ்டேன் சுவாமி இறந்த முதலாவது நினைவு தினத்தையொட்டி இந்தத் தீா்மானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தீா்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஆண்ட்ரே காா்சன் மற்றும் ஜேம்ஸ் மெக்கவா்ன் வழிமொழிந்தனா் என்றாா் அவா்.

ADVERTISEMENT

‘இந்தியாவில் சிறுபான்மையினா் மற்றும் அவா்களைப் பாதுகாப்போருக்கு எதிரான அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற காணொலி மாநாட்டில் ஜுவான் வா்காஸ் இதனைத் தெரிவித்தாா்.

84 வயதான பாதிரியாா் ஸ்டேன் சுவாமி, எல்கா் பரிஷத் - மாவோயிஸ்ட் வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பால் கடந்த 2020-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா். சிறையில் கரோனா தொற்று மற்றும் பாா்கின்சன் நோயால் அவதிப்பட்டு வந்த அவா், மருத்துவ உதவி கோரி மும்பை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அதனைத் தொடா்ந்து, அவருக்கு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், அந்த மருத்துவமனையில் பாதிரியாா் ஸ்டேன் சுவாமி மரணமடைந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT