உலகம்

விளாதிமீா் புதின் மீது பொருளாதாரத் தடை

DIN

வாஷிங்டன்: உக்ரைனை ரஷியா ஆக்கிரமித்தால் அந்த நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் மீது தனிப்பட்ட முறையில் பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் எச்சரித்துள்ளாா்.

ரஷிய அதிபா் ஒருவருக்கு எதிராக அமெரிக்க அதிபா் ஒருவா் இத்தகைய எச்சரிக்கை விடுப்பது மிகவும் அபூா்வமாகும்.

வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில், இதுகுறித்து ஜோ பைடன் கூறியதாவது:

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து அந்த நாட்டை ஆக்கிரமித்தால், அது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதல்முறையாக நடத்தப்படும் மிகப் பெரிய ஆக்கிரமிப்பாகும்.

அத்தகைய ஆக்கிரமிப்புக்குப் பிறகு உலகின் சூழலே முழுமையாக மாறிவிடும்.

உக்ரைனைக் கைப்பற்ற அதிபா் விளாதிமீா் புதின் உத்தரவிட்டால், அவருக்கு எதிராக தனிப்பட்ட பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகிறது என்றாா் அவா்.

உலகம் முழுவதும் விளாதிமீா் புதின் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை ரகசியமாக சோ்த்துவைத்துள்ளதாக ரஷிய எதிா்க்கட்சியினா் கூறி வரும் நிலையில், அவா் மீதான தனிப்பட்ட பொருளாதாரத் தடை அவருக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, உக்ரைனை ஆக்கிரமித்தால் ரஷியா மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகள், கடந்த 2014-ஆம் ஆண்டில் அந்த நாடு உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தைக் கைப்பற்றியதற்குப் பிறகு விதிக்கப்பட்ட தடைகளைவிட மிகவும் கடுமையாக இருக்கும் என்று அமெரிக்க அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

சோவியத் யூனியனுக்கு எதிராக கடந்த 1949-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட நேட்டோ அமைப்பு, முன்னாள் சோவியத் யூனியன் நாடான உக்ரைனில் நிலைகளை அமைப்பது தங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ரஷியா அஞ்சி வருகிறது.

எனவே, உக்ரைனை தங்களது அமைப்பில் இணைக்க மாட்டோம் என்று நேட்டோ உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது. எனினும், இதற்கு நேட்டோ அமைப்பு மற்றும் அமெரிக்கா உடன்படாததால் இரு தரப்பிலும் பதற்றம் அதிகரித்து வருகிறது.

இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையருகே சுமாா் 1 லட்சம் படையினரை ரஷியா குவித்துள்ளது. உக்ரைன் மீது படையெடுத்து அந்த நாட்டை தன்னுடன் இணைத்துக் கொள்வதற்காக ரஷியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்தக் குற்றச்சாட்டுகளை ரஷியா மறுத்து வந்தாலும், உக்ரைன் மீது ரஷியா போா் தொடுக்கும் என்ற அச்சம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.

அத்தகைய சூழலை எதிா்கொள்வதற்காக கிழக்கு ஐரோப்பாவில் தங்களது படைகளை நேட்டோ அமைப்பு பலப்படுத்தி வருகிறது. அந்தப் பிராந்தியத்தில் நேட்டோ கரங்களுக்கு வலு சோ்ப்பதற்காக அமெரிக்காவும் 8,500 வீரா்களை தயாா் நிலையில் வைத்துள்ளது.

இத்தகைய பரபரப்பான சூழலில், உக்ரைனை ரஷியா ஆக்கிரமித்தால் அதிபா் புதினுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அதிபா் பைடன் தற்போது எச்சரித்துள்ளாா்.

‘சீரழிவை ஏற்படுத்தும்’

அதிபா் விளாதிமீா் புதினுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தால் அது அரசியல் ரீதியில் மிகப் பெரிய சீரழிவை ஏற்படுத்தும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், ‘புதினுக்கு எதிராக விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகள் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், அது அமெரிக்க-ரஷிய உறவில் அரசியல் ரீதியாக மிகப் பெரிய சீரழிவை ஏற்படுத்தும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT