உலகம்

பாகிஸ்தான் பயங்கரவாதக் குழுக்களுடன் அல்}காய்தா வலுவான தொடர்பு

DIN

நியூயார்க்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் பட்டியலிடப்பட்ட லஷ்கர்- ஏ-தொய்பா, ஜெய்ஷ் ஏ முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகளுடன் அல்-காய்தா அமைப்பு வலுவான தொடர்பு வைத்திருப்பதாக, ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் திருமூர்த்தி எச்சரித்தார்.

ஐ.நா.வில் சர்வதேச பயங்கரவாத தடுப்பு கவுன்சில் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற "சர்வதேச பயங்கரவாத தடுப்பு கருத்தரங்கு-2022'-இல், டி.எஸ். திருமூர்த்தி பங்கேற்றார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 2022 ஆம் ஆண்டுக்கான பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் தலைவராக உள்ள அவர் கருத்தரங்கில் பேசியதாவது:

இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்) போன்ற இஸ்லாமிய அமைப்புகள் தங்கள் கவனத்தை மாற்றிக் கொண்டுள்ளன. சிரியா, இராக் நாடுகளை மீண்டும் கைப்பற்றும் திட்டத்தில் அவை உள்ளன. அந்த அமைப்புகளின் துணை அமைப்புகளும் ஆப்பிரிக்கா, ஆசியாவில் தங்களை விரிவாக்கிக் கொள்வதில் கவனம் செலுத்துகின்றன.

அல்-காய்தா அமைப்பு அபாயகரமான அமைப்பாகவே தொடர்கிறது. ஆப்கானிஸ்தானில் அண்மையில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் அந்த அமைப்புக்கு மீண்டும் வலிமையைத் தந்திருக்கின்றன.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் பட்டியலிடப்பட்டுள்ள, பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்- ஏ- முகமது போன்ற அமைப்புகளுடனான அல்-காய்தாவின் தொடர்புகள் வலுப்பெற்று வருகின்றன. ஆப்பிரிக்காவில் உள்ள இதன் பிராந்திய அமைப்புகளும் விரிவுபடுத்தப்படுகின்றன.

2001, செப். 11-ஆம் தேதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்ட நிகழ்வானது, உலகளாவிய பயங்கரவாதத் தடுப்புப் பணியில் நமது அணுகுமுறையை மாற்றியமைக்கும்படி செய்தது. அந்தப் பயங்கரவாதத் தாக்குதல், சர்வதேச அளவில் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் இருப்பதைத் தெளிவுபடுத்தியதுடன், உலக நாடுகள் ஒன்றிணைந்து அதை முறியடிக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தியது.

பயங்கரவாதம் எங்கு செயல்பட்டாலும், அது உலகின் பிற இடங்களிலும் அமைதி, பாதுகாப்பை நேரடியாகப் பாதிக்கச் செய்யும். அதனால்தான், கடந்த காலங்களில் பல உலக நாடுகள் பயங்கரவாத அமைப்புகளை தங்களுக்குச் சாதகமானவை - பாதகமானவை என்று வகைப்படுத்திவந்த காலம் முடிவுக்கு வந்தது. எந்த வடிவில் இருந்தாலும் பயங்கரவாதம் கண்டிக்கத்தக்கது. எங்கேயும், எப்போதும் எவராலும் பயங்கரவாதச் செயல்கள் நிகழ்த்தப்படுவதை நியாயப்படுத்த முடியாது. பயங்கரவாதத்தை மதம், நாடு, நாகரிகம், இனக் குழுக்களுடன் தொடர்புபடுத்தி பார்க்கக் கூடாது.

பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் சில உறுப்பு நாடுகள் பலவீனமான நிலையில் உள்ளன. அவற்றை அடையாளம் கண்டு, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை வலிமைப்படுத்துவது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாதத் தடுப்புக் குழுவின் முக்கியப் பணியாகும்.

ஐ.நா. உறுப்பு நாடுகள் சில,  தங்கள் அரசியல், மதம், சுயநல ஆதாயங்களுக்காக, பயங்கரவாத அமைப்புகளை இனரீதியான அடிப்படைவாதம், வலதுசாரித் தீவிரவாதம் என மென்மையாக வகைப்படுத்துவது ஆபத்தானது. இது மீண்டும் 2001, செப். 11 சம்பவம் போன்ற அபாயங்கள் தொடரவே  வழிவகுக்கும் என்றார்.

குண்டுவெடிப்புக் குற்றவாளிகளை பாதுகாக்கும் பாக். அரசு


1993-இல் மும்பையில் நிகழ்த்தப்பட்ட தொடர்  குண்டுவெடிப்புகளுக்குக் காரணமான முக்கியக் குற்றவாளிகள் பாகிஸ்தானில் 5 நட்சத்திர விருந்தோம்பலை அனுபவித்து வருவதாக ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் டி.எஸ். திருமூர்த்தி குற்றம் சாட்டினார்.

ஐ.நா. கருத்தரங்கில் அவர் மேலும் கூறியதாவது: பயங்கரவாதத்தில் ஈடுபடும் நபர்கள் வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்தாலும் அவர்கள் தொடர்புடைய குற்றங்களை முழுமையாக விசாரித்து நடவடிக்கை மேற்கொள்வதை உலக நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும்.

1993- இல் மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு காரணமான "டி-கம்பெனி' (தாவூத் இப்ராஹிம் கும்பலைக் குறிப்பிடுகிறார்) குற்றக் குழுவினருக்கு பாகிஸ்தான் அரசு பாதுகாப்பு வழங்குகிறது. அவர்கள் அங்கு 5 நட்சத்திர விருந்தோம்பலை அனுபவித்து வருகிறார்கள். 

பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிரான தடை நடவடிக்கைகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் முடிவுகளில் பிரதிபலிக்க வேண்டும். அரசியல், மதரீதியான சலுகைகளைத் தவிர்த்து, வெளிப்படையாகவும் ஆதாரபூர்வமாகவும் இந்த முடிவெடுக்கும் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT