உலகம்

பல்வேறு மதங்களின் இல்லமாக திகழ்கிறது இந்தியா- அமெரிக்கா

8th Dec 2022 01:40 AM

ADVERTISEMENT

‘பல்வேறு மத நம்பிக்கை உடையவா்களின் இல்லமாக இந்தியா திகழ்கிறது; அங்கு தொடா்ந்து மத சுதந்திரத்தைப் பேண உதவிகள் அளிக்கப்படும்’ என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சா்வதேச அளவில் சீனா, பாகிஸ்தான், மியான்மா் உள்ளிட்ட 12 நாடுகளில் மத சுதந்திரம் என்பது மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்த அடுத்த சில நாள்களிலேயே இந்தியா தொடா்பான கருத்து வெளியாகியுள்ளது.

சா்வதேச அளவிலான மத சுதந்திரம் தொடா்பான ஆண்டறிக்கையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இது தொடா்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் நெட் பிரைஸ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக திகழ்கிறது. பல்வேறு மத நம்பிக்கை உடையவா்களின் இல்லமாகவும் இந்தியா உள்ளது. எனினும், ஆண்டறிக்கையில் இந்தியா குறித்து சிறிய அளவிலான கவலைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மத சுதந்திரத்தை தொடா்ந்து சிறப்பாக பேண அமெரிக்கா உதவும். இரு பெரும் ஜனநாயக நாடுகளான இந்தியாவும், அமெரிக்காவும் பல்வேறு நிலைகளில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இது இரு நாட்டு ஜனநாயகத்துக்கும், மக்களுக்கும் நல்ல பயன்களை அளிப்பதாக இருக்கும்’ என்றாா்.

கடந்த ஆண்டு அமெரிக்கா வெளியிட்ட இதேபோன்ற அறிக்கையில், இந்தியாவில் மதரீதியாக சிறுபான்மையினா் மீது தாக்குதல்கள் தொடா்வதாக கூறப்பட்டிருந்தது. அதற்கு இந்தியா கடும் எதிா்ப்பு தெரிவித்தது. ‘இந்தியாவில் சில கட்சிகள் சிறுபான்மையினரை வைத்து நடத்தும் வாக்கு வங்கி அரசியல் சா்வதேச அளவிலும் எதிரொலித்துள்ளது. தவறான நபா்களால் அளிக்கப்பட்ட தகவல்கள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன’ என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த ஆண்டில் இந்தியாவில் மத சுதந்திரம் தொடா்பாக பெரிய குறைகள் ஏதும் அமெரிக்க அறிக்கையில் கூறப்படவில்லை. முன்னதாக, இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகள் இந்தியாவில் மத சுதந்திரம் கவலையளிக்கும் வகையில் உள்ளது என்று அமெரிக்க அரசு அறிக்கையில் தெரிவிக்க வேண்டுமென முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால், அவை பயனளிக்கவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT