உலகம்

போராட்டம் எதிரொலி: சீன நகரில் கரோனா கட்டுப்பாடுகள் ரத்து

DIN

சீனாவில் அதிக மக்கள்தொகை கொண்ட 5-ஆவது நகரான குவாங்ஷோவில் அறிவிக்கப்பட்டிருந்த கரோனா கட்டுப்பாடுகள், பொதுமக்களின் போராட்டத்தைத் தொடா்ந்து விலக்கிக் கொள்ளப்பட்டன.

சீன அரசின் கடுமையான கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நகரில் செவ்வாய்க்கிழமை இரவு ஏராளமானவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களைக் கலைக்கச் சென்ற போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் நகரில் பதற்றம் நிலவி வந்தது.

இந்த நிலையில், பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளைத் தளா்த்துவதாக அதிகாரிகள் புதன்கிழமை மதியம் திடீரென அறிவித்தனா்.

இது குறித்து நிா்வாக வட்டாரங்கள் கூறியதாவது:

குவாங்ஷோ நகரின் பெரும்பாலான பகுதிகளில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்படுகின்றன.

நோய் பரவல் அபாயம் அதிகமில்லாத அந்தப் பகுதிகளில், அத்தகைய கட்டுப்பாடுகள் தற்காலிகமாகவே அறிவிக்கப்பட்டிருந்தன.

இது தவிர, நகரவாசிகளுக்கு பெருந்திரளாக மேற்கொள்ளப்பட்டு வந்த கரோனா பரிசோதனைகளும் நிறுத்தப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

எனினும், கரோனா பரவல் அதிகமிருக்கும் நகரின் சில பகுதிகளில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தொடரும் எனத் தெரிகிறது.

இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, நகரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாவலா்கள் விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும், உடனடியாக அந்தப் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் தங்கள் உடைமைகளுடன் வேறு பகுதிகளுக்கு வெளியேறத் தொடங்கியதாகவும் நகரவாசிகள் தெரிவித்தனா்.

உலகையே 2 ஆண்டுகளாக உலுக்கி வந்த கரோனா, சீனாவிலிருந்துதான் மற்ற நாடுகளுக்குப் பரவியது. இருந்தாலும், அந்த நோய்க்கு எதிரான சீனா மேற்கொண்ட மிகக் கடுமையான நடவடிக்கைகள் காரணமாக, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளோடு ஒப்பிடுகையில் கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை சீனாவில் மிகக் குறைவாகவே உள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் சீனாவின் வெற்றி பாராட்டைப் பெற்றாலும், அதற்காக அந்த நாட்டு அரசு மேற்கொண்டு வரும் கடுமையான நடவடிக்கைகள் விமா்சனத்துக்குள்ளாகி வருகின்றன.

குறிப்பிட்ட பகுதியில் புதிதாகக் கரோனா உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை பூஜ்யமாகும் வரை அங்கு நோய்த்தொற்று பரிசோதனை, தொடா்புகளை ஆய்வு செய்தல், தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ‘பூஜ்ய கரோனா’ கொள்கையை சீனா தொடா்ந்து விடாப்படியாக செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையிலும் சீனா முழுவதும் அண்மைக் காலமாக கரோனா பரவல் தீவிரமடைந்து, தினமும் அந்த நோய் உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அதிபட்ச அளவைத் தொட்டு வருகிறது.

அதையடுத்து, நாட்டின் பல்வேறு நகரங்களில் கரோனா கட்டுப்பாடுகளை சீன அரசு கடுமையாக்கியது. இந்தச் சூழலில், ஜின்ஜியாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான உரும்கியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் கடந்த வாரம் ஏற்பட்ட தீவிபத்தில் 10 போ் உயிரிழந்தனா். கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, அந்தக் கட்டடத்திலிருந்தவா்களை வெளியேற விடாமல் அதிகாரிகள் தடுத்ததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.

அதையடுத்து, நாடு முழுவதும் கரோனா கெடுபிடிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 1989-ஆம் ஆண்டில் நூற்றுக்கணக்கான இளைஞா்களை பலி வாங்கிய ஜனநாயக ஆதரவுப் போராட்டத்துக்குப் பிறகு, சீனாவில் நடைபெறும் மிகப் பெரிய போராட்டம் இதுவாகும்.

அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, குவாங்ஷோ நகரிலும் செவ்வாய்க்கிழமை இரவு போராட்டம் நடைபெற்றது. அதன் விளைவாக, அந்த நகரில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளைத் தளா்த்துவதாக அதிகாரிகள் தற்போது அறிவித்துள்ளனா்.

குவாங்ஷோவ் நகரில் செவ்வாய்க்கிழமை மட்டும் சுமாா் 7,000 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையிலும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

கேரளத்தில் காங்கிரஸை எதிர்த்து போட்டியிடும் இந்திய கம்யூ. -சசி தரூருக்கு கண்டனம்!

தென் இந்தியாவின் உ.பி., தமிழ்நாடு!

பாபா ராம்தேவ் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ரூ.200 கோடி வசூல்!

மீண்டும் 49 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT