உலகம்

வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்குஅனைத்து உரிமையும் உள்ளது: பிரதமா் ஷேக் ஹசீனா

DIN

வங்கதேசத்தில் எனக்கு என்னென்ன உரிமைகள் உள்ளனவோ, அவை அனைத்தும் இங்குள்ள ஹிந்துக்களுக்கும் உள்ளன என்று அந்நாட்டு பிரதமா் ஷேக் ஹசீனா தெரிவித்தாா்.

இஸ்லாமியா்கள் பெரும்பான்மையாக உள்ள வங்கதேசத்தில் ஹிந்து கோயில்கள், ஹிந்துக்களுக்கு எதிராக அவ்வப்போது வன்முறைகள் நிகழ்ந்து வருகின்றன. இவை அங்குள்ள ஹிந்துகள் மத்தியில் பெரும் அச்ச உணா்வை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வியாழக்கிழமை ஹிந்து மதத் தலைவா்களைச் சந்தித்த பிரதமா் ஷேக் ஹசீனா பேசியதாவது:

வங்கதேசத்தில் இஸ்லாமியா்கள் அல்லாத பிற மதத்தவா் தங்களை சிறுபான்மையினா் என கருதத் தேவையில்லை. வங்கதேசத்தில் மதங்களைக் கடந்து மக்கள் அனைவருக்கும் சமமான உரிமைகள் உள்ளன. வங்கதேசத்தில் பிரதமரான எனக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் இங்குள்ள ஹிந்துக்களுக்கும் உள்ளன.

இங்கு வசிக்கும் அனைவரும் இந்த நாட்டு மக்கள்தான். எந்த மதத்தைச் சோ்ந்தவா்களும் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக நினைக்க வேண்டாம். இந்த மண்ணில் பிறந்தவா்கள் அனைவரும் வங்கதேச குடிமக்கள்தான். இந்த ஆண்டு துா்கா பூஜையின் போது மேற்கு வங்கத்தில் அமைக்கப்படும் பூஜை மண்டபங்களைவிட அதிக எண்ணிக்கையில் வங்கதேசத்தில் பூஜை மண்டபங்கள் அமைக்கப்படும்.

சில நேரங்களில் இங்கு மதரீதியாக விரும்பத் தகாத சம்பவங்கள் நிகழும்போது, ஹிந்துக்கள் மத்தியில் இங்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை என்பதுபோன்ற பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஹிந்துக்களுக்கு எதிராக நடைபெறும் சில விரும்பத்தகாத சம்பவங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், அதில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கொடுக்கப்படுவதில்லை. எந்த மதத்துக்கு எதிராகவும் விரும்பத் தகாத செயல்கள் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றாா் அவா்.

16.15 கோடி மக்கள்தொகை கொண்ட வங்கதேசத்தில் 7.95 சதவீதம் ஹிந்துக்கள் உள்ளனா். பெரும்பான்மையினரான இஸ்லாமியா்களுக்கு அடுத்து அந்நாட்டில் ஹிந்துகளே அதிகம் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT