உலகம்

சல்மான் ருஷ்டியை ஏன் கத்தியால் குத்தினேன்?: குற்றவாளி விளக்கம்

18th Aug 2022 01:29 PM

ADVERTISEMENT

 

எழுத்தாளர் சல்மான் ருஷ்டி இஸ்லாமியர்களை அவமதித்தார் என்பதற்காகவே கத்தியால் குத்தினேன் என கைதானவர் கூறியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிறந்தவா் எழுத்தாளா் சல்மான் ருஷ்டி (75). பிரிட்டனுக்கு குடிபெயா்ந்த இவா், கடந்த 1988-ஆம் ஆண்டு ‘தி சட்டானிக் வொ்சஸ்’ என்ற ஆங்கில நாவலை எழுதி வெளியிட்டாா்.

அந்த நாவல் இஸ்லாமிய மதத்தை அவமதித்துள்ளதாகக் கூறி, இந்தியா அந்தப் புத்தகத்துக்குத் தடை விதித்தது. இதையடுத்து, ருஷ்டிக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயாா்க் மாகாணம், ஷட்டாக்குவா பல்கலைக்கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி மீது, இளைஞா் ஒருவா் கத்தியால் சரமாரியாகத் தாக்கினாா். இதில் பலத்த காயமடைந்த ருஷ்டிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவா் ஒரு கண்ணில் பாா்வையிழக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் தொடா்பாக லெபனான் நாட்டை பூா்விகமாகக் கொண்ட அமெரிக்கா் ஹாதி மத்தா் (24) என்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

சல்மான் ருஷ்டியைத் தாக்கிய ஹாதி மத்தா்

கைதான மத்தர் அமெரிக்க நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ‘சல்மான் ருஷ்டி பிழைத்தது ஆச்சரியமாக இருக்கிறது. ’தி சட்டானிக் வொ்சஸ்’ நாவலின் சில பக்கங்களைப் படித்திருக்கிறேன். ஆனால், ஈரானின் 1989-ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சியாலோ ஈரான் அரசியல் தலைவரும் மதகுருவுமான அயதுல்லா கொமேனியின் ஃபத்வா ஆணையின் தூண்டுதலாலோ சல்மான் ருஷ்டியைக் கத்தியால் குத்தவில்லை. அயதுல்லா மீது நான் நல்ல மதிப்பை வைத்திருக்கிறேன். அவர் மிகச்சிறந்த மனிதர். அதற்கு மேல் எதுவும் கூற மாட்டேன். ஆனால், சல்மான் ருஷ்டி தன் எழுத்துகளால் இஸ்லாமியர்களை, அவர்களின் நம்பிக்கைகளைச் சிதைத்தவர். அவர் நல்ல மனிதராக இருக்க முடியாது. எனக்கு அவரை சுத்தமாகப் பிடிக்கவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 1989-ஆம் ஆண்டு சல்மான் ருஷ்டியைக் கொலை செய்ய உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு ஈரான் அரசியல் தலைவரும் மதகுருவுமான அயதுல்லா கொமேனி ஃபத்வா என்ற ஆணை பிறப்பித்தாா். இதையடுத்து ருஷ்டி பிரிட்டன் காவல் துறையின் பாதுகாப்பில் பல ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT