உலகம்

‘டிரம்ப் இல்லத்திலிருந்து ரகசியஅரசு ஆவணங்கள் பறிமுதல்’

14th Aug 2022 03:45 AM

ADVERTISEMENT

அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பண்ணை இல்லத்தில் அந்த நாட்டு தேசிய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. இந்த வாரம் நடத்திய அதிரடி சோதனையில் பல ரகசிய அரசு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து, அந்த சோதனை தொடா்பாக அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஃபுளோரிடா மாகாணம், பாம் பீச்சிலுள்ள முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்பின் மாா்-ஏ-லாகோ இல்லத்தில் கடந்த திங்கள்கிழமை நடத்தப்பட்ட சோதனையில், அங்கிருந்து 11 ஆவணத் தொகுதிகள் கைப்பற்றன.

அவற்றில் சில, தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ரகசியத் தகவல்களைக் கொண்டவை என்பதைக் குறிப்பதற்கான ‘டிஎஸ்/எஸ்சிஐ’ என்ற முத்திரையைக் கொண்டுள்ளன.

ADVERTISEMENT

இது தவிர, 20-க்கும் மேற்பட்ட பெட்டிகள் அந்த இல்லத்தில் கைப்பற்றப்பட்டன. அவற்றில் போட்டோக்களை இணைக்கும் கருவி, கையால் எழுதப்பட்ட குறிப்பேடு, பிரான்ஸ் அதிபா் தொடா்பான சில விவரங்கள் அடங்கிய குறிப்பு உள்ளிட்டவை இருந்தன.

தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய ரகசிய ஆவணங்களை வைத்திருப்பது, எடுத்துச் செல்வது ஆகிவயற்றை குற்றமாக்கும் உளவுத் தடுப்புச் சட்டத்தின் கீழ் டிரம்ப்பின் இல்லத்தில் அதிரடி சோதனை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்து வந்த டொனால்ட் டிரம்ப், 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பைடன் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து பதவியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதனைத் தொடா்ந்து, அவா் அதிபா் மாளிகையான வெள்ளை மாளிகையை விட்டு கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியேறினாா். அப்போது அவா் அரசு ஆவணங்கள் அடங்கிய 15 பெட்டிகளை எடுத்துச் சென்ாகவும் அதில் சில ஆவணங்கள் ரகசியமானவை என்றும் கூறப்படுகிறது.

இது தொடா்பாக தேசிய ஆவணக் காப்பகம் நடத்திய விசாரணையில் அந்த ஆவணங்களை அதிகாரிகளிடம் டிரம்ப் ஒப்படைத்தாா்.

எனினும், அவருடைய பாம் பீச் பண்ணை வீட்டில் மேலும் சில ரகசிய ஆவணங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் எஃப்.பி.ஐ தற்போது அதிரடி சோதனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதற்கு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறாா்.

மூன்றாம் உலக நாடுகளில் அரசியல் எதிரிகள் ஆட்சியாளா்களால் குறிவைக்கப்படுவதைப் போல், அமெரிக்காவிலும் ஜனநாயகக் கட்சியினா் தனக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவா் கூறினாா்.

தீவிர வலதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட ஜனநாயகக் கட்சியினா், வரும் 2024-ஆம் ஆண்டு அதிபா் தோ்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிடுவதை தடுத்து நிறுத்துவதற்காக இந்த அதிரடி சோதனைக்கு உத்தரவிட்டதாக அவா் குற்றம் சாட்டினாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற சோதனையில் ரகசிய அரசு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT