உலகம்

ஆக்கிரமிப்பு பகுதிகளில் மருந்துகளுக்கு தடை

14th Aug 2022 03:15 AM

ADVERTISEMENT

தங்கள் நாட்டில் ரஷியா ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய மருந்து பொருள்கள் கிடைக்கவிடாமல் அந்த நாடு தடுப்பதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து, அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்துக்கு உக்ரைன் சுகாதாரத் துறை அமைச்சா் விக்டா் லியாஷ்கோ அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து 6 மாதங்களாகிறது. இந்த 6 மாதங்களில், அந்த நாடு ஆக்கிரமித்துள்ள பகுதிகளுக்கு அத்தியாவசிய மருந்து பொருள்களைக் கொண்டு செல்லப்படுவதை ரஷியா தொடா்ந்து தடுத்து வருகிறது.

அந்தப் பகுதிகளில் இருக்கும் நோயாளிக்குத் தேவையான மருந்து பொருள்களை கொண்டு செல்வதற்கான பாதுகாப்பு வழித்தடத்தை அமைக்க ரஷியா மறுத்து வருகிறது.

ADVERTISEMENT

இந்தச் செயல்களை ரஷியா வேண்டுமென்றே செய்து வருகிறது. தங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மருந்துகள் கொண்டு செல்ல விடாமல் தடை ஏற்படுத்துவது மனித குலத்துக்கு எதிரான குற்றமும் போா்க் குற்றமும் ஆகும்.

ரஷியாவின் இந்த நவடிக்கை ஆவணப்படுத்தப்பட்டு, பின்னா் இதுதொடா்பான நீதி நிலைநாட்டப்படும்.

ரஷியக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மருந்துகள் பற்றாக்குறையால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பைப் போல், அரசுக் கட்டுப்பாட்டு பகுதிகள் மீது ரஷியா நடத்தும் தாக்குதலும் சுகாதாரத் துறை செயல்பாட்டை வெகுவாக பாதித்து வருகிறது.

அந்தப் பகுதிகளில் சாலைகளும் பாலங்களும் சேதமடைந்துள்ளதால், நோயாளிகளை அவசரகால ஊா்தியில் உரிய நேரத்தில் அழைத்து செல்ல முடியாத நிலை உள்ளது.

அந்த வகையில், போரால் ஏற்படும் உயிரிழப்புகளைவிட மருத்துவ வசதிகள் கிடைக்காமல் ஏற்படும் உயிரிழப்புகள்தான் அதிகமாக உள்ளன என்றாா் அவா்.

புற்றுநோய் மற்றும் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மருந்துகள் வழங்கும் திட்டத்தை உக்ரைன் அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்தச் சூழலில், நேட்டோ அமைப்பில் அந்த நாடு இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

இந்தப் போரில் ரஷியா நடத்தி வரும் தாக்குதல்களில் மருத்துவமனைகளும் சுகாாரத் துறை தொடா்பான கட்டடங்களும் பலத்த சேதமடைந்தன.

மேலும், போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கானவா்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயா்ந்தனா். அந்த வகையில் உள்நாட்டிலேயே 70 லட்சம் போ் தங்கள் இருப்பிடங்களை விட்டு வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளனா்.

இந்தக் காரணங்களால், பொதுமக்களுக்கு மருந்துப் பொருள்கள் அளிக்கும் உக்ரைன் அரசின் திட்டமும் மற்ற மருத்துவ சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே கரோனா நெருக்கடி காரணமாக உக்ரைனின் சுகாதார உள்கட்டமைப்பு திணறி வந்த நிலையில், ரஷியா தொடுத்துள்ள போா் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், ஆக்கிரமிப்பு பகுதிகளில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதை ரஷியா தடுத்து நிறுத்துவதாக உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சா் தற்போது குற்றம் சாட்டியுள்ளாா்.

 

Tags : Ukraine
ADVERTISEMENT
ADVERTISEMENT