உலகம்

வரலாறு காணாத எரிபொருள் விலை உயர்வு: வங்கதேசத்தில் மக்கள் போராட்டம்!

8th Aug 2022 10:56 AM

ADVERTISEMENT

வங்கதேசத்தில் வரலாறு காணாத எரிபொருள் விலை உயர்வினால் அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

வங்கதேச அரசு கடந்த வெள்ளிக்கிழமை எரிபொருள் விலை உயர்வை அறிவித்தது.  டீசல் விலை லிட்டருக்கு 34 டாக்காவும், ஆக்டேன் லிட்டருக்கு 46 டாக்காவும், பெட்ரோல் லிட்டருக்கு 44 டாக்காவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

இதன்மூலமாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலை 50 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.பெட்ரோல் விலை தற்போது 135 டாக்காவாக உள்ளது. இது முந்தைய விலையை விட 51.7 சதவீதம் அதிகம்.

1971ல் வங்கதேசம் சுதந்திரம் பெற்ற பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு எரிபொருள் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து மக்கள் எரிபொருள் நிலையங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். 

மேலும், எரிபொருள் விலை உயர்வினால் பேருந்து கட்டணம், விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றையும் அங்குள்ள மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். 

முன்னதாக, சனிக்கிழமை இந்த புதிய விலை அமலுக்கு வரும் என்று கூறப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அதிகமான வாகனங்கள் எரிபொருள் நிலையங்களை முற்றுகையிட்டன. 

வங்கதேச பெட்ரோல் கார்பரேஷன் (பிபிசி) பிப்ரவரி முதல் ஜூலை வரை எரிபொருளை குறைவான விலைக்கு விற்றதால் நஷ்டமடைந்ததாகவும் அதனை ஈடுகட்ட தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. 

உலகம் முழுவதுமே பெரும்பாலான நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT