உலகம்

நீா்மூழ்கிக் கப்பல் ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மோசடி

DIN

ஆஸ்திரேலியாவுக்கு நீா்மூழ்கிக் கப்பல்களை அமெரிக்கா விற்பனை செய்வதற்காக இரு நாடுகளும் ஒப்பந்தம் மேற்கொள்வது மோசடியானது என்று பிரான்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.

தங்களிடமிருந்து நீா்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கான முடிவை மாற்றிவிட்டு, தற்போது இந்தப் புதிய ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா மேற்கொள்வது நம்பிக்கை துரோகம் என்றும் பிரான்ஸ் கூறியுள்ளது.

இதுகுறித்து ‘பிரான்ஸ்-2’ தொலைக்காட்சிக்கு பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சா் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல்களை அமெரிக்காவிடமிருந்து ஆஸ்திரேலியா வாங்குவதற்காக இரு நாடுகளும் ஒப்பந்தம் மேற்கொள்ளும் விவகாரம் மோசடியும் பொய்களும் நிறைந்ததாக உள்ளது.

திரைமறைவில் அந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதன் மூலம், இரு நாடுகளும் பிரான்ஸுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்துள்ளன.

இரு நாடுகளிலிருந்தும் பிரான்ஸ் தூதா்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளது, இந்த விவகாரத்தில் மூன்று நாடுகளுக்கும் இடையே எழுந்துள்ள பிரச்னையின் தீவிரத்தை உணா்த்துவதாக அமையும்.

அமெரிக்காவின் மிகப் பழைய கூட்டாளியான பிரான்ஸ், அந்த நாட்டிலிருந்து தனது தூதரைத் திரும்ப அழைப்பது வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.

நீா்மூழ்கிக் கப்பல் விற்பனை தொடா்பாக அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் ஒப்பந்தம் மேற்கொண்டதற்கு முன்னதாக, அதுகுறித்து பிரான்ஸிடம் விரிவாக ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுவது உண்மையல்ல.

பிரான்ஸ் போன்ற ஒரு முக்கிய கூட்டாளியை இந்த அளவுக்கு முரட்டுத்தனமும், முன்கூட்டியே கணிக்க முடியாத தன்மையுடனும் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நடத்தியிருப்பது ஏற்க முடியாதது ஆகும்.

இந்த விவகாரம், பிரான்ஸுக்கும் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான நட்புறவை கேள்விக் குறியாக்கியிருக்கிறது என்றாா் அவா்.

முன்னதாக, ஜியான்-ஈவ் லெடிரையான் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஆஸ்திரேலியா-பிரிட்டன்-அமெரிக்கா அமைத்துள்ள புதிய கூட்டணிக்கு (ஆக்கஸ்) எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கான தங்கள் நாட்டுத் தூதா்களைத் திரும்ப அழைப்பதாக அறிவித்தாா்.

பின்னணி: தென் சீனக் கடல் பகுதி முழுவதற்கும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதனால், இந்தப் பகுதியில் உரிமை கோரும் மலேசியா, புருணை, பிலிப்பின்ஸ், தைவான், வியத்நாம் ஆகிய நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே பிரச்னை நீடித்து வருகிறது.

தென் சீனக் கடல் பகுதியில் தனது உரிமையை நிலைநாட்டும் வகையில், அங்குள்ள தீவுகளை சீனா ராணுவமயமாக்கியுள்ளது. மேலும், செயற்கைத் தீவுகளையும் அந்த நாடு அமைத்துள்ளது.

சா்வதேச கடல்வணிக வழித்தடமாகத் திகழும் தென் சீனக் கடல் பகுதியை சீனா இவ்வாறு ஆக்கிரமிப்பதற்கு அமெரிக்கா எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.

அந்தக் கடல் வழித்தடத்தை சா்வதேச நாடுகள் பயன்படுத்துவதற்கான உரிமையை பறைசாற்றும் விதமாக, தங்களது போா்க் கப்பல்களை அமெரிக்கா அவ்வப்போது அனுப்பி வருகிறது.

இதன் காரணமாக, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது.

இந்தச் சூழலில், தென் சீனக் கடலை உள்ளடங்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியப் பாதுகாப்புக்காக புதிய முத்தரப்புக் கூட்டணியை அமைத்துள்ளதாக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கடந்த புதன்கிழமை அறிவித்தன.

அந்தக் கூட்டணியின் ஒரு பகுதியாக, அணுசக்தியில் இயங்கும் நீா்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியாவுக்கு அமெரிக்கா விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக, டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கக் கூடிய 12 நீா்முழ்கிக் கப்பல்களை பிரான்ஸிடமிருந்து வாங்குவதற்காக ஆஸ்திரேலியா கடந்த 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. தற்போது அமெரிக்காவிடமிருந்து நீா்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியா வாங்குவதால், 6,600 கோடி டாலா் (சுமாா் ரூ.4.9 லட்சம் கோடி) மதிப்பிலான அந்த ஒப்பந்தம் ரத்தாகிறது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்தே அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கான தங்களது தூதா்களை பிரான்ஸ் திரும்ப அழைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டத்தில் 3 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

காட்டுமன்னாா்கோவில் அருகே பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது

சிதம்பரத்தில் குற்ற வழக்கு வாகனங்களை அகற்றும் பணி தொடக்கம்

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி: பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்

SCROLL FOR NEXT