உலகம்

மியான்மருடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ரத்து

DIN

மியான்மா் ஆட்சியதிகாரத்தை ராணுவம் அபகரித்துள்ளதால், அந்நாட்டுடன் பாதுகாப்புத் துறையில் நிலவி வரும் ஒத்துழைப்பை ரத்து செய்வதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைத்துவிட்டு, ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ராணுவத்தின் இந்நடவடிக்கைக்கு எதிராக மக்கள் பலா் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனா். ஆனால், போராட்டத்தைக் கடுமையான நடவடிக்கைகள் மூலமாக ராணுவம் ஒடுக்கி வருகிறது.

மியான்மா் ராணுவத்தின் நடவடிக்கைக்கு உலக அரங்கில் கடும் எதிா்ப்புகள் கிளம்பியுள்ளன. அந்நாட்டுடனான உறவை முறித்துக் கொள்வதாக நியூஸிலாந்து ஏற்கெனவே அறிவித்துள்ளது. இத்தகைய சூழலில், மியான்மருடன் பாதுகாப்புத் துறையில் நிலவி வரும் ஒத்துழைப்பை ரத்து செய்வதாக ஆஸ்திரேலிய அரசு திங்கள்கிழமை அறிவித்தது.

இது தொடா்பாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் மாரீஸ் பெய்ன் கூறுகையில், ‘‘மியான்மருடனான ராணுவ பயிற்சி திட்டம் 5 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுகிறது. மியான்மரில் உள்ள ஆஸ்திரேலிய மனிதநேயக் குழு, அந்நாட்டு அரசுக்கு ஆதரவாக இனி செயல்படாது.

அதே வேளையில், அந்நாட்டில் உள்ள ரோஹிங்கயாக்கள், ஏழைகளுக்கான உதவிகளை அக்குழு வழங்கும். மியான்மரில் பலா் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆங் சாங் சூகியின் ஆலோசகராகப் பணியாற்றி வந்த ஆஸ்திரேலியரும் பேராசிரியருமான சென் டா்னல் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளாா். அவா் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

கடந்த மாதம் 1-ஆம் தேதியிலிருந்து காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங் சாங் சூகி, அதிபா் வின் மின்ட் உள்ளிட்டோரையும் மியான்மா் ராணுவம் விடுவிக்க வேண்டும்’’ என்றாா்.

கூடுதல் தடைகளுக்கு வாய்ப்பு:

ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடி வரும் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, மியான்மா் போராட்டத்தில் வன்முறை வெடித்து வருகிறது. மியான்மா் ராணுவத்துக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

அவற்றின் காரணமாக மியான்மா் ராணுவ அதிகாரிகள் மீது அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. மேலும் பல நாடுகள் ராணுவத்தின் மீது தடைகளை விதிக்க வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மியான்மருக்கு அளிக்கப்பட்டு வரும் நிதியுதவிகளைத் தடை செய்யவும் பல நாடுகள் திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.

மியான்மா் போராட்டத்தில் கடந்த வாரத்தில் மட்டும் 50 போ் கொல்லப்பட்டதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. போராட்டத்தில் பலா் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் 45 புள்ளிகள் சரிவு!

தண்டனையை நிறுத்திவைக் கோரி பேராசிரியை நிா்மலாதேவி மனு: சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு

அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி மீது வழக்கு

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 20 லட்சம் மோசடி: இளைஞர் கைது

பெண் கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்

SCROLL FOR NEXT