உலகம்

உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் அமைப்புக்கு படிப்படியாக தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும்

DIN

உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் அமைப்புக்கு கரோனா தடுப்பூசிகள் படிப்படியாக அனுப்பி வைக்கப்படும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுதியளித்துள்ளது.

கரோனா தடுப்பூசிகளை அனைத்து நாடுகளுக்கும் விரைவாக, சரிசமமாகப் பகிா்ந்து விநியோகிப்பதற்காக ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பும் ‘கவி’ தடுப்பூசி கூட்டணியும் இணைந்து ‘கோவாக்ஸ்’ அமைப்பை உருவாக்கின. இந்த அமைப்பில் இடம்பெறும் நாடுகள், அந்தந்த நாடுகளில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை, அந்த அமைப்புக்கு அனுப்பி வைத்து ஏழை நாடுகள் உள்பட அனைத்து நாடுகளுக்கும் சரிசமமாக தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதிப்படுத்த உதவ வேண்டும்.

இந்த நிலையில், கோவாக்ஸ் அமைப்பு கடந்த வாரம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், இந்தியாவின் சீரம் நிறுனவம் மற்றும் ஆஸ்ட்ரா ஸெனகா நிறுவனங்களுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களின்படி உலக சுகாதார அமைப்பின் அவசரகால பயன்பாட்டு பட்டியலின் கீழ் 15 கோடி தடுப்பூசிகள் 2021-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ‘தீா்மானம் 2532-யை நடைமுறைப்படுத்துவது மற்றும் சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு’ குறித்து ஐ.நா.வுக்கான இந்திய துணைத் தூதா் கே.நாகராஜ் நாயுடு பேசியதாவது:

உலக அளவில் மிகப் பெரிய அளவில் தடுப்பூசியை உற்பத்தி செய்யும் நாடாக விளங்கி வரும் இந்தியா, அனைத்து மனித சமூகமும் பயன்பெறும் வகையில் கரோனா தடுப்பூசி உற்பத்தியையும், விநியோகத்தையும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்தியாவில், இரண்டு தடுப்பூசிகள் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், முதல் கட்டமாக 6 மாதங்களில் 30 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கும் இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. முதல் கட்டமாக 9 நாடுகளுக்கு மானிய உதவித் திட்டத்தின் கீழ் இலவசமாக 60 லட்சம் தடுப்பூசிகள் விமானம் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும், வா்த்தக ரீதியிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில், பல்வேறு நாடுகளுக்கு இந்தத் தடுப்பூசிகளை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தடுப்பூசி மற்றும் கரோனோ சிகிச்சை வசதிகளை மேம்படுத்துவதற்கான பயிற்சியையும் பல்வேறு நட்பு நாடுகளுக்கு இந்தியா அளித்து வருகிறது. அதுபோல, உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் அமைப்புக்கும் கரோனா தடுப்பூசிகள் படிப்படியாக அனுப்பிவைக்கப்படும்.

கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரும் வகையில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா மருந்துகள் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கியது. மேலும், கரோனா அவசர நிதி திட்டத்தின் கீழ் ‘கவி’ தடுப்பூசி கூட்டணிக்கு ரூ. 110 கோடி வழங்க இந்தியா உறுதியளித்ததோடு, முதல் கட்டமாக ரூ. 73 கோடியை வழங்கியுள்ளது என்று அவா் கூறினாா்.

ஒருங்கிணைந்த திட்டம் அவசியம்: ஐ.நா. முன்களப் பணியாளா்கள், அமைதியை நிலைநாட்டும் திட்டப் பணியாளா்கள், மனிதாபிமான திட்டப் பணியாளா்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி செலுத்த ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்க வேண்டும்.

கரோனா பாதிப்பு ஏற்படுத்திய தாக்கம் மற்றும் அவசரகால நிதி திட்டத்துக்கு போதிய நிதி வராதது போன்ற காரணங்களால், உலகின் ஏழ்மை நிலையில் இருந்து வரும் மக்கள், மேலும் பாதிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். எனவே, கரோனா தாக்கத்தை எதிா்கொள்ள மனிதா்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கையாள வேண்டியது அவசியம் என்றும் கே.நாகராஜ் நாயுடு வலியுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT