உலகம்

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் தாக்குதல் அபாயம்

19th Jan 2021 04:54 AM

ADVERTISEMENT


வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் விழாவில் பாதுகாப்புப் படையினராலேயே தாக்குதல் அபாயம் அல்லது அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என அமெரிக்க பாதுகாப்புப் படை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, விழாவில் பாதுகாப்புப் பணிக்காக வரவழைக்கப்படும் 25 ஆயிரம் தேசிய காவல் படையினரை சோதனைக்குள்படுத்த மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது.

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன், துணை அதிபராக கமலா ஹாரிஸ் வரும் 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளனர். தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. 

முன்னதாக, ஜோ பைடனின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தின்போது, அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டடத்துக்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

இதேபோல ஜோ பைடன் பதவியேற்பு விழாவின்போதும் தாக்குதல் நடத்தப்படலாம் என எஃப்பிஐ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதிலும், பதவியேற்பு விழாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள தேசிய காவல் படையினரில் சிலர் மூலமாகவே தாக்குதல் அபாயம் அல்லது அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என எஃப்பிஐ கருதுகிறது. தேசிய காவல் படை என்பது அமெரிக்க ராணுவம் மற்றும் விமானப் படையின் ஓர் அங்கமாகும். முழுநேர அரசு ஊழியர்களான இவர்கள் பகுதி நேரமாக தேசிய காவல் படையில் பணிபுரிவார்கள்.

ADVERTISEMENT

நாடாளுமன்ற தாக்குதல் தொடர்பாக தேசிய காவல் படையைச் சேர்ந்த சிலரும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சிலரால் அதிபர் பதவியேற்பு விழாவிலும் தாக்குதல் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பதவியேற்பு விழா பாதுகாப்புப் பணிக்காக நாடு முழுவதிலுமிருந்து தலைநகருக்கு வரவழைக்கப்படும் 25 ஆயிரம் தேசிய காவல் படையினரையும் சோதனைக்குள்படுத்த எஃப்பிஐ திட்டமிட்டுள்ளது. தேசிய காவல் படையினர் மீதான பயங்கரவாத தொடர்பு குறித்து அவ்வப்போது ராணுவம் விசாரணையில் ஈடுபடுவது வழக்கம்தான் என்றாலும் தற்போது எஃப்பிஐ கூடுதலாக சோதனையில் ஈடுபடவுள்ளது.

இதுதொடர்பாக ராணுவ செயலர் ரையன் மெக்கார்த்தி அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், தாக்குதலுக்கான சாத்தியக்கூறு குறித்து அறிந்துள்ளோம். கமாண்டர்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள படையினர் மத்தியில் எந்த பிரச்னை ஏற்பட்டாலும் உஷாராக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில், இதுவரை அச்சுறுத்தல் தொடர்பாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றார்.

மாநிலங்களில் போராட்டம்: பல்வேறு மாகாணங்களில் சட்டப்பேரவை கட்டடம் எதிரே ஞாயிற்றுக்கிழமை திரண்ட டிரம்ப்பின் ஆதரவாளர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர் துப்பாக்கி ஏந்தியிருந்தனர். பைடனின் வெற்றியை ஏற்க மறுத்தும், டிரம்ப்புக்கு ஆதரவாகவும் இப்போராட்டத்தில் அவர்கள் பங்கேற்றனர். அவர்களை பாதுகாப்புப் படையினர் அப்புறப்படுத்தினர். எந்த இடத்திலும் மோதல் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

செனட் உறுப்பினர் பதவி: கமலா ராஜிநாமா

கலிஃபோர்னியா மாநிலத்திலிருந்து நாடாளுமன்ற மேலவையான செனட் சபையின் உறுப்பினராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

தற்போது துணை அதிபராகப் பதவியேற்பதற்காக தனது செனட் உறுப்பினர் பதவியை அவர் ராஜிநாமா செய்யவுள்ளார். இரு ஆண்டுகள் பதவிக் காலம் கொண்ட அந்தப் பதவிக்கு கமலா ஹாரிஸூக்கு பதிலாக ஜனநாயக கட்சியை சேர்ந்த அலெக்ஸ் படில்லா என்பவர் நியமிக்கப்படவுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT