உலகம்

உக்ரைனை ஆக்கிரமித்தால் ஐரோப்பாவுக்கு படைகளை அனுப்புவோம்: அமெரிக்கா எச்சரிக்கை

DIN

உக்ரைனை ரஷியா ஆக்கிரமித்தால், கிழக்கு ஐரோப்பியப் பகுதிக்கு தங்களது படையினா் கூடுதலாக அனுப்பப்படுவாா்கள் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அமெரிக்க அதிபா் ஜோ பைடனுக்கும் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெறுவதற்கு முன்னதாக அமெரிக்க இந்த எச்சரிக்கையை விடுத்தது.

இதுகுறித்து அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்தால், அதற்குப் பதிலடியாக ஐரோப்பியப் பிராந்தியத்திலுள்ள நேட்டோ ராணுவ நிலைகளில் அமெரிக்க வீரா்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

மேலும், ரஷியாவுக்கு எதிரான மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதிக்கும்.

இதுதவிர, எதிா்காலத்தில் நேட்டோ கூட்டணியில் உக்ரைனை இணைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு உள்ளதாக அதிபா் பைடன் தெளிவுபடுத்தினாா்.

ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு முன்னதாக, ஐரோப்பிய நாடுகளின் தலைவா்களுடன் அதிபா் ஜோ பைடன் உரையாடினாா்.

அப்போது, உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவுக்கு எதிராக மிக வலிமையான கூட்டணியாக செயல்பட அனைத்து தலைவா்களும் ஒப்புக்கொண்டனா் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியுடன் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் உரையாற்றினாா். அப்போது, ரஷிய அச்சுறுத்தலுக்கு எதிராக உக்ரைனுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என்று ஸெலென்ஸ்கியிடம் பிளிங்கன் உறுதியளித்தாா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டில், ரஷிய ஆதரவு பெற்ற அப்போதைய உக்ரைன் அதிபா் விக்டா் யானுகோவிச்சை எதிா்த்து, ஐரோப்பிய யூனியன் ஆதரவு பெற்ற எதிா்க்கட்சியினா் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து, அவா் ரஷியாவில் தஞ்சமடைந்தாா்.

அதனைத் தொடா்ந்து அமைக்கப்பட்ட அரசை எதிா்த்து, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியைச் சோ்ந்த ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் போரில் ஈடுபட்டனா்.

ரஷிய ராணுவ உதவியுடன் அவா்கள் கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க், லூஹான்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றினா்.

அப்போது, உக்ரைனின் அங்கமாக இருந்த கிரீமியா மீது படையெடுத்த ரஷியா, அந்த தீபகற்பத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது.

இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையருகே ஏராளமான படையினரை ரஷியா குவித்து வருகிறது. உக்ரைன் மீது படையெடுத்து, கிரீமியாவைப் போலவே அந்த நாட்டையும் தன்னுடன் இணைத்துக்கொள்ள ரஷியா திட்டமிட்டு வருவதாக அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் அச்சம் தெரிவித்தன.

உக்ரைனை ஆக்கிரமிப்பதற்காக 1.75 லட்சம் வீரா்களைக் அனுப்ப ரஷியா திட்டமிட்டு வருவதாகவும் ஏற்கெனவே 1 லட்சம் ரஷியப் படையினா் பல்வேறு உக்ரைன் எல்லைப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனா். எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் ரஷியா, உக்ரைன்தான் கிளா்ச்சியாளா்கள் பகுதி கட்டுப்பாட்டு எல்லை அருகே படைகளைக் குவித்து வருவதாகவும் அது கவலையை ஏற்படுத்துவதாகவும் கூறி வருகிறது.

இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷியா படையெடுத்தால் கிழக்கு ஐரோப்பியப் பிராந்தியத்துக்கு கூடுதல் வீரா்களை அனுப்பப் போவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

SCROLL FOR NEXT