உலகம்

ஜம்மு-காஷ்மீர்: துருக்கி அதிபர் கருத்தை நிராகரித்தது இந்தியா

24th Sep 2020 04:16 AM

ADVERTISEMENT

நியூயார்க்: ஜம்மு-காஷ்மீர் குறித்து ஐ.நா. சபையில் துருக்கி அதிபர் ரெசெப் தயீப் எர்டோகன் தெரிவித்த கருத்துகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என இந்தியா தெரிவித்துள்ளது. 
ஐ.நா. சபை கூட்டத்தில், பொதுவிவாதத்துக்காக விடியோ பதிவு செய்யப்பட்ட உரையில், ஜம்மு-காஷ்மீர் பற்றி துருக்கி அதிபர் எர்டோகன் கருத்து தெரிவித்திருந்தார். "தெற்காசியாவின் ஸ்திரத்தன்மை, அமைதிக்கு காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண்பது முக்கியமானது. 
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன. ஐ.நா. சபையின் தீர்மானங்களின் கட்டமைப்புக்குள், குறிப்பாக காஷ்மீர் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்னையைத் தீர்ப்பதற்கு துருக்கி ஆதரவாக உள்ளது' என அவர் குறிப்பிட்டிருந்தார். 
இதுதொடர்பாக ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் டி.எஸ். திருமூர்த்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவு: 
இந்திய யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீர் குறித்து ஐ.நா. சபையில் துருக்கி அதிபர் தெரிவித்துள்ள கருத்துகள், இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக உள்ளன. அவை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. 
மற்ற நாடுகளின் இறையாண்மையை துருக்கி மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். மேலும், அது தனது சொந்த கொள்கைகளை இன்னும் ஆழமாக பிரதிபலிக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார். 
பாகிஸ்தானின் நெருங்கிய கூட்டாளியான துருக்கி அதிபர், கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.நா. சபை கூட்டத்தில் உரையாற்றியபோதும் காஷ்மீர் பிரச்னை குறித்து கருத்துத் தெரிவித்திருந்தார். 
காஷ்மீர் பிரச்னையில் எந்தவொரு மூன்றாம் தரப்புத் தலையீட்டையும் நிராகரித்ததுடன், இந்திய-பாகிஸ்தான் உறவுகளில் நிலுவையில் உள்ள அனைத்து விவகாரங்களும் இருதரப்பு ரீதியாக தீர்க்கப்பட வேண்டும் என்று இந்தியா கூறிவருகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT