உலகம்

தற்கால சவால்களை எதிர்கொள்ள ஐ.நா.வில் விரிவான சீர்திருத்தங்கள் அவசியம்: பிரதமர் மோடி

23rd Sep 2020 03:32 AM

ADVERTISEMENT

தற்கால சவால்களை உலகம் எதிர்கொள்ள ஐக்கிய நாடுகள் சபையில் விரிவான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
 ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரம் அல்லாத உறுப்பினராக இந்தியா வரும் ஜனவரியில் பொறுப்பேற்கவுள்ள நிலையில், சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை தேவையென பிரதமர் விடுத்துள்ள அழைப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
 ஐ.நா. சபையின் 75-ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடைபெற்று வரும் பொதுச்சபையின் உயர்நிலைக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். விடியோவாக பதிவு செய்யப்பட்ட அவரது உரை ஒளிபரப்பப்பட்டது. பிரதமர் பேசியதாவது:
 75 ஆண்டுகளுக்கு முன்னர், போர்க் கொடூரங்களிலிருந்து விடுபட ஒரு புதிய நம்பிக்கை பிறந்தது. மனிதகுல வரலாற்றில் முதல் முறையாக ஒட்டுமொத்த உலகின் நலனுக்காக ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது. ஐ.நா.வின் நிறுவன சாசனத்தில் கையெழுத்திட்ட நாடு என்ற வகையில் உன்னதமான நோக்கத்தின் ஒரு பகுதியாக இந்தியா உள்ளது. அனைத்து உயிர்களையும் ஒரே குடும்பமாகப் பார்க்கும் இந்தியாவின் "வசுதைவ குடும்பகம்' தத்துவத்தை இந்த நோக்கம் பிரதிபலிக்கிறது. நமது உலகம் ஐ.நா.வால் இன்று ஒரு சிறந்த இடமாகத் திகழ்கிறது.
 இருப்பினும், விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐ.நா. சபை ஒரு நம்பிக்கை சிக்கலை எதிர்கொள்கிறது. காலாவதியான கட்டமைப்புகளுடன் இன்றைய சவால்களை எதிர்த்து நாம் போராட முடியாது.
 இன்றைய ஒன்றோடு ஒன்று இணைந்த உலகுக்கு எதார்த்தங்களைப் பிரதிபலிக்கும், அனைத்துத் தரப்பினருக்கும் குரல் கொடுக்கும், தற்கால சவால்களுக்குத் தீர்வு காணும், மனித நலன் மீது கவனம் செலுத்தும் சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை அவசியம். இதை நோக்கி அனைத்து நாடுகளுடன் பணியாற்ற இந்தியா விழைகிறது.
 ஐ.நா. தோற்றுவிக்கப்பட்ட 75 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச்சபையானது ஓர் அரசியல் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான செயல்பாடுகளை வலுப்படுத்துவது, சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை, கொவைட்-19 பெருந்தொற்று போன்ற சவால்களை எதிர்கொள்ள சிறப்பாக தயாராகுதல் உள்ளிட்ட நோக்கங்களை அந்தப் பிரகடனம் தெளிவுபடுத்தியுள்ளது. அதேபோல், ஐ.நா.விலேயே சீர்திருத்தம் அவசியம் என்பதையும் அந்தப் பிரகடனம் ஏற்றுக்கொள்கிறது. சண்டைகளைத் தடுப்பது, வளர்ச்சியை உறுதிப்படுத்துவது, பருவநிலை மாற்றத்துக்கு தீர்வு காண்பது, சமத்துவமின்மையைக் குறைப்பது, டிஜிட்டல் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது ஆகியவற்றில் இன்னமும் செய்ய வேண்டிய பணிகள் உள்ளன என்பதை நாம் ஏற்றுக்கொண்டுள்ள நீண்டகால பிரகடனம் ஒப்புக்கொள்கிறது.
 ஐ.நா. பொதுச் செயலாளரால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவு அளிக்கிறோம். ஐ.நா.வின் முதன்மையான மூன்று உறுப்புகள் சீரமைக்கப்பட வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறோம். பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதங்களில் புதிய அம்சங்களை ஊக்குவிப்பதற்கும், பொதுச்சபை புத்துயிர் பெறுவதற்கும், பொருளாதார சமூக கவுன்சில் வலுப்படுவதற்கும் பணியாற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
 இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும் ஐ.நா. அமைதிகாப்புத் திட்டங்கள் உள்பட ஐ.நா. கொடியின் கீழ் அமைதி மற்றும் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்பவர்களைப் பாராட்டுகிறேன் என்றார் பிரதமர் மோடி.
 முன்னதாக, ஐ.நா.வுக்கான இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, பிரதமர் மோடியின் பதிவு செய்யப்பட்ட உரை குறித்து ஐ.நா. பொதுச்சபை அரங்கில் அறிமுகம் செய்துவைத்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT