உலகம்

'அபிநந்தனை விடுவிக்காவிட்டால்..' பாகிஸ்தான் அமைச்சர் கூறியதை நினைவுகூரும் எதிர்க்கட்சி

29th Oct 2020 11:37 AM

ADVERTISEMENT


இஸ்லாமாபாத்: ஒரு வேளை, விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை விடுவிக்காவிட்டால், இன்று இரவு 9 மணிக்கு இந்தியா, பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கூறியதாக எதிர்க்கட்சித் தலைவர் அயாஸ் சாதிக் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவர் அயாஸ் சாதிக், 2019-ஆம் ஆண்டு இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் பிடிபட்டபோது, பாகிஸ்தானில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, ஒரு வேளை பாகிஸ்தான், விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை விடுவிக்காவிட்டால் இன்று இரவு 9 மணிக்கு இந்தியா, பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் என்று கூறினார். அப்போது, பாகிஸ்தான் ராணுவ தலைமை ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவின் கால்கள் நடுங்கின என்று நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

மேலும் படிக்க.. ரஜினி பெயரில் பரவிய போலி அறிக்கையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?

"எனக்கு அந்த நாள் நன்றாகவே நினைவில் இருக்கிறது. அந்த கூட்டத்தில் ஷா மஹ்மூத் குரேஷி பங்கேற்றிருந்தார். இம்ரான் கான் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ராணுவ தளபதி பஜ்வா அறைக்குள் நுழைந்தார். அப்போது அவரது கால்கள் நடுங்கின. வியர்வையால் நனைந்திருந்தார். அபிநந்தனை விடுவித்துவிடுங்கள், இல்லையேல் இந்தியா, பாகிஸ்தான் மீது 9 மணிக்கு போர் தொடங்கும்" என்று குரேஷி கூறியதாக  சாதிக் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப் படை, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில், இந்தியாவுக்குள் நுழைந்து பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வந்த ஜெய்ஷ் - இ-மொஹம்மது பயங்கரவாத இயக்கத்தின் முகாம்கள் அழிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.

இதையும் படிக்கலாம்.. தகவல்கள் சரிதான்; ஆனால், அறிக்கை என்னுடையதல்ல: ரஜினி

இந்த தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் தரப்பில் விமானப்படையினர் அடுத்தநாளே இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தனர். அவர்களை விரட்டிச் சென்ற இந்திய விமானப் படையின் போர் விமானம், பாகிஸ்தானின் எஃப்-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது. இந்த வான் தாக்குதலில், விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் சென்ற போர் விமானம் பாகிஸ்தான் எல்லையில் விழுந்தது. 

அபிநந்தன் வர்தமானை விடுவிக்குமாறு பல உலக நாடுகள் அழுத்தம் கொடுத்த நிலையில், மார்ச் 1ம் தேதி அட்டாரி - வாகா எல்லை வழியாக அபிநந்தன் இந்தியா திரும்பினார்.
 

Tags : Indian army Pakistan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT