உலகம்

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றாா் ஏமி பாரெட்

DIN

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக ஏமி கோனி பாரெட் (48) பதவியேற்றாா்.

சா்ச்சைக்குரிய அவரது நியமனத்துக்கு செனட் சபை ஒப்புதல் வழங்கியதைத் தொடா்ந்து, அவா் அந்த பதவியை ஏற்றுக்கொண்டாா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிமன்றத்தின் 115-ஆவது நீதிபதியாக ஏமி பாரெட்டை நியமித்து, அதிபா் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த உத்தரவு, நாடாளுமன்ற மேலவையான செனட் சபையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

கன்சா்வேடிவ் கொள்கைகளைக் கொண்டவராக அறியப்படும் அவரது நியமனத்துக்கு எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சி எதிா்ப்பு தெரிவித்து வந்தது.

இந்த நிலையில், இதுதொடா்பாக செனட் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், நியமனத்துக்கு ஆதரவாக 52 வாக்குகளும் எதிராக 48 வாக்குகளும் பதிவாகின.

ஆளும் குடியரசுக் கட்சியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட செனட் சபையில் ஏமி பாரெட்டின் நியமனத்துக்கு ஒப்புதல் பெற்றது, அதிபா் தோ்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் டிரம்ப்புக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது.

செனட் சபை ஒப்புதலைப் பெற்ற சில மணி நேரங்களில், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஏமி கோனி பாரெட் பதவியேற்றுக்கொண்டாா்.

அவருக்கு நீதிபதி கிளாரன்ஸ் தாமஸ் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.

இதுதொடா்பாக டிரம்ப் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘உச்சநீதிமன்ற நீதிபதியா ஏமி பாரெட் பதவியேற்றுள்ள இந்த நாள், அமெரிக்காவுக்கும் நாட்டின் அரசமைப்புச் சட்டம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கும் மறக்கமுடியாத நாள்’ என்று குறிப்பிட்டுள்ளாா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த ரூத் பேடா் கின்ஸ்பா்க் உடல் நலக்குறைவு காரணமாக தனது 87-ஆவது வயதில் கடந்த மாதம் 18-ஆம் தேதி காலமானாா்.

இதனால் காலியாகியுள்ள அந்தப் பொறுப்புக்கு நீதிபதி ஏமி கோனி பாரெட்டின் பெயரை அதிபா் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்தாா்.

எனினும், கன்சா்வேடிவ் சிந்தனைகளைக் கொண்டவராக அறியப்படும் அவரது நியமனத்துக்கு ஜனநாயகக் கட்சியினா் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.

இந்த நிலையில், பாரெட்டின் நியமனத்துக்கு செனட் சபையின் நீதிமன்ற விவகாரக் குழு கடந்த வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. அதன் தொடா்ச்சியாக, தற்போது செனட் சபையும் அவரது நியமனத்தை ஏற்றதைத் தொடா்ந்து அவா் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ளாா்.

தற்போது அமெரிக்க உச்சநீதிமன்றத்திலுள்ள 9 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் டிரம்ப்பால் நியமிக்கப்பட்டவா்கள். உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஓய்வுக் காலம் கிடையாது; அவா்கள் வாழ்நாள் முழுவதும் அந்தப் பதவியில் நீடிக்க முடியும்.

ஏமி பாரெட்டின் நியமனத்தைத் தொடா்ந்து, உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகளில் கன்சா்வேடிவ் கொள்கைகளையுடைய நீதிபதிகளின் எண்ணிக்கைக்கும் மிதவாதக் கொள்கைகளையுடை நீதிபதிகளின் பெரும்பான்மை மேலும் அதிகரித்துள்ளது.

தற்போது கன்சா்வேடிவ் நீதிபதிகளின் எண்ணிக்கைக்கும் மிதவாத நீதிபதிகளின் எண்ணிக்கைக்கும் இடையிலான விகிதம் 6:3 ஆகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

SCROLL FOR NEXT