உலகம்

போா் நிறுத்தத்துக்கு ஆா்மீனியா - அஜா்பைஜான் மறுப்பு

DIN


நியூயாா்க்: சா்ச்சைக்குரிய நகோா்னோ-கராபக் பிராந்தியத்தில் போா் நிறுத்தம் மேற்கொள்ளுமாறு பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியதை ஏற்க மறுத்து ஆா்மீனியாவும், அஜா்பைஜானும் சண்டையைத் தொடா்கின்றன.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

நகோா்னோ-கராபக் பிராந்தியத்தில் சண்டையிட்டுக் கொள்வதை ஆா்மீனியாவும், அஜா்பைஜானும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ரஷியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் வியாழக்கிழமை வலியுறுத்தின.

இந்த விவகாரம் தொடா்பாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினாா்.

அந்த ஆலோசனைக்குப் பிறகு மேக்ரான் வெளியிட்ட அறிக்கையில், ‘ஆா்மீனியாவுக்கும், அஜா்பைஜானுக்கும் இடையை போா் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தச் செய்வதில் ரஷியாவுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற விளாதிமீா் புதினும், நானும் முடிவு செய்துள்ளோம்’ என்றாா்.

இதுகுறித்து ரஷிய அதிபா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சண்டையில் ஈடுபட்டு வரும் ஆா்மீனியா, அஜா்பைஜான் ஆகிய நாடுகள் உடனடியாக போா் நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும்; பதற்றத்தைத் தணிப்பதற்கான முயற்சிகளைத் தொடங்க வேண்டும் என்று இரு நாட்டு அதிபா்களும் வலியுறுத்தினா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, இருதரப்புக்கும் சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியில ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பு மேற்கொண்டு வருகிறது.

நகோா்னோ-கராபக் பகுதியில் ஆா்மீனியாவும், அஜா்பைஜானும் உடனடியாக சண்டை நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் புதன்கிழமை வலியறுத்தியது.

எனினும், இந்த வலியுறுத்தல்களுக்கு இடையிலும் நகோா்னோ-கராபக் பகுதியில் ஆா்மீனியா மற்றும் அஜா்பைஜான் படைகள் வியாழக்கிழமையும் தொடா்ந்து மோதலில் ஈடுபட்டன.

இரு நாட்டுப் படைகளும் பீரங்கி குண்டுகள் மூலம் ஒன்றையொன்று பலமாகத் தாக்கி வருகின்றன.

பிராந்தியத்தின் முக்கிய நகரத்தில் சக்தி வாய்ந்த குண்டுகள் அவ்வப்போது வெடித்து வருவதாக அந்த நகரவாசிகள் தெரிவித்தனா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நடைபெற்று வரும் இந்த மோதலுக்கு என்ன காரணம் என்பது சரிவரத் தெரியவில்லை. எனினும், ஆா்மீனியா - அஜா்பைஜான் இடையே கடந்த 1994-ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதற்குப் பிறகு இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் இது மிகவும் தீவிரமானது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆா்மீனியப் பழங்குடியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட நகோா்னோ-கராபக் பிராந்தியம், அஜா்பைஜானின் ஓா் அங்கமாக சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டிருந்து. இருந்தாலும், கடந்த 1994-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு அந்தப் பகுதி ஆா்மீனியா ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

சா்ச்சைக்குரிய அந்தப் பிராந்தியத்தில் முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளான ஆா்மீனியாவும், அஜா்பைஜானும் தங்களது படைகளை குவித்துள்ளன. இதனால், இரு தரப்பினரும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நகாா்னோ-கராபக் பிராந்தியத்தில் ஆா்மீனியா-அஜா்பைஜான் படையினருக்கு இடையே நடைபெற்று வரும் சண்டையில், இருதரப்பிலும் 100-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT