உலகம்

சீனாவில் 3 நகரங்களில் புதிதாக கரோனா பாதிப்பு: லட்சக்கணக்கானோருக்கு பரிசோதனை

24th Nov 2020 06:36 AM

ADVERTISEMENT


பெய்ஜிங்: சீனாவின் 3 நகரங்களில் கடந்த வாரம் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதையடுத்து, அந்நகரங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடல், பொது முடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

சீனாவில் தோன்றிய கரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் பரவி கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு கரோனா பாதிப்பு முதலில் கண்டறியப்பட்டதிலிருந்து இதுவரை அங்கு 86,442 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது; 4,634 பேர் இறந்துவிட்டனர். இருப்பினும், அங்கு கரோனா தொற்று ஏறக்குறைய முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

இந்நிலையில், தியான்ஜின், ஷாங்காய், மன்சௌலி ஆகிய 3 நகரங்களில் கடந்த வாரம் சிலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஷாங்காய் நகரில் இருவருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இந்த மாதத் தொடக்கத்தில் கரோனா பாதிப்புக்குள்ளான விமான நிலைய ஊழியர் ஒருவருடன் தொடர்பில் இருந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, பாதிப்புக்குள்ளானவர்கள் பணிபுரிந்த இடத்துடன் தொடர்புடைய நபர்கள் ஏராளமானோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஷாங்காயில் உள்ள புடோங் சர்வதேச விமான நிலைய பணியாளர்கள் 17,719 பேருக்கு திங்கள்கிழமை காலையில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

தியான்ஜின் நகரில் 5 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்நகரைச் சேர்ந்த 22 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

2 லட்சம் மக்கள்தொகை கொண்ட மன்சௌலி நகரில் கடந்த சனிக்கிழமை இருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்நகரில் வாழும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கரோனா மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில், குறிப்பிட்ட இடங்களில் பொது முடக்கம், பள்ளிகள் மூடல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT