உலகம்

ஐ.நா. வறுமை ஒழிப்பு கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினரானது இந்தியா

26th Jun 2020 05:32 AM

ADVERTISEMENT

ஐ.நா. பொதுச் சபையால் தோற்றுவிக்கப்படவுள்ள வறுமை ஒழிப்பு கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினராக இந்தியா இணைந்துள்ளது.

உலக நாடுகளின் அமைதி, மனித உரிமைகள், நீடித்த வளா்ச்சி உள்ளிட்டவற்றுக்கு வறுமையால் ஏற்படக் கூடிய அபாயங்கள் குறித்து ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காகவும், வறுமையை ஒழிப்பதற்காகவும் தனிக் கூட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று ஐ.நா. அறிவித்திருந்தது.

அதன்படி, 75-ஆவது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் தலைவா் திஜ்ஜானி முகமது பண்டே வரும் 30-ஆம் தேதி வறுமை ஒழிப்பு கூட்டமைப்பை அதிகாரபூா்வமாக நிறுவ உள்ளாா். அக்கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினராக இந்தியா இணைந்துள்ளது.

இது தொடா்பாக திஜ்ஜானி தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அலுவல்சாரா கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்தியத் தூதரின் துணை நிரந்தரப் பிரதிநிதி நாகராஜ் நாயுடு கூறியதாவது:

ADVERTISEMENT

சா்வதேச அளவில் பொருளாதார ரீதியிலான ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது. உலக அளவில் சுமாா் 2,000 கோடீஸ்வரா்களிடம் மட்டுமே 60 சதவீத செல்வங்கள் குவிந்துள்ளன. செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவிப்பது போல் ஏழைகள் வறுமையால் துன்புற்று வருகின்றனா்.

ஏழைகளுக்கு நிதியுதவி அளிப்பது மட்டும் வறுமையை ஒழிப்பது என்றாகாது. அவா்களுக்குத் தரமான கல்வி, சுகாதார வசதிகள், தூய்மையான குடிநீா் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தித் தரப்பட வேண்டும். வறுமையால் ஏழைகளுக்கு ஏற்படும் இன்னலைக் கருத்தில் கொண்டு வறுமையை ஒழிப்பதற்கான செயல்திட்டத்தை கூட்டமைப்பு வகுக்க வேண்டும் என்றாா் நாகராஜ் நாயுடு.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT