உலகம்

ஆமதாபாத்தில் ஒரு கோடிப் பேர் வரவேற்கப் போகிறார்கள்: டிரம்ப் தம்பட்டம்

21st Feb 2020 05:56 PM

ADVERTISEMENT


வாஷிங்டன்: இந்தியா செல்லும் போது, ஆமதாபாத்தில் என்னை ஒரு கோடிப் பேர் வரவேற்கப் போகிறார்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தம்பட்டம் அடித்துக் கொண்டுள்ளார்.

இந்தியாவுக்கு முதல் முறையாக வருகை தரப் போகும் தனக்கு, ஆமதாபாத்தில் கிட்டத்தட்ட 1 கோடி இந்திய மக்கள் வரவேற்பு அளிக்கப் போவதாக, இந்தியப் பிரதமர் மோடி தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - மெலனியா தம்பதி பிப்ரவரி 24 மற்றும் 25ம் தேதிகளில் இந்தியா வருகை தர உள்ளனர்.

இந்த பயணம் குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் டிரம்ப், நாங்கள் இறங்கும் விமான நிலையத்தில் இருந்து, விழா நடைபெறும் பகுதி வரை சுமார் 70 லட்சம் மக்கள் எங்களை வரவேற்க உள்ளனர். எனவே நான் இந்தப் பயணம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கிறேன். நிச்சயம் எல்லோரும் சந்தோஷப்படுவோம் என்று நினைக்கிறேன் என்று கூறியிருந்தார்.

ADVERTISEMENT

ஆனால், இந்த தகவலில் வெறும் 30 லட்சத்தை கூடுதலாகச் சொல்லி தற்போது அமெரிக்க மக்களின் புருவங்களை உயர்த்த வைத்துவிட்டார்.

வியாழக்கிழமை கொலரடோவில் பேசிய டொனால்ட் டிரம்ப், "நான் கேள்விப்பட்டேன் சுமார் ஒரு கோடி மக்கள் என்னை வரவேற்கப் போகிறார்கள் என்று. இந்த உலகிலேயே மிகப்பெரிய விளையாட்டு மைதானத்தின் திறப்பு விழாவுக்குச் செல்லும் எனக்கு, 60 லட்சம் முதல் 1 கோடி பேர் வரை வரவேற்பு அளிக்கவிருப்பதாகக் கூறினார்கள்" என்று பேசியுள்ளார்.

ஆனால், இந்த கருத்து குறித்து ஆமதாபாத் உயர்மட்ட அதிகாரி கூறுகையில், ஆமதாபாத் நகரின் ஒட்டுமொத்த மக்கள் தொகையே வெறும் 70 லட்சம்தான் என்று உண்மையைப் போட்டு உடைத்துள்ளார்.

விமான நிலையத்தில் இருந்து விளையாட்டு மைதானம் வரையிலான 22 கிலோ மீட்டர் தொலைவுக்கு வெறும் ஒன்று அல்லது இரண்டு லட்சம் மக்கள் மட்டுமே வரவேற்புத் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பட்டவர்த்தனமாகக் கூறிவிட்டார்.

அமெரிக்க அதிபர் சொல்லும் தகவலுக்கும் இவர் கொடுக்கும் தகவலுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருப்பதை நம்மால் உணர முடிகிறது.
 

Tags : trump
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT