உலகம்

புதிய நம்பிக்கையூட்டும் சின் ஃபாதி சந்தையின் திறப்பு

14th Aug 2020 06:52 PM

ADVERTISEMENT

 

பெய்ஜிங்கில் பல மாதங்கள் புதிய தொற்று எதுவும் இல்லாதிருந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் திடீரென கொவைட்-19 நோய்த்தொற்று மீண்டும் பரவத் தொடங்கியது.

அது, சின் ஃபாதி (xin fadi) என்ற மொத்த விற்பனை சந்தையிலிருந்து பரவியது. உடனே, சீனாவில் இரண்டாவது கரோனா வைரஸ் அலை தொடங்கி விட்டது என்று பிற நாட்டு ஊடகங்கள் எழுதத் தொடங்கின. ஆனால், பெய்ஜிங் மாநகராட்சி இயந்திரம் மின்னல் வேகத்தில் இயங்கியது. மற்ற நாடுகள் நினைத்து பார்த்திர முடியாத நடவடிக்கைகள் வெகு விரைவாக மேற்கொண்டது.

அதன் காரணமாக, ஒரு சில நாள்களுக்குள்ளேயே நோய் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்று பெய்ஜிங் மாநகராட்சி அறிவித்தது. சிறிது அச்சத்தில் இருந்த மக்களுக்கு அந்தச் செய்தி பெரும் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அளித்தது.

ADVERTISEMENT

கடந்த இரண்டு மாதங்களாக சின் ஃபாதி சந்தை மூடப்பட்டிருந்தது. இரண்டாவது முறை வைரஸ் பரவிய பிறகு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 335 பேரும் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினர்.

இந்த நிலையில், கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு, சின் ஃபாதி சந்தை ஆகஸ்ட் 15ஆம் நாள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. சந்தையில் வணிகத்தில் ஈடுபடக் கூடியவர்களுக்கு மட்டுமே அனுமதி; சந்தைக்குள் யார் சென்றாலும் முதலில் முகம் ஸ்கேன் செய்யப்படும், அத்துடன் அவர்களின் உடல் வெப்பநிலை கட்டாயம் பரிசோதிக்கப்படும்; தனி நபர் வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை என பல விதிமுறைகளுடன் சந்தை திறக்கப்பட உள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் சந்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் நுண்ணுயிர் நீக்கப் பணி முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சந்தையைச் சுற்றி இருக்கும் கட்டிடங்களில், நோயைப் பரப்பக் கூடும் வகையிலான கட்டிடம் என்று சந்தேகப்படும்படியானவை அகற்றப்பட்டன. இதன்மூலம் நோய் பரவல் அச்சுறுத்தல் குறைவதுடன் போக்குவரத்து நெரிசலும் குறையும்.

சின் ஃபாதி சந்தையில் நோய்தொற்று பரவியதுபோல்தான், சென்னையின் கோயம்பேடு காய்கறி சந்தையிலும் சில மாதங்களுக்கு முன்பு பரவியது. தற்போது, தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை பெருமளவு அதிகரிப்பதற்கான காரணமாக கோயம்பேடு சந்தை அமைந்து விட்டது. கோயம்பேட்டுச் சந்தைக்கு பிற மாவட்டங்களில் இருந்து வந்து-சென்றவர்கள் மூலம் பல்வேறு மாவட்டங்களிலும் நோய்தொற்று வேகமாகப் பரவியது.

ஆனால், அதுபோன்று பெய்ஜிங்கின் சின் ஃபாதி சந்தை அமையவில்லை. அதற்குக் காரணம்: வூஹான் மாநகரில் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் பெய்ஜிங் மாநகாராட்சி துரிதமாகச் செயல்பட்டது; பாதிக்கப்பட்டோரைக் கண்டறிந்து தனிமைப்படுத்தியது; குறுகிய நாள்களில் லட்சக்கணக்கானோருக்கு நியூக்ளிக் சோதனை மேற்கொண்டது; மக்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டது. 

1988ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்ட சின் ஃபாதி சந்தையின் மொத்த பரப்பளவு 170 கால்பந்து மைதானங்களுக்குச் சமமாகும். இதனாலேயே, இதனை ‘மிகப்பெரிய காய்கறிக் கூடை’ என்று மக்கள் வாஞ்சையுடன் அழைத்து வருகின்றனர். சீனாவில் இருக்கும் 4,600-க்கும் அதிகமான மொத்த விற்பனை சந்தைகளில் சின் ஃபாதி சந்தை முதல் இடத்தில் உள்ளது சுட்டிக்காட்டத் தகுந்தது. அத்தகைய தகுநிலையைக் கொண்ட சின் ஃபாதி சந்தையின் திறப்பு மக்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT