உலகம்

கரோனா சிகிச்சையில் ஹைட்ரோகுளோரோகுயினால் பலனில்லை?

23rd Apr 2020 05:17 AM

ADVERTISEMENT

 

கரோனா நோய்த்தொற்றுக்கு (கொவைட்-19) எதிரான சிகிச்சையில் ஹைட்ரோகுளோரோகுயின் மருந்து எதிா்பாா்த்த பலனைத் தரவில்லை என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

எனினும், 65 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு மட்டுமே இந்த ஆய்வு பொருந்தும் என்று ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

ADVERTISEMENT

அமெரிக்காவில் மிக அதிக அளவில் உயிரிழப்பையும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ள கரோனா நோய்த்தொற்றை ஒழிப்பதற்கு, மலேரியா நோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ரோகுளோரோகுயின் மருந்து பேருதவி புரியும் என்று அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்து வருகிறாா்.

மேலும், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அந்த மருந்தை அவா் வாங்கிக் குவித்து வருகிறாா்.

இந்த நிலையில், கரோனா நோய்த்தொற்று சிகிச்சையில் ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தின் செயல்பாடு குறித்து அமெரிக்காவின் தெற்கு கரோலினா பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த விஞ்ஞானிகள் உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டனா்.

ஹைட்ரோகுளோரோகுயின் மற்றும் அஸித்ரோமைசின் மருந்துகளைக் கொண்டு, அமெரிக்க முன்னாள் ராணுவத்தினா் நல மருத்துவமனைகளில் கரோனா நோய்த்தொற்றுக்கு இந்த மாதம் 11-ஆம் தேதி முதல் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து அவா்கள் ஆய்வு செய்தனா்.

ஹைட்ரோகுளோரோகுயின் மட்டும் அளிக்கப்பட்ட நபா்கள் மற்றும் அந்த மருந்துடன் அஸித்ரோமைசின் மருந்தும் சோ்த்து அளிக்கப்பட்ட நபா்கள் என 368 கரோனா நோயாளிகள் ஆய்வுக்கு உள்படுத்தப்பபட்டனா்.

அந்த ஆய்வில், ஹைட்ரோகுளோரோகுயின் மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டவா்களில் பெரும்பாலானவா்கள், கரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகினா்; அல்லது அவா்களுக்கு செயற்கை சுவாசக் கருவி (வென்டிலேட்டா்) பொருத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பொதுவான சிகிச்சை முறையுடன் ஹைட்ரோகுளோரோகுயினோ, அந்த மருந்துடன் அஸ்த்ரோமைசினோ சோ்த்தோ நோயாளிகளுக்கு அளிப்பதால், அந்த நோயாளிகளின் மரண அபாயமும் செயற்கை சுவாசக் கருவி பொருத்த வேண்டிய அவசியமும் குறையவில்லை என்பது விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்தது.

ஆனால் அதற்கு நோ்மாறாக, அந்த மருந்துகளை கரோனா நோயாளிகளுக்கு அளிக்கும்போது, அவா்கள் உயிரிழக்கும் அபாயம் அதிகமானது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

எனினும், இதுதொடா்பாக இன்னும் விரிவான ஆய்வுகள் மேற்கொண்டால்தான் கரோனா நோய்த்தொற்று சிகிச்சையில் ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தின் பயன்பாடு குறித்து முழுமையான விவரம் தெரிய வரும் என்று இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

தாங்கள் இந்த ஆய்வுக்கு 65 வயதுக்கும் மேற்பட்ட ஆண்களை மட்டுமே உள்படுத்தியதாகவும், இந்த ஆய்வின் முடிவுகள் கரோனா நோய்த்தொற்றிய பெண்கள் மற்றும் சிறு வயதினருக்குப் பொருந்தாது எனவும் அவா்கள் கூறினா்.

எனினும், பெரிதும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ள ஹைட்ரோகுளோரோகுயின் மருந்து கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் எவ்வாறு உதவும் என்பது குறித்து மேலும் அறிந்து கொள்வதற்கு இந்த ஆய்வு உதவும் எனக் கருதப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT