வெள்ளிமணி

வேதம் தமிழ் செய்தவனின் திருநாள் திருவிழா

தினமணி


திருநெல்வேலி  மாவட்டம்  திருக்குருகூரில்  வேளாளர் குலத்தைச் சேர்ந்த  மாறன்காரி- திருப்பதி சாரத்து உடைய நங்கையும் மணம் முடிந்து இருவரும்  குருகூருக்குத்  திரும்பும் வழியில்  திருக்குறுங்குடியில் நம்பியைத் தொழுது புத்திரப் பேறு  வேண்டிக் கொண்டனர்.  அன்றிரவு  கனவில்  குறுங்குடி  நம்பி  தோன்றி  தாமே  அவர்களுக்கு  மகனாகப்  பிறக்கப் போவதாக அருளினார்.  பின்னர் உடைய நங்கை கருவுற்றார். 

"ஆன்மாக்களின் உள்ளத்து இருள் நீக்கும் ஞான சூரியன்'  என நம்மாழ்வார் அவதரித்து அருளினார். இந்த நிகழ்வை குரு பரம்பரைப் பிரபாவம் வகுளபூஷண பாஸ்கரோதயம் உண்டாய்த்து  என்று பேசுகிறது.

பிறந்தது முதல் சாதாரண மானிடக் குழந்தைகள் போல்  "முத்தனைய முறுவல் செய்து மூக்குறிஞ்சி முலை உண்ணாதே'  இருந்தது.  இந்த நிலையைக் கண்டு கலங்கிய பெற்றோர் குருகூரில் எழுந்தருளிய ஆதிபிரான் சந்நிதி முன்பு குழந்தையை இட்டு வேண்டி நின்றனர்.

குழந்தைக்கு "மாறன்' என்று பெயரிட்டு பின்பு  கோயிலில் இருக்கும் திருப்புளிய மரத்தடியிலே பொன்னால் செய்த தொட்டிலில் கிடத்தி தொழுது நின்றார்கள்.ஆழ்வார் புளியமரத்தடியில் 16 ஆண்டுகள் வரையிலும் கண் திறக்காமல் எதுவும் பேசாமல் பெருமானைச் சிந்தித்தபடி இருந்தார்.

ஆழ்வாருக்கு பல ஆண்டுகள் முன்பே பிறந்து தல யாத்திரையாக வடநாடு சென்றிருந்த மதுரகவி,  அயோத்தியில் இருந்தபோது தெற்கே ஒரு தெய்வப் பேரொளியைக் கண்டார். அதைப் பின்பற்றி வந்த அவர் ,இறுதியில் குருகூரில் திருப்புளியடியில் வீற்றிருந்த ஆழ்வார் சந்நிதிக்கு வந்து சேர்ந்தார்.

கண்மூடி மெளனத்தில் நிச்சலனமாய் இருந்த ஆழ்வாரைக் கண்டு வியந்து, மதுரகவி அவரை நோக்கி "அணு உருவாகிய ஆத்மா அறிவற்ற உடலில் கிடந்தால் எதை அனுபவித்து எங்கே கிடக்கும்?' என்ற பொருளில்  "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?'  என்று கேட்டார். பேசாமல் கிடந்த ஆழ்வாரும், "அந்த உடலிலேயே இருந்து இன்பத் துன்பங்களை அனுபவித்து அங்கேயே கிடக்கும் என்ற பொருளில் அத்தைத் தின்று அங்கே கிடக்கும்'  என திருவாய்மலர்ந்தார். மதுரகவி "இவரே நம்மை ஆளவந்த குருநாதர்' என்று கருதி "தேவு மற்றறியேன்' என்று ஆழ்வார் குறித்துப் பாடினார்.

உடன் நாராயணன் பிராட்டியோடு பெரிய திருவடியாகிய கருடாழ்வார் மீது தோன்றி ஆழ்வார்க்கு மயர்வற மதிநலம் அருளினான். ஆழ்வாரும் பெருமானுடைய அனைத்து கல்யாண குணங்களையும் அனுபவித்து, அவன் அருளை அழகிய தமிழில் பாடி அருளினார்.  திருவாய்மொழியில் 1102 , திருவிருத்தத்தில்100,  திருவாசிரியம்  8 ,  பெரிய திருவந்தாதி 87 பாசுரங்கள் என உள்ளன.

நம்மாழ்வார் 35 ஆண்டுகள் வாழ்ந்தார் என்பர்.  அவர் மறைந்த பிறகு  பூத உடலை திருப்புளியின் அடியில் பள்ளிப்படுத்தி  விக்கிரகம் செய்து சந்நிதி உண்டாக்கி விழாக்கள் எடுத்து சிறப்பித்தனர்.

நம்மாழ்வார் 36 திவ்ய தேசங்களைப் பாடியுள்ளார். திருப்புளியடியில் மரத்தைச்சுற்றியுள்ள சுவரில் 36 திவ்ய தேச பெருமான்களின் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 

வணங்கிய கைகளோடு இருக்கும் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரியில் சின்முத்திரையோடு ஞான உபதேசம் செய்யும் கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

வைணவத்தில் கோயில் என்றாலே ஸ்ரீரங்கம், ஆழ்வார் என்றாலே நம்மாழ்வார்தான்.  அவர் பெயரால் தான் திருக்குருகூருக்கு "ஆழ்வார்திருநகரி' என்ற பெயர் வழங்கி வருகிறது.திருக்குருகூர்  திருவுடையநகரமாகிஆழ்வார்திருநகரி என்றாகியது.  

ராமாநுஜர்  நிறுவிய வைணவ பக்தி,  தத்துவ இயக்கம் வடநாடு சென்று, மாபெரும் பக்தி இயக்கமாக உருவெடுத்தது.  நாம தேவர், சைதன்யர் என்று பலர் தோன்றி, அதனை வளர்த்தெடுத்தனர். இந்த எழுச்சிக்கு வித்திட்ட ராமாநுஜர், விசிஷ்டாத்வைதத்திற்கான தத்துவக் கூறுகளை, நம்மாழ்வாரிடமிருந்தே பெற்றிருந்தார்.

இவருக்கு "மாறன் சடகோபன்' என்ற பெயரும்  நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் "வேதம் தமிழ் செய்த மாறன்" என்றும் பெயருண்டு.  பராங்குசன் ,வகுளாபரணன் , குருகைப்பிரான், குருகூர் நம்பி திருவாய்மொழி பெருமாள்,  முனி வேந்து , ஞான தேசிகன், ஞான பிரான்,   உதய பாஸ்கரர், வகுள பூஷண பாஸ்கரர், ஞானத் தமிழரசு,  தெய்வ ஞானக் கவி, குழந்தை முனி போன்ற 35 திருநாமங்களும் உண்டு. கண்ணிநுண்சிறுத்தாம்பு, வைணவ சமயத்தில் நம்மாழ்வாரைப் போற்றி மதுரகவியாழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும். 

வைகாசி விசாகம் நம்மாழ்வாரின் திருவவதார திருநட்சத்திரமாகும் . இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா மே 24-ஆம் தேதி துவங்கி ஜூன்  7 வரை நடைபெற இருக்கிறது. 

ஜூன்1-இல் திருத்தேரும், 2-இல் தாமிரவருணி நதியில் நம்மாழ்வார் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

தொடர்புக்கு:  04639273607;  9940464754.    
- இரா.இரகுநாதன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

SCROLL FOR NEXT